ரேஷன் கடைகளில் பயோமெட்ரிக் முறையை நிறுத்தி, பழைய முறையில் பொருட்கள் வழங்க வேண்டும் என, பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.
தமிழகத்தில் சுமார் 2,11,87,625 ரேஷன் கார்டுகள் உள்ளன. இந்த கார்டுகளுக்கு அரிசி, கோதுமை, சர்க்கரை, பாமாயில், துவரம் பருப்பு உள்ளிட்டவை ரேஷன் கடைகள் மூலம் வழங்கப்படுகின்றன. மக்களுக்கு ரேஷனில் வழங்கப்படும் பொருட்கள் வெளிச் சந்தையில் கூடுதல் விலைக்கு விற்கப்படுவதாக புகார் எழுந்தது. இதை தடுக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன் அடிப்படையில் குடும்ப தலைவர் அல்லது குடும்பத்தில் உள்ள உறுப்பினர்கள் மட்டும் ரேஷன் கடைகளுக்கு சென்று வாங்கும் விதமாக பயோமெட்ரிக் முறை அமல்படுத்தப்பட்டுள்ளது.
ஆனால், பயோமெட்ரிக் முறையில் கைரேகைகள் பதிவு செய்யும் இயந்திரந்தில், பல இடங்களில் கைரேகைகள் சரிவர பதிவாகவில்லை. இதனால், ஆதார் அட்டையில் மீண்டும் கைரேகையை பதிவுசெய்து கொண்டு வரும்படி ரேஷன் கடை ஊழியர்கள் அறிவுறுத்துகின்றனர். ஆதார் மையத்தில் கைரேகையை பதிவு செய்யச் சென்றால், அதற்கு ரூ.100 வசூலிக்கப்படுகிறது. அதன்பின்பு மீண்டும் ரேஷன் கடைக்கு சென்றால், கைரேகை பதிவாகவில்லை என்ற பதிலே பெரும்பாலும் வருகிறது. இதன் காரணமாக வேலை இழப்பு, பண விரயம், அலைச்சல் ஏற்படுகிறது என, பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.
இதற்கிடையே நாளை (10-ம் தேதி) முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட உள்ளதால், அரசு பயோமெட்ரிக் முறையை நிறுத்தி வைக்க வேண்டும். கரோனா ஊரடங்கு காலம் முடியும் வரை, ரேஷன் கார்டு எண் அடிப்படையில் பொருட்கள் வழங்க வேண்டும் எனவும் மக்கள் வலியுறுத்தி உள்ளனர்.
இதுகுறித்து கரிசல் பூமி விவசாயிகள் சங்கத் தலைவர் அ.வரதராஜன் கூறும்போது, ‘ ரேஷன் கார்டுடன், ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என அரசு கூறியதை பொதுமக்கள் செயல்படுத்தினர். கைரேகை பதிவு செய்து மக்கள் ஆதார் எண் பெற்றுள்ளனர். ஆனால், அந்த கைரேகை ரேஷன் கடைகளில் உள்ள பயோ மெட்ரிக் இயந்திரத்தில் வருவதில்லை. இதனால், கைரேகையை மீண்டும் ஆதாரில் பதிவு செய்யும்படி ரேஷன் கடை ஊழியர்கள் கூறுகின்றனர். இதுபோல் பலமுறை கிராம மக்கள் அலைக்கழிக்கப்படுகின்றனர். எனவே, கரோனா ஊரடங்கு காலம் முடியும் வரை, ரேஷன் கடைகளில் பயோமெட்ரிக் முறையை நிறுத்தி வைத்து, பழைய முறையிலேயே பொருட்கள் வழங்க வேண்டும்,’ என்றார்.