முதல் 10 பந்தில் ஒரு ரன் கூட இல்லை; ஆனாலும் சிஎஸ்கேவுக்கு கோப்பையை வாங்கித் தந்த ஷேன் வாட்சன்
ஐபிஎல் தொடரில் சிறந்த இன்னிங்ஸ்களில் ஒன்றாக 2018 இறுதிப்போட்டி பார்க்கப்படுகிறது. ஹைதராபாத் – சென்னை அணிகள் மோதிய அந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஹைதராபாத் அணி 6 விக்கெட்டுகளை இழந்து 178 ரன்கள் அடித்தது.
179 ரன்களை வெற்றி இலக்காக கொண்டு களமிறங்கிய சென்னை அணியில் டூ பிளசிஸ், ஷேன் வாட்சன் ஆட்டத்தை தொடங்கினார். சிஎஸ்கே அணி மோசமான தொடக்கத்தை கொண்டிருந்தது. டூ பிளசிஸ் 10 ரன்னில் ஆட்டமிழந்தார். ஷேன் வாட்சன் முதல் 10 பந்துகளில் ஒரு ரன் கூட அடிக்கவில்லை.
முதல் 6 ஓவரில் வெறும் 35 ரன்களை மட்டுமே அடித்தது சென்னை அணி. பின்னர் ருத்ரதாண்டவம் ஆடிய ஷேன் வாட்சன் 33 பந்துகளில் அரை சதமும், 51 பந்துகளில் சதமும் அடித்தார். ஐபிஎல் வரலாற்றில் இறுதிப்போட்டியில் அடிக்கப்பட்ட 2 ஆவது சதம் மற்றும் ஐபிஎல் வரலாற்றில் இறுதிப்போட்டியில் சேஸிங்கின் போது அடிக்கப்பட்ட முதல் சதம் இதுவாகும்.
பின்னர் 18.3 ஓவர்களிலே இலக்கை எட்டி வெற்றி பெற்றது சிஎஸ்கே அணி. ஷேன் வாட்சன் 57 பந்துகளில் 117 ரன்கள் அடித்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் களத்தில் நின்றார்.
2 வருட தடைக்குப்பின் சிஎஸ்கே அணி இந்த தொடர் மூலம் தான் மீண்டும் ஐபிஎல்லில் கலந்துகொண்டது.