சிறுகதை

ரம்ஜான் துணி

152views

ப்போது எனக்கு வயது 8 இருக்கும். 3ஆம் வகுப்பு படித்துக் கொண்டிருந்ததாய் ஞாபகம்.

கரூர் அரவாக்குறிச்சிக்கு அருகில் உள்ள பள்ளப்பட்டி என்ற கிராமத்தில் உள்ள பேரூராட்சி அலுவலகத்தில் தலைமை எழுத்தராக அப்பா பணியாற்றிக் கொண்டிருந்தார். அரசுப்பணியில் மிக நேர்மையான மனிதராக இருந்த அப்பா 6 பிள்ளைகளையும் படிக்க வைத்துக் கொண்டிருந்ததால் மிக ஏழ்மை.

அந்த மாத சம்பளத்தை அப்படியே அப்பா அவரது நண்பர் ஒருவருக்கு (ராஜாராம் என்று ஞாபகம்) அவரின் கஷ்டத்திற்கு கொடுத்து விட்டதால் ரம்ஜான் பண்டிகைக்கு எங்கள் எவருக்குமே புதுத்துணி எடுக்கவில்லை..

விடிந்தால் நாளை ரம்ஜான். அப்பாவின் அலுவலகத்தில் வேலை செய்து கொண்டிருந்த துப்புரவு தொழிலாளி அன்று இறந்துவிட்டதால் கருணை அடிப்படையில் அந்த தொழிலாளியின் மகனுக்கு அரசு வேலைக்கான உத்தரவை வாங்கி வருவதற்கு மாவட்ட ஆட்சித்தலைவரை சந்திப்பதற்காக அப்பா திருச்சிக்கு சென்றிருந்தார்.

அன்று வெள்ளிக்கிழமை பள்ளிவாசலில் ஜும்மா சிறப்புத் தொழுகை. தொழுகை நடத்தும் ஹஜ்ரத், பயான் (சொற்பொழிவு) செய்து கொண்டிருந்தார் :

“நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மதினாவில் ரம்ஜான் பண்டிகை அன்று தொழுவதற்காக பள்ளிவாசலை நோக்கி போய் கொண்டிருக்காங்க.

அப்ப எல்லாருமே “அல்லாஹு அக்பர்! அல்லாஹு அக்பர்!” (இறைவன் மகாப்பெரியவன்! இறைவன் மகாப்பெரியவன்!” என்று சொல்லிக் கொண்டே பள்ளியை நோக்கி போய்கிட்டு இருக்காங்க.

எல்லாருமே புதுத்துணி அணிந்து, அத்தர் வாசனை திரவியங்கள் பூசி போய்க்கிட்டு இருக்காங்க.

தெருவில் போறவழியில ஒரு சிறுவன் எந்தவிதமான ஆர்ப்பாட்டமும் இல்லாமல் ஒரு இடத்தில் உட்கார்ந்து தேம்பி அழுதுகிட்டு இருந்ததைப் பார்த்து இருக்காங்க..

உடனே நபிகள் நாயகம் அவர்கள் தன்னுடன் வந்தவர்களைப் பார்த்து “நீங்க எல்லாருமே முன்னாடி போங்க”ன்னு சொல்லிட்டு, அவங்க அந்தப் பையன்கிட்டபோய் “என்ன தம்பி? ஏம்மா அழுவறீங்க?”ன்னு கேட்டு இருக்காங்க.

அப்ப அந்தப் பையன் இவங்களைப் பார்த்ததும் இன்னும் கொஞ்சம் அதிகமாக அழுதிருக்கிறான்.

“ஏன் அழுவறீங்க தம்பி…? சொல்லுங்க..”ன்னு அக்கறையோடு நபிகள் கேட்டாங்க.

அதுக்கு அந்தப் பையன் “ஒண்ணுமில்ல நாயகமே… நீங்க தொழப்போங்க. நான் அப்புறம் வர்றேன்”ன்னு பதில் சொல்லி இருக்கான்.

“இல்லம்மா… என்னாச்சு…? சொல்லுங்க…”ன்னு நாயகம் மறுபடியும் அன்போடு கேட்க..

அதுக்கு அந்தப் பையன் சொன்னான் : “என்னோட வாப்பாவோட (தந்தை) கையைப் பிடிச்சுக்கிட்டுத்தான் எப்பவுமே நான் தொழுவப்போவேன். ஆனா இப்ப என்னோட வாப்பா இல்லை… உஹதுப்போர்ல இறந்து போய்ட்டாங்க”ன்னு சொல்லி இருக்கான்.

“இப்ப கையைப் பிடிச்சுக்கிட்டு போவ எனக்கு யாருமே இல்லை.. நான் அனாதையாய் நிற்கிறேன்.. ரம்ஜான் பண்டிகை வர்றப்ப எல்லாம் எங்க வாப்பா ஞாபகம் அதிகமா எனக்கு வருது”ன்னு சொல்லிட்டு அந்தப் பையன் கேவிக்கேவி அழுதிருக்கான்.

உடனே நபிகள் நாயகம் அவர்கள் அந்தப் பையனின் கண்ணீரைத் துடைத்து, அவன் தலையை வருடி “நீ அனாதை இல்லை… கவலைப்படாதீங்க… இனிமே நான் தான் உனக்கு வாப்பா. ஆயிஷா உங்களுக்கு அம்மா. பாத்திமா உன் சகோதரி”ன்னு ஆறுதல் சொல்லி இருக்காங்க.

அருமை நபிகள் அந்த சிறுவனை தனது வீட்டிற்கு அழைத்துச் சென்று தனது மனைவியிடம் “ஆயிஷா! உனக்கு ஒரு மகனை கொண்டு வந்திருக்கிறேன்” என்று சொன்னாங்க.

நபிகள் தனது மகள் பாத்திமாவிடம் “பாத்திமா! உனக்கு ஒரு சகோதரனை அழைத்து வந்திருக்கிறேன்” என்றும் சொன்னாங்க.

உடனே அந்த சிறுவனுக்கு இனிப்புக்கள் ஊட்டி, புதுத்துணி அணிவித்து தொழுகைக்கு அழைத்துச் சென்றார்கள்.

தொழுகை முடிந்தவுடன் நபிகள் அந்தச் சிறுவனை மேடையில் தூக்கிக் காண்பித்து “இது என்னோட பையன்”ன்னு சொல்லி இருக்காங்க.

உடனே அந்தப் பையன் ரொம்ப மகிழ்ச்சி அடைஞ்சானாம்”

அதைக் கேட்ககேட்க என் கண்ணீர் பொங்கி வந்தது.

“நான் நபிகள் நாயகம் காலத்தில் வாழ்ந்திருக்கக்கூடாதா…? அந்த அனாதைச் சிறுவனுக்கு நபிகள் நாயகம் பெருநாள் துணி கொடுத்ததுபோல்… அல்லாஹ் யாரையாவது அனுப்பி எனக்கு புதுத்துணி தர மாட்டானா…?” என்று ஏக்கமாய் இருந்தது. அழுகை அழுகையாய் வந்தது.

தொழுகை முடிந்து மக்கள் சென்றபிறகும் நான் செல்லாமல் உட்கார்ந்த இடத்தில் இருந்தே அல்லாஹ்விடம் முறையிட்டுக் கொண்டிருந்தேன்.

“அல்லாஹ்! என் தந்தை நல்லவர்! பிரியமானவர்! எல்லாருக்கும் நல்லது நினைப்பவர்! எல்லாருக்கும் நல்லதே செய்பவர்! அப்படிப்பட்ட எங்களுக்கு ஏன் கஷ்டம் கொடுக்கிறாய்…?” என்று உரிமையோடு அல்லாஹ்விடம் நியாயம் கேட்டுக் கொண்டிருந்தேன்.

அப்போது என் பின்னால் இருந்து யாரோ என் முதுகைத் தடவிக் கொடுத்தார்கள்.

திரும்பிப் பார்த்தேன். கருப்புத் தொப்பி அணிந்த தாத்தா !

தமிழ் பாடத்தில் வரும் காயிதே மில்லத் சாஹிப் போல் கருப்புத்தொப்பி, கண்ணாடி அணிந்த தோற்றம், கையில் கைத்தடி.

என் கண்ணில் வழிந்து கொண்டிருந்த கண்ணீரை தன் கைக்குட்டையால் துடைத்தவர், என்னை அழைத்துக் கொண்டு பள்ளியைவிட்டு வெளியே வந்து, அவரது வீட்டிற்கு அழைத்துச் சென்றார்.

அவர் மிகப்பெரிய பணக்காரர் என்பது அந்த வீட்டைப் பார்த்ததும் தெரிந்தது.

அவரது மனைவியும், மகளும் வந்து அவருக்கு சலாம் சொன்னார்கள்.

அவர்களுக்கு பதில் சலாம் சொல்லிய இவர் அவர்களிடம் ஏதோ சொல்ல அடுத்த நிமிடம் ஒரு தட்டு நிறைய இனிப்பு பலகாரங்களை கொண்டு வந்தார்கள்.

என்னை அவர் உள்ளே இருந்த ஒரு அறைக்கு அழைத்துச் சென்றார்.

அந்த அறையில் நூலகத்தில் இருப்பதுபோல் இரும்பு அடுக்குகள் இருந்தன. அதில் வரிசையாக கைலிகள், சட்டைகள், சேலைகள் அடுக்கிவைக்கப்பட்டிருந்தன ஜவுளி கடையில் இருப்பதைப்போல்.

என்னை அவர் அங்கிருந்த சிம்மாசனம்போல் இருந்த தன்னுடைய சாய்வு நாற்காலியில் தூக்கி உட்காரவைத்தவர், என் மடி மீது அந்த பலகாரம் நிறைந்த தட்டை வைத்து, சாப்பிடச் சொன்னார்.

ஆசையோடு நான் சாப்பிட்டுக் கொண்டிருக்கும்போதே என்னிடம் அவர் “உங்க வீட்டில் மொத்தம் எத்தனை பேர்? உனக்கு எத்தனை தம்பி? எத்தனை அண்ணன்? எத்தனை அக்கா? எத்தனை தங்கச்சி” என்று கேட்டபடியே எல்லாருக்கும் அங்கிருந்த புதுத்துணிகளில் ஒவ்வொன்றாய் எடுத்து ஒரு மஞ்சள் பையில் போட்டு என்னிடம் கொடுத்தார்.

பலகாரத்தட்டை கீழே வைத்துவிட்டு பையை தூக்கிப் பார்த்தேன். செம கனமாய் இருந்தது.

“தூக்க முடியலையே தாத்தா” என்றேன்.

காந்தித்தாத்தாவைப்போல் பொக்கைவாய் தெரிய சிரித்த அந்த தாத்தா, தனது டிரைவரை அழைத்து அவரிடம் அந்தப் பையைக் கொடுத்து “இந்தப் பையனை காரில் கூட்டிச் சென்று அவன் வீட்டில் விட்டு வா!” என்றார்.

குஷியோடு எழுந்த நான் டிரைவரோடு செல்லும்போது மீண்டும் திரும்பி வந்த பலகாரத்தட்டியில் நான் பாதி சாப்பிட்டு மீதி வைத்திருந்த ஜிலேபியை கையில் எடுத்துக் கொண்டு “நல்ல ருசியாய் இருக்கு தாத்தா!” என்றேன்.

உடனே கள்ளம் கபடமில்லாமல் சிரித்த அந்த தாத்தா டிரைவரிடம் “அம்மாவிடம் சொல்லி அட்டைப் பெட்டி நிறைய ஜிலேபி போட்டு வாங்கி சேர்த்துக்கொடு” என்றார்.

ஸ்வீட் பாக்ஸ்ம், துணிப்பையையும் தூக்கிக் கொண்டு டிரைவர், என்னை காரில் அழைத்துச் சென்று பஞ்சாயத்து போர்ட் அலுவலகத்திற்கு பின்புறம் தெருவில் தாஜுதீன் டாக்டர் வீட்டுக்கு அருகில் இருந்த எங்கள் வீட்டில் இறக்கி விட்டுச் சென்றார்.

இந்த சம்பவம் சுமார் 40 ஆண்டுகளுக்குமுன்பு நடந்தது.

பள்ளப்பட்டியில் நான் 10ஆம் வகுப்பு படிக்கும்போதுதான் தெரிந்து கொண்டேன். அந்த தாத்தா பெயர் கூலாப்பா என்று. அந்த ஊரிலேயே மிகப்பெரிய செல்வந்தர் அவர் என்றும் மெக்கா, மதினா எல்லாம் அவர் சென்று வந்திருக்கிறார் என்றும், அந்த ஊர் மக்களுக்கு நிறைய நன்மைகள் செய்திருக்கிறார் என்றும்.

அப்போதே அவருக்கு வயது 70 இருக்கலாம். இப்போது அவருக்கு வயது 110 இருக்கும். அவர் இறந்திருக்கலாம். அந்த சமயத்தில் அவருக்கு நான் நன்றி சொல்ல தவறி விட்டேன்.

இப்போது அவருக்காக இறைவனிடம் நான் பிரார்த்திக்கிறேன் :

“இறைவா! அன்று பெருநாளுக்கு புதுத்துணி கொடுத்த அந்த தாத்தாவுக்கு சொர்க்கத்தில் அவர் அணிந்து கொள்ள பட்டுத்துணி அவருக்கு கொடு! எனக்கு ஜிலேபி கொடுத்த அவருக்கு சொர்க்கத்தில் தித்திப்பான இனிப்புக்களைக் கொடு!”

இப்போது என் மனசுக்கு தோன்றுகிறது :

“சாதாரண மானிடப் பிறவியான நம்மால், வல்லமை மிகுந்த இறைவனைப் பார்ப்பதற்கு சக்தி கிடையாது. அவனுடைய குரலை கேட்பதற்கும் நமக்கு கொடுப்பினை கிடையாது. ஆனால் இறைவன் எப்போதும் நம்மைப் பார்த்துக் கொண்டிருக்கிறான். நம் குரலைக் கேட்டுக் கொண்டிருக்கிறான்…”

நாகூர் ஹனிபாவின் பாடல் மனசுள் ஓடியது :

“இறைவனிடம் கையேந்துங்கள்…

அவன் இல்லையென்று சொல்லுவதில்லை.

பொறுமையுடன் கேட்டுப் பாருங்கள்…

அவன் பொக்கிஷத்தை மூடுவதில்லை”

 

 

  • திருச்சி சையது

Leave a Response

Right Click & View Source is disabled.

error: Content is protected !!