விளையாட்டு

“நான் ‘ஐபிஎல்’ ஆட ‘செலக்ட்’ ஆனதும் அதிகமா சந்தோசப்பட்டது அவங்க தான்..” ‘இந்திய’ வீரரை துயரத்தில் ஆழ்த்திய ‘சம்பவம்’.. கலங்கிய ‘நெட்டிசன்கள்’!!

86views

ந்தியாவில் கொரோனா தொற்றின் இரண்டாம் கட்ட அலை, மிக வேகமாக பரவி வரும் நிலையில், நாளொன்றிற்கு சுமார் 4 லட்சம் பேர் வரை இந்த கொடிய தொற்றினால் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

இந்நிலையில், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியைச் சேர்ந்த வீரர் ஒருவர், தனது குடும்பத்தில் நிகழ்ந்த துயரம் குறித்து, பதிவிட்டுள்ள ட்வீட் ஒன்று, நெட்டிசன்களை கலங்கடித்துள்ளது. கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி, இந்த ஆண்டுக்கான ஐபிஎல் தொடர் முன்பாக நடைபெற்ற ஏலத்தில், ஷெல்டன் ஜாக்சன் (Sheldon Jackson) என்ற வீரரை ஏலத்தில் எடுத்திருந்தது.

ஷெல்டன் ஜாக்சன் இந்த சீசனில் இதுவரை எந்த போட்டிகளிலும் களமிறங்கவில்லை. இதனிடையே, ஜாக்சனின் அத்தை ஒருவர், கொரோனா தொற்று மூலம் சில தினங்களுக்கு முன் பாதிக்கப்பட்டிருந்தார். தொடர்ந்து, அவருக்கு மருத்துவமனையில் படுக்கை கிடைக்காமல் தவித்த நிலையில், பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா மூலம், ஜாக்சனின் அத்தைக்கு படுக்கை கிடைத்துள்ளது.

இதற்காக, சில தினங்களுக்கு முன் ஜெய் ஷாவிற்கு, ஜாக்சன் நன்றியையும் தனது ட்விட்டரில் தெரிவித்திருந்தார். ஆனால், எதிர்பாராதவிதமாக, ஷெல்டன் ஜாக்சனின் அத்தை, சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார். இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்ட ஜாக்சன், ‘நான் இன்று மாலை, எனது அத்தையை இழந்து விட்டேன். நான் கொல்கத்தா அணிக்காக, ஐபிஎல் போட்டிகளில் ஆட தேர்வான போது, அவர் தான் அதிகம் மகிழ்ச்சியுடன் காணப்பட்டார். இதனால், நான் அணியினருடனே இருக்கப் போகிறேன்.

மிகவும் கடினமான சூழ்நிலையில், எனது அத்தையை காப்பாற்றுவதற்கான உதவிகள் மற்றும் முயற்சிகள் செய்த அனைவருக்கும் எனது நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்’ என உருக்கத்துடன் குறிப்பிட்டுள்ளார்.

முன்னதாக, 14 ஆவது ஐபிஎல் தொடர், இந்தியாவில் வைத்து நடைபெற்று வந்த நிலையில், கொல்கத்தா, சென்னை, ஹைதராபாத், டெல்லி உள்ளிட்ட அணிகளைச் சேர்ந்த வீரர்கள் மற்றும் நிர்வாகத்தினர் சிலருக்கு கொரோனா தொற்று உறுதியானதால், ஐபிஎல் தொடர் தற்போது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Right Click & View Source is disabled.

error: Content is protected !!