திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையில் இன்று மாலை திமுக சட்டப்பேரவை உறுப்பினர்கள் கூட்டம் நடக்க உள்ளது. இந்தக் கூட்டத்தில் முறைப்படி சட்டப்பேரவைத் தலைவராக ஸ்டாலின் தேர்வு செய்யப்படுவார், அதன் பின்னர் ஆளுநரை சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோருவார்.
சட்டப்பேரவை தேர்தல் ஏப் 6 அன்று நடந்தது, மே 2 வாக்கு எண்ணிக்கை நடந்தது. இதில் திமுக கூட்டணி 159 இடங்களை பெற்றது. திமுக 125 இடங்களைப்பெற்று அறுதிப் பெரும்பான்மை பெற்றது. இதனால் திமுக தலைவர் ஸ்டாலின் முதல்வராக பதவி ஏற்பது உறுதியானது.
நேற்று காலை பேட்டி அளித்த திமுக தலைவர் ஸ்டாலின் முதல்வராக பதவி ஏற்க உள்ள நிகழ்ச்சி எளிய முறையில் ஆளுநர் மாளிகையில் நடக்கும் எனத் தெரிவித்திருந்தார். ஆட்சி அமைக்க உரிமை கோரும்முன் முதலில் திமுக சார்பில் வெற்றிப்பெற்ற சட்டப்பேரவை உறுப்பினர்கள், கட்சி சின்னத்தில் வென்றவர்கள் கூட்டத்தை கூட்டி அவர்கள் ஆதரவை ஸ்டாலின் பெற வேண்டும்.
அதன்படி இன்று மாலை திமுக சட்டப்பேரவை உறுப்பினர்கள் கூட்டம் நடக்க உள்ளது. சென்னை திமுக தலைமையகமான அண்ணா அறிவாலயத்தில் நடக்கும் இந்தக்கூட்டத்தில் திமுக சட்டப்பேரவை உறுப்பினர்கள் பங்கேற்பர். கூட்டத்தில் திமுக சட்டப்பேரவை கட்சித்தலைவராக ஸ்டாலின் முறைப்படி தேர்வு செய்யப்படுவார். பின்னர் தனது ஆதரவு உறுப்பினர்கள் கடிதங்களுடன் ஆளுநரை சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோருவார்.
அதன் பின்னர் ஆளுநர் முறைப்படி ஆட்சி அமைக்க அழைப்பார். ஏற்கெனவே மே 7 ஆம் தேதி பதவி ஏற்க உள்ளதாக ஸ்டாலின் அறிவித்துள்ள நிலையில் மே 7 அன்று ஸ்டாலின் தலைமையிலான அமைச்சரவை ஆளுநர் மாளிகையில் நடக்கும் எளிய விழாவில் பதவி ஏற்கும்.
ஸ்டாலின் முதல்வராக பதவி ஏற்கும் முன் கரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து தலைமைச் செயலர், சுகாதாரத்துறைச் செயலர், வருவாய் பேரிடர் ஆணையர் உள்ளிட்டோரை அழைத்து ஆலோசனை நடத்தினார். இதையடுத்து சில முடிவுகளை தலைமைச் செயலர் நேற்றிரவு அறிவித்தார். இதேப்போன்று பத்திரிக்கையாளர்களை முன்களப்பணியாளர்களாக அறிவித்துள்ளார்.