கொரோனா பரவல் நாளுக்கு நாள் தமிழகத்தில் அதிகரித்து வரும் நிலையில் சென்னை மாநகராட்சியில் பணிபுரிய முன்கள பணியாளர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கொரோனா தோற்றால் நேற்று ஒரேநாளில் 15,830 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன்மூலம் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 11 லட்சத்து 13ஆயிரத்து 502ஆக அதிகரித்துள்ளது. அதேபோல் 77பேர் நேற்று உயிரிழந்ததால் மொத்த பலி எண்ணிக்கை 13,728ஆக அதிகரித்துள்ளது. மருத்துவமனைகளில் 1,08,855 பேர் சிகிச்சை பெற்று வரும் நிலையில், இதுவரை 9,90,919 பேர் குணமடைந்துள்ளனர்.தினம்தோறும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை உயர்ந்து வரும் நிலையில், மருத்துவ சேவைகளை பூர்த்தி செய்ய, மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் அதிக அளவில் தேவைப்படுகின்றனர்.
இந்நிலையில் சென்னை மாநகராட்சியில் கொரோனா நோய்த் தடுப்பு பணிகளை மேற்கொள்ள மருத்துவர்கள், செவிலியர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. ஓராண்டு ஒப்பந்த அடிப்படையில் மருத்துவர்கள் செவிலியர்கள் நியமிக்கப்பட உள்ளனர். ஏப்ரல் 29 ,30 தேதிகளில் சென்னை மாநகர நலச்சங்கம், ரிப்பன் மாளிகையில் நேர்காணல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது