உலகம்

செவ்வாயில் ஆக்சிஜன் தயாரிக்கும் நாசா..! எதற்கு பயன்படும்..?

88views

லகின் பல பாகங்களில் மக்களுக்கு மிகவும் தேவையான ஒரு பொருளாக விளங்கும் ஆக்சிஜனை (O2) 30 கோடி மைல்களுக்கு அப்பால் நாசா நிறுவனம் தயாரித்து சாதனை படைத்துள்ளது. பூமிக்கு வெளியே ஆக்சிஜன் தயாரிக்கும் முதல் சந்தர்ப்பம் இதுவாகும்.

கடந்த ஆண்டு ஜூலை மாதம் நாசா அனுப்பிய பெர்செவெரன்ஸ் விண்கலத்தில் உள்ள  மாக்சி கருவியின் மூலம் தயாரிக்கப்பட்டுள்ளது. இது பற்றி நாசா வெளியிட்டுள்ள தகவலில் சிறு பெட்டியை போன்ற மாக்சி கருவி பெர்செவெரன்சின் வயிற்றுப் பகுதியில் வைத்து அனுப்பப்பட்டது. அதன் மூலமே தற்போது ஆக்சிஜன் தயாரிக்கப்பட்டுள்ளது.

செவ்வாயில் மாக்சி இயந்திரம் தயாரித்த ஆக்சிஜனின் அளவு வெறும் 5 கிராம்தான். இதைக்  கொண்டு  மனிதனால் 10 நிமிடம்தான் சுவாசிக்க முடியும். இதன் மூலம்  என்ன செய்துவிட  முடியும் என்ற கேள்வி எழலாம். விஞ்ஞானிகளின் பார்வை இதில் வேறு மாதிரியாக இருக்கிறது.

கார்பன் டை ஆக்சைடு செறிந்த செவ்வாயின் வளிமண்டலத்தில் இருந்து உயிர் வாழத்  தேவையான ஆக்சிஜனை மாக்சி தயாரித்திருக்கிறது. இதே தொழில்நுட்பத்தில் சற்று பெரிய  கருவியை உருவாக்கி விட்டால், விண்வெளி வீரர்கள் ஆக்சிஜனை பூமியில் இருந்து கொண்டு  செல்ல வேண்டிய தேவை  இருக்காது.

செவ்வாய்க்கு மனிதர்களை அனுப்பும்போது அவர்கள் சுவாசிக்கவும், பூமிக்குத் திரும்பவதற்கான ராக்கெட்டுகள் செயல்படுவதற்கும் பல டன் ஆக்சிஜன் தேவை.  அதைக் கொண்டு  செல்வது  கடினம், அதற்குப் பதிலாக மாக்சி போன்ற கருவியைக் கொண்டு சென்றால் போதும் என  விஞ்ஞானிகள் நம்புகிறார்கள்.

வரும் நாள்களில் வெவ்வேறு இடங்களில் மாக்சியைக் கொண்டு ஆக்சிஜனை தயாரிக்க  திட்டமிடப்பட்டிருக்கிறது. மாக்சியால் ஒரு மணி நேரத்தில் 10 கிராம் வரை  ஆக்சிஜன் தயாரிக்க  முடியும் என்று விஞ்ஞானிகள் எதிர்பார்க்கிறார்கள்.

Right Click & View Source is disabled.

error: Content is protected !!