ஃபேஸ்புக், ட்விட்டர், இன்ஸ்டாகிராம் போன்ற சமூக ஊடக சேவைகளில் அறிமுகமாகி இருக்கும் புதிய வசதிகளை தெரிந்துகொள்ள வேண்டும் என்றால், தொழில்நுட்ப செய்திகளை தரும் இணையதளங்களை பின்தொடர்ந்தால் போதுமானது. ஆனால், தொழில்நுட்ப நிறுவனங்கள் அறிமுகம் செய்ய உத்தேசித்துள்ள புதிய சேவையை முன்கூட்டியே தெரிந்துகொள்ள விரும்பினால் என்ன செய்ய வேண்டும் தெரியுமா? – ஜேன் வாங்கை பின்தொடர வேண்டும்.
ஆம், ஜேன் மன்சுங் வாங் (Jane Manchun Wong) எனும் தொழில்நுட்ப சூரப்புலியைப் பின்தொடர்ந்தால், புதிய வசதிகளை அவை அறிமுகம் ஆவதற்கு முன்பாகவே கூட தெரிந்து கொண்டுவிடலாம்.
செய்திகளை முந்தித் தருவது என்பார்களே அதுபோல, இளம் மென்பொருளாளரான வாங், முன்னணி நிறுவனங்கள் அறிமுகம் செய்ய இருக்கும் புதிய அம்சங்களை, அவை அதிகாரபூர்வமாக வெளியாவதற்கு முன்பே கண்டறிந்து சொல்கிறார்.
இப்படித்தான் அவர், ஃபேஸ்புக் அறிமுகம் செய்ய இருந்த டேட்டிங் சேவை பற்றிய தகவலை முன்கூட்டியே பகிர்ந்து கொண்டு அசத்தினார். ஏ.ஆர் எனப்படும் ஆக்மெண்டட் ரியாலிட்டி வசதியை இஸ்ன்டாகிராம் சோதித்து பார்க்கிறது எனும் தகவலை பகிர்ந்து கொண்டார்.
இதனால், ‘வாங்’கின் ட்விட்டர் பக்கத்தை தொழில்நுட்ப ஆர்வலர்கள் மட்டும் அல்ல, தொழில்முறை பத்திரிகையாளர்களும், சிலிக்கான் பள்ளத்தாக்கு வல்லுனர்களும் ஆர்வத்தோடு பின்தொடர்கின்றனர். அந்த அளவுக்கு வாங், தொழில்நுட்ப உலகில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறார்.
வாங்’கிற்கு மட்டும் இது எப்படி சாத்தியமாகிறது என்றால், அவர் தொழில்நுடப் சூரப்புலியாக இருப்பதுதான் காரணம். ஆம், 23 வயதாகும் வாங், மென்பொருள் நுணுக்கங்களை நன்கறிந்தவர் மட்டும் அல்ல, அதன் ரகசியங்களையும் உடைத்தறியக்கூடியவராக இருக்கிறார்.
அதாவது, அவருக்கு ஹேக் செய்வதும் கை வந்த கலையாக இருக்கிறது. ஆம், வாங்கும் ஒரு ஹேக்கர்தான். அதாவது கம்ப்யூட்டர் அமைப்புகள் மற்றும் கோடிங்கிற்குள் அத்துமீறி நுழைந்து கைவரிசைக்காட்டும் திறன் படைத்தவர்.
பொதுவாக ஹேக்கர்கள் என்றவுடன் ஆண்கள்தான் நினைவுக்கு வரலாம். ஆனால், இந்த பொதுக்கருத்து தவறானது என நிருபித்து வரும் இளம்பெண்களில் வாங்கும் ஒருவர். சின்னப் பெண்ணாக இருந்தபோதே கம்ப்யூட்டருக்குள் அனுமதி இல்லாமல் நுழையும் திறனை கற்றுக்கொண்டதாக அவர் உற்சாகமாக கூறுகிறார். வீட்டு கம்ப்யூட்டருக்கு அப்பா போட்டு வைத்திருந்த பாஸ்வேர்டு பூட்டுகளை உடைத்து உள்ளே நுழையத் துவங்கியதில் இருந்து இந்த ஆர்வம் ஏற்பட்டிருக்கிறது.
அதன் பிறகு, கோடிங் செய்வதில் ஆர்வம் ஏற்பட்டு மென்பொருள் வல்லுநரானவர், கோடிங்கை உடைத்துப் பார்ப்பதிலும் தன்னை வல்லவராக்கிக் கொண்டார். இந்தத் திறன்தான், தொழில்நுட்ப நிறுவனங்களின் புதிய வசதிகளை கண்டறிய கைகொடுக்கிறது.
தொழில்நுட்ப மொழியில் இதை ‘ரிவர்ஸ் இன்ஜினியரிங்’ என்கின்றனர். ஒரு புதிய செயலியை அல்லது ஏற்கெனவே உள்ள செயலியில் புதிய அம்சத்தை உருவாக்க வேண்டும் என்றால், அதற்காக கோடிங் செய்ய வேண்டும். இதையே தலைகீழாகவும் செய்யலாம். அதாவது, கோடிங்கை ஆராய்ந்து பார்த்து, அதன் பின்னே இருக்கும் அம்சம் என்ன என்பதை கண்டறியலாம்.
இதைத்தான் வாங் செய்து கொண்டிருக்கிறார். ஃபேஸ்புக் உள்ளிட்ட முன்னணி செயலிகளின் பின்னே உள்ள கோடிங்கை ஆய்வு செய்து, அவற்றில் அறிமுகம் ஆகவுள்ள வசதிகளை முன்கூட்டியே கண்டறிந்து சொல்கிறார்.
எந்தவித வில்லங்க நோக்கமும் இல்லாமல், மற்றவர்களுடன் பகிர்ந்துகொள்ளும் நல்லெண்ண நோக்கத்துடன் இந்த தொழில்நுட்ப விளையாட்டில் அவர் ஈடுபட்டு வருகிறார். இந்த வகை நபர்கள் நல்லெண்ண ஹேக்கர்கள் (Ethical hackerசs) என்று கொண்டாடப்படுகின்றனர்.
அமெரிக்க பல்கலை. ஒன்றில் உயர்கல்வி பயிலும் வாங், விடுமுறைக்காக ஹாங்காங் திரும்பியிருக்கிறார். வாரந்தோறும் மணிக்கணக்கில் தொழில்நுட்ப வேட்டை நடத்தி, புதிய அம்சங்களையும், பாதுகாப்பு குறைபாடுகளையும் அவர் கண்டறிந்து தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு வருகிறார்.
எனவே, முன்னணி தொழில்நுட்ப நிறுவனங்களும் வாக்கின் செயல்பாட்டை உற்று கவனிக்கத் துவங்கியுள்ளன. அவர் கண்டுபிடித்துவிடக் கூடாது என்பதற்காகவே, தாங்கள் அறிமுகம் செய்ய உத்தேசித்துள்ள புதிய வசதிக்கான கோடிங்கை வெளியிடுவதை கடைசி நேரம் வரை நிறுவனங்கள் தாமதம் செய்வதும் உண்டாம்.
அது மட்டும்அல்ல, பல நிறுவனங்கள், வாங் உள்ளே நுழைய முடியாத அளவுக்கு தங்கள் செயலிகளின் பாதுகாப்பையும் மேம்படுத்தியுள்ளன. மற்றவர்கள் எளிதில் நுழைய முடியாத அளவுக்கு செயலிகள் பாதுகாப்பு தன்மை பெற்றிருக்க வேண்டும் என்பதுதான், ஒரு நல்லெண்ண ஹேக்கராக தான் எதிர்பார்ப்பதும் என்றும் ஜேன் வாங் கெத்தாக கூறுகிறார்.
சமீபத்தில் இவர் இப்படி முன்கூட்டியே கண்டறிந்து வெளியிட்ட தகவல்தான் இப்போது ட்விட்டரில் ஹாட் டாபிக். ஆம், பயனாளிகள் தாங்கள் பின்தொடரும் கணக்குகளை நடத்துபவர்களுக்கு சிறு தொகையை டிப்ஸ் ஆக பரிசளித்து ஊக்குவிக்கும் வசதியை ட்விட்டர் அறிமுகம் செய்ய உத்தேசித்துள்ளது என்பதே அந்தத் தகவல். அதுகுறித்து சற்றே விரிவாக அறிய > பின்தொடர்வோரிடம் ‘டிப்ஸ்’ ஆக பணப் பரிசு பெறலாம்! – ட்விட்டரில் புதிய வசதி வர வாய்ப்பு
ஜேன் வாங் இணையதளம்: https://wongmjane.com/