மே 1ஆம் தேதி முதல் 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட உள்ள நிலையில் அதற்கு முன்பதிவு கட்டாயம் என அறிவிக்கப்பட்டுள்ளது. முன்பதிவு செய்யாவிட்டால் தடுப்பூசி செலுத்தப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா தடுப்பு நடவடிக்கையாக முதலில் மருத்துவ பணியாளர்களுக்கும் அதனைத் தொடர்ந்து முன்களப்பணியாளர்களுக்கும் தடுப்பூசி செலுத்தப்பட்டது. அதன்பிறகு 60 வயதுக்கு மேற்பட்டவர்கள், 45 வயதுக்கு மேற்பட்ட இணை நோய் உள்ளவர்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணி தொடங்கியது.
அதன் பிறகு நாடு முழுவதும் 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. வருகிற மே 1 ஆஆம் தேதி முதல் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி செலுத்த அனுமதி அளிக்கப்பட்டுள்ளது .
அப்படி தடுப்பூசி செலுத்திக் கொள்ள விரும்புபவர்கள் வலைதளத்தில் முன்பதிவு செய்வது அவசியம் . அதே நேரம் , 45 வயதுக்கு மேற்பட்ட பயனாளிகள் பதிவு செய்யாமல் , நேரடியாக தடுப்பூசி மையத்திற்கு வந்து தடுப்பூசி செலுத்திக் கொள்வது தொடரும்.
தடுப்பூசி மையங்களில் கூட்டம் கூடுவதை கட்டுப்படுத்தும் வகையிலும் தடுப்பூசி செலுத்திக் கொள்ள விரும்பும் 18 முதல் 44 வயது வரை உடையவா்கள் கோ-வின் வலைதளத்தில் பதிவு செய்து, அவருக்கான தடுப்பூசி செலுத்து நேரத்தை அறிந்து கொள்ள வேண்டும்.
வலைதளத்தில் பதிவு செய்யாமல், நேரடியாக மையத்துக்கு வருபவா்களுக்கு ஆரம்பத்தில் தடுப்பூசி செலுத்தப்பட மாட்டாது. 18 முதல் 44 வயது வரை உடையவா்கள் கோ-வின் மற்றும் ஆரோக்ய சேது செயலியில் தடுப்பூசிக்கான பதிவை வரும் புதன்கிழமை (28.04.21) முதல் செய்ய அனுமதிக்கப்படுவா் என்று மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.