1.
பூத்திருக்கும் தும்பைச் செடியில்
அதோ! பறந்து போகும்
பட்டாம்பூச்சி வாசம்
2.
செடியில் வண்ணத்துப்பூச்சி
பிடிக்க ஓடும் சிறுமியின்
மடியிலிருந்து விழும் பூக்கள்
3.
கைகட்டி நடுங்கியபடி
பார்த்துக் கொண்டிருக்கிறேன்
மலரில் பனித்துளிகள்
4.
மாடு தொலைந்த இரவு
தேடி அலையும் திசையெல்லாம்
கேட்கும் மணியோசை
5.
குளிர்கால அதிகாலை
பனிமலைகள் பனிமலைகள்
அடடா, பாலைவன மணல்மேடுகள்
6
நெகிழிப் போத்தல்
தண்ணீரைக் குடிக்கும்போதெல்லாம்
சலசலக்கும் ஒரு நதி
7
வறண்ட நதி
ஒரு செடி சொட்டும் பனித்துளியில்
நனையும் கூழாங்கல்
8
பனிமூட்டம் கலைந்தபின்
அத்தனை பிரம்மாண்டமாய்
புர்ஜ் கஃலீபா
9
முற்றத்தில் வேப்பம்பூக்கள்
இதழ்கள் உடையாமல்
உருட்டிப் போகும் காற்று
10
வயல் முழுக்க தண்ணீர்
குறுக்கே வரப்பு வெட்டிய பின்
இரண்டாய் பிரிந்த வானம்
- பட்டியூர் செந்தில்குமார்