உலகம்

துபாய் தர்பார் சார்பில் “ஷார்ஜாவின் சிற்பி” நூல் குறித்த சிறப்புக் கலந்துரையாடல் நிகழ்ச்சி

45views
துபாய் தர்பார் ஊடக நிறுவனம் சார்பில் அண்மையில் ஷார்ஜாவின் 45 வது சர்வதேச புத்தக கண்காட்சியில் வெளியிடப்பட்ட “ஷார்ஜாவின் சிற்பி – மேதகு ஷேக் டாக்டர் சுல்தான் பின் முஹம்மது அல் காஸிமி” என்ற நூலை மையமாக கொண்டு, அதன் சிறப்பம்சங்கள், கருத்துகள் மற்றும் படைப்பின் பல்வேறு பார்வைகள் குறித்து சிறப்புக் கலந்துரையாடல் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இந்த நிகழ்ச்சிக்கு துபாய் தர்பார் ஊடக நிறுவன தலைவர் முஹம்மது கபீர் தலைமை வகித்தார். அவர் ஒவ்வொரு மாதமும் இலக்கிய கலந்துரையாடல் நிகழ்ச்சி நடக்கும் வகையில் இந்த முயற்சி மேற்கொள்ளப்பட்டது. இதனை இலக்கிய ஆர்வலர்கள் பயன்படுத்தி கொள்ளவேண்டும் என்றார்.  துபாய் அல் ரீம் குழுமத்தின் தலைவர் செய்யது அபுதாஹிர், நூலாசிரியர் முதுவை ஹிதாயத் தனது முதல் நூலாக ஒரு சிறந்த தலைவரை வெளிக்கொண்டு வந்திருப்பது மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது. தொடர்ந்து பல நூல்களை படைக்க வேண்டும் என்றார்.
கவிஞர் நூர் பாத்திமா, ஷார்ஜா ஆட்சியாளர் மேதகு ஷேக் டாக்டர் சுல்தான் பின் முஹம்மது அல் காஸிமியின் வாழ்க்கை வரலாற்றை தமிழ் மொழியில் படைத்துள்ள நூலாசிரியருக்கு வாழ்த்துக்கள் என்றார்.  அமீரக இந்திய நல வாழ்வு பேரவையின் துணைத் தலைவர், பலரையும் எழுத ஆர்வம் மூட்டி வரும் முதுவை ஹிதாயத் முதல் நூலை முத்தான நூலக படைத்துள்ளார் என்றார்.
தொடர்ந்து எழுத்தாளர் வினோத் சேகர், திருச்சி ஜமால் முகம்மது கல்லூரி முன்னாள் மாணவர் சங்க நிர்வாகி நவாஸுதீன், இலங்கை தமிழ் மாறன் உள்ளிட்டோர் நூல் குறித்த கருத்துக்களை பகிர்ந்து கொண்டனர்.  நூலாசிரியர் முதுவை ஹிதாயத் ஏற்புரை நிகழ்த்தினார். அதில் நூலை உருவாக்க எடுத்துகொண்ட முயற்சிகள், தகவல் திரட்ட உதவியர்கள், வாழ்த்துரை வழங்கிய தலைவர்கள், கல்வியாளர்கள் என அனைவருக்கும் நன்றி தெரிவித்தார். குறிப்பாக இந்த கலந்துரையாடல் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்த துபாய் தர்பார் குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்தார்.
அதன் பின்னர் அனைவரும் நூலாசிரியருடன் குழு புகைப்படம் எடுத்துக்கொண்டனர்.  நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை சபீக், ஹுசைன், காயத்ரி, சமீர் உள்ளிட்ட குழுவினர் சிறப்புடன் செய்திருந்தனர்.

Right Click & View Source is disabled.

error: Content is protected !!