தமிழகம்

துபாயில் கிரீன் குளோப் சார்பில் மாபெரும் இரத்ததான முகாம் – 120 பேர் ரத்ததானம் செய்தனர் !

23views
துபாய்:
துபாயில் சமூக மேம்பாட்டு ஆணையத்தின் அங்கீகாரம் பெற்ற சமூக நல அமைப்பான கிரீன் குளோப் சார்பில், 12.11.2026 அன்று மாலை 4.30 மணி முதல் இரவு 10 மணி வரை அல் கிசைஸ் பகுதியில் அமைந்துள்ள லூலூ ஹைப்பர் மார்க்கெட் வளாகத்தில் மாபெரும் இரத்ததான முகாம் சிறப்பாக நடைபெற்றது.
“ஒரு துளி ரத்தம் ஓர் உயிரைக் காப்பாற்றும்” என்ற உயரிய மனிதநேய நோக்கத்துடன் நடைபெற்ற இம்முகாமில் 120 பேர் ஆர்வத்துடன் பங்கேற்று ரத்ததானம் செய்தனர்.
இந்த நிகழ்ச்சிக்கு கிரீன் குளோப் அமைப்பின் நிறுவனர் ஜாஸ்மின் அபூபக்கர் தலைமை தாங்கினார்.
சிறப்பு விருந்தினர்களாக வழக்கறிஞர் மதுரை ஷேக் முஹம்மது, சிங்கப்பூர் சலீம் ஹாதி, இதயக்கனி பத்திரிகை விஜயன், மூத்த பத்திரிகையாளர் முதுவை ஹிதாயத், சமூக செயற்பாட்டாளர் முஹம்மது ராசிக், பீஸ் அண்ட் கேர் முஹம்மது ரபீக், உமா மற்றும் அனிருத் குடும்பத்தினர், தீபிகா முஹாஜன், ரியாஸ் (சாப்ட்வேர் டெவெலப்பர்) உள்ளிட்டோர் கலந்துகொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தனர்.
இம்மாபெரும் மனிதநேய நிகழ்வை கிரீன் குளோப் அமைப்பின் உறுப்பினர்களான சுலோச்சனா வீரகுமார், ரசூல், அபூபக்கர், அப்துல் ரஹ்மான், தாஹிர், சபீர் மற்றும் பீர் முகமது ஆகியோர் சிறப்பான முறையில் ஒருங்கிணைத்து ஏற்பாடு செய்திருந்தனர். மேலும், ஏராளமான தன்னார்வலர்கள் ஆர்வத்துடன் பங்கேற்று தங்களின் மதிப்புமிக்க பங்களிப்பை வழங்கினர்.

நிகழ்ச்சியில் பங்கேற்ற ரத்தக் கொடையாளர்கள் மற்றும் தன்னார்வலர்களுக்கு சிற்றுண்டி, பழங்கள், பழச்சாறு மற்றும் தேநீர் வழங்கப்பட்டன.
உயிர்களைக் காக்கும் உன்னதமான மனிதநேயப் பணியில் பங்கேற்று ஒத்துழைப்பும் ஆதரவும் வழங்கிய அனைத்து நல்லுள்ளங்களுக்கும் கிரீன் குளோப் அமைப்பின் சார்பில் மனமார்ந்த நன்றியும் பாராட்டுகளும் தெரிவிக்கப்பட்டன.
மனிதநேயம் ஒன்றே நம் அடையாளம்! உயிர்காக்கும் சேவையே நம் இலட்சியம்!

Right Click & View Source is disabled.

error: Content is protected !!