ஐக்கிய அரபு அமீரகத்தின் கூட்டமைப்பிலுள்ள ஏழு அமீரகங்களில் மிகப் பெரியது அபுதாபி. அமீரகத்திலுள்ள இந்நகரம் அவ்வமீரகத்தின் தலைநகரமும் ஆகும். அபுதாபி தவிர்த்து அமீரகத்தில் ஆறு மாநிலங்கள் அமைந்து உள்ளன. அவை துபாய், ஷார்ஜா, அஜ்மான், புஜைரா, ராசல் கைமா, அலைன் ஆகியவை ஆகும்.
கிமு மூன்றாம் ஆண்டு முதல் இங்கே மக்கள் குடியிருப்பு இருப்பதாக வரலாறு கூறுகிறது. கிபி 18 ஆம் நூற்றாண்டில் பனியாஸ் என்ற பழங்குடியினர் மூலமாக இந்த நகரம் முழுமையாக மக்கள் நடமாட்டம் துவங்கியது. அப்போது மந்தை வளர்ப்பும், மீன்பிடித்தலும் அவர்களின் தொழிலாக இருந்தது. கிபி 20 ஆம் நூற்றாண்டில் அபுதாபியின் பொருளாதாரம் ஒட்டக வளர்ப்பிலும், பேரீச்சு, மரக்கறி வகைகள் விளைவிப்பதிலும் , மீன் பிடித்தலிலும், முத்து குளித்தல் மூலமாகவும் கிடைக்க பெற்று உள்ளன. ஈச்சமர ஓலைலளால் அமைக்கப்பட்ட வீடுகளில் தங்கி உள்ளனர்.
1939 ஆம் ஆண்டில் அக்கால அபுதாபியின் ஆட்சியாளரான சேக் சக்புத் பின் சுல்தான் அல் நகியான் மிகச் சிறந்த தலைவராக உருவெடுத்தார். அவர் மக்களின் வளர்ச்சி பற்றியும், அவர்களின் வாழ்வின் தரத்தை உயர்த்தும் பொருட்டும் கடுமையாக உழைக்கத் துவங்கினார். அப்போது தான் அவரின் முயற்சியில் 1958 ஆம் ஆண்டு பெட்ரோலிய வளம் இருப்பதை கண்டறிந்தார். அதன் பிறகு அவரது சகோதரரான சேக் சாயித் பின் சுல்தான் அல் நகியான் அதற்கான விதையை விதைத்தவர். அதன் பிறகு மக்களால் கொண்டாடப்பட்ட இவர் நாட்டின் ஜனாதிபதியாக தலைமை பொறுப்பை ஏற்று இன்று உலக நாடுகள் திரும்பி பார்க்க வைத்தவர் என்றால் மிகையாகாது. இன்று இவரை அமீரக மக்கள் இறைத்தூதராகவே பார்க்கின்றனர். கொண்டாடுகின்றனர்.
உலகின் மிகப்பெரிய பெட்ரோலிய உற்பத்தியாளர்களில் ஒன்றான அபுதாபி அண்மைக்காலங்களில் அதன் பொருளாதார அடித்தளத்தை, பல்வேறு நிதிச் சேவைகளிலும், சுற்றுலாத்துறையிலும் முதலீடு செய்வதன் மூலம் விரிவாக்கியுள்ளது. இப் பகுதியின் மூன்றாவது செலவு கூடிய நகரமான அபுதாபி, உலகின் செலவு கூடிய நகரங்களின் வரிசையில் 26 ஆவது இடத்தில் உள்ளது.
இது பாரசீக வளைகுடாவின் மத்திய மேற்குக் கரையில் இருந்து வளைகுடாவுக்குள் துருத்திக் கொண்டிருக்கும் “T” வடிவமான தீவொன்றில் அமைந்துள்ளது. 67,340 கிமீ2 (26,000 ச.மை) பரப்பளவு கொண்ட அபுதாபி நகரத்தில் 860,000 (2007) மக்கள் வாழ்கிறார்கள்.
சேக் சாயித் பின் சுல்தான் அல் நகியான் அவர்களின் நினைவாக சேக் சாயித் மசூதி கட்டப்பட்டது. உலகம் வியக்கும் வகையில் இந்த மசூதி கட்டப்பட்டுள்ளது. முகலாயர் கால கட்டிட கலைக்கு நிகராக கட்டப்பட்ட உள்ளமைப்பை கொண்டுள்ளது. இதன் சிறப்பு என்னவென்றால் எல்லாருக்கும் பார்க்க அனுமதி கொடுக்கப் பட்டுள்ளது.
நகரத்தின் வெளிப்புறம் முற்றிலும் கடலால் சூழப்பட்டுள்ளதால் கோடையிலும் கடற்கரையில் மக்கள் குவிந்து கோடையின் தாகத்தை தீர்த்து கொள்கிறார்கள். குளிர்காலத்தில் குளிர்பிரதேசமாக மாறி, ஆறு மாதத்திற்கு உலகநாடுகளில் வந்து தங்கி செல்லும் அளவிற்கு மிகச் சிறந்த காலநிலையை கொண்டிருக்கும்.
ருவைஸ்
அபுதாபியில் இருந்து 250 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது ருவைஸ் என்ற நகரம். இங்கு பெட்ரோலிய துறை சார்ந்த நிறுவனங்கள் நிறைய இருக்கின்றன. இங்கு பணிபுரிபவர்கள் காலனி போன்ற கட்டமைப்பில் வாழ்ந்து வருகின்றனர். இங்கே அடிப்படை வசதிகள் அனைத்தும் கிடைக்கப் பெறுகின்றன. அதுமட்டுமில்லாது மூன்று விதமாக கல்வி முறையில் பள்ளிகளும், ருவைஸ் மால் ஒன்றும், நிறைய தேநீர் கடைகளும், சூப்பர் மார்க்கெட்களும், உள்விளையாட்டு அரங்கங்கள், வெளி விளையாட்டு அரங்குகள் மற்றும் உலகம் தரம் வாய்ந்த பூங்காக்கள் அமைந்து இருப்பது சிறப்பு.
சர் பனியாஸ்
சர் பனியாஸ் என்ற தீவு அபுதாபியின் அங்கமாக இருக்கும். ருவைஸ் என்ற நகரில் இருந்து கப்பல் மூலமாகவே அங்கு செல்ல முடியும். அப்படி செல்லும் போது முறைப்படி விண்ணப்பித்து அனுமதி கிடைத்த பிறகே செல்ல முடியும். இங்கு திறந்த வெளி வெளியில் விலங்குகளை பராமரிக்கும் விதமும், அந்த விலங்குகளுக்கு அவர்கள் ஏற்படுத்தி இருக்கும் குடிகளும் உண்மையில் இது சாத்தியமா என்று பார்ப்பவர்களை வியக்க வைக்கும் . உலகநாடுகள் விலங்குகள் பாதுகாப்பை பற்றி பேசும் போது, இவர்களின் மனிதம் அனைவரையும் திரும்பி பார்க்க வைக்கும்.
- சிவமணி, வத்தலகுண்டு.