கவிதை

நோபல் பரிசுகள்

24views
அத்தாவுல்லா
நாகர்கோவில்
திறமைகளின் பக்கங்களில்
பொறிக்கப்படும் கௌரவங்கள்…
உயர்ந்த சிந்தனைகள்
உள்வாங்கிய
வெளிப்படுத்தல்கள்…
திசையெட்டும் விரியும்
கௌரவ இசைச்சிறகுகள்…
உலகம் புதுக்கும்
புதுமைச் செயல்கள்…
அறிதொறும்
கண்டொதுக்கப்பட்ட
அறியாமைகளில்
கிடைத்த விளைச்சல்…
மானுட சமுதாயத்துக்கு
ஏதேனும் ஒரு வகை பயனுதவி..
அறிவியலோ… மருந்தியலோ…
அறவியலோ… ஆன்மிகமோ…
மானுடவியலின்
மகத்துவம் பேசும்
சமாதானவியலோ
எதுவாயினும் ஆகட்டும்…
பழமை கழித்து
புதுமை காண்கிற எளிமை…
பஞ்சாங்கங்கள் பார்த்தறியா
பரபரப்பின் மூளைகள்…
ஆனால் நின்று நிதானித்து
சந்தேக முடிச்சுகள்
அவிழ்க்கும் ஆச்சரியங்கள்…
எவரேனும் ஒருவருக்கு பயனாக
ஒரு சமுதாயத்துக்கு உதவியாக…
முடவன் கைக்கோலாக…
திக்கற்றவருக்கு உதவியாக…
நீட்சிகளின் வீரியம்
சுருக்கும் மீட்சிகளாக…
புனையப்பட்ட பொய்களின்
நெற்றிக்கண்ணையும் கடந்து
முளைக்கும் மூன்றாம் கண்ணாக…
ஆனால் எவரையும்
எரிக்காத உதவிக்கரமாக…
மடமைப் படுகுழிகளை
மீண்டும் மீண்டும்
மண் போட்டு மூடும்
மகத்தான புரட்சிகளாக..
மானுடம் வளர்ச்சி பெறும்
எழுச்சிகளாக…
தலை தோள் கை கால்களில்
காயம்பட்டு பிறந்தவர்களையும்
கை தூக்கும் நெம்பு கோல்களாக…
மாச்சரியங்கள் வேரறுக்கும்
கண்டுபிடிப்புகளாக..
தம்பட்டக் கொக்கரிப்புகளின்
சங்கறுக்கும் வாளாக..
எப்படி வேண்டுமானாலும்
இருக்கலாம்…
கண்டுபிடிக்கப்பட்டும்
கொண்டாடப்பட்டும்
வழங்கப்பட்டுக் கொண்டும் இருக்கின்றன
சத்தியங்களின் உரிமைகளை
மீட்டெடுக்கும் சாத்வீகப் பட்டோலைகளான
இந்த விருதுகள்
உலகெங்கும் உலகெங்கும்…
விருதுகள் என்பவை உயர்ந்தோர் மாட்டே…

Leave a Response

Right Click & View Source is disabled.

error: Content is protected !!