சிறுகதை

தரிசனம்

20views
பொ.வெ.இராஜகுமார்.
“அவன் வந்துவிட்டான்!
அவன் வந்துவிட்டான்!
அவனே தான் வந்துவிட்டானடி”!
சேடி வந்து காதில் கிசுகிசுத்தபோது, அவள் நம்பவில்லை.
“அவன் தான் பிரிய சகியே! கறுத்தவனும், வெள்ளையனும் தேரடி வீதியில் உலா வந்து கொண்டிருக்கிறார்கள்! இருவரும் நிராயுதபாணியாக, ஆனால் சண்டைக்குத் தயாராக வந்தவர்கள் போல, நடையும், தோரணையும்- அப்பப்பா! என்ன ஒரு தேஜஸ்! என்ன ஒரு கம்பீரம்! என்ன ஒரு கலப்படமற்ற நேர்திமிர்!
அடியே! நீ கனவு கண்டு கொண்டிருந்த அந்தக் கார்நிறக் கள்வன்தானடி வந்து கொண்டிருப்பது! உடனே நேரே சென்று போய் பார்!” என்று கூறிவிட்டு மற்றவர்களிடம் அந்தப் பொன்னான விஷயத்தைக் கூறுவதற்குச் சென்றுவிட்டாள்.
என்னது! அவன் வந்துவிட்டானா! அவன்., அவன்.,
கம்சனிடம், எட்டாவதாய் பிறப்பவன் எமனாய் வரப் போகிறான் என்ற அசரீரிக்கும், நாரத முனியின் சாட்சிக்குமாய், வந்துதித்தவன்! ஒருத்திக்குப் பிறந்து, ஒருத்தியிடம் ஒளிந்து வளர்ந்து, பால குமாரனாய் சேட்டைகள் புரிந்தவன்! தன்னைக் கொல்ல வந்த அசுரர்களை அனாயசமாய் துவம்சம் செய்து, கருணையோடு அவர்களுக்கு மோட்சமும் அளித்தவன்!
தன்னுரிமைக்காக, பாட்டனையும், பரிதவிக்கும் பாசமிகு பெற்றோரையும், காப்பதற்கும், அடிமை ஆட்சியில் இருந்து மதுரா நாட்டை மீட்கவும், மாமன் கம்சனை வதம் செய்வதற்கும், வந்துவிட்டானா அந்த கருநீல மாயன்! ஓ அதற்குரிய நேரமும் வந்து விட்டதா?
“அடியே சிங்கார சூர்ப்பனகையே! என்னடி தலைல இடி விழுந்தா மாதிரி ஸதம்பித்துப் போயிட்ட? உன்னோட முற்பிறவில, உன்னை வேண்டாம்முனு சொன்னவன்தான், இப்போ காந்தர்வக் கள்வனா வந்திருக்கான்டி! அப்பம் வேண்டாமுன்னு சொன்னவன் இப்பம் உன்னை கரையேத்த வந்து கொண்டிருக்கானடி! அதிர்ஷ்டக்கார சிறுக்கி மவளே!
உடனே முகத்தை கழுவி பொட்டு வச்சு, சிங்காரிச்சுண்டு ஓடுடி! ஊர்க்காரங்க எல்லாம் அவங்கள சூழ்ந்துண்டு வரம் கேட்கறத்துக்கு முன்னாடி, நீ போயி அவன் முன்னால நில்லு!” மூச்சிரைக்கப் பேசிமுடித்தாள் ரேழியில் துணி உலர்த்திக் கொண்டிருந்த என் பாட்டி!
“ஐயோ பாட்டி! நீயும் உன் பூர்வ ஜன்ம கதையும்! நிறுத்தவே மாட்டியா!”, என்றவள், தன்மனத்தினில் இனம் புரியாத மகிழ்ச்சிக் கடல் பொங்குவதை உணர்ந்தாள். உண்மைதானா? இவ்வளவு சீக்கிரமாகவா? அவன் இன்னமும் பதின் வயதைத் தாண்டியிருக்க மாட்டானே! அவனும், மூத்தவனும் பால்மணம் மாறாத பருவப் பிள்ளைகளல்லவா?
மேரு மலையை ஒத்த முரட்டு வீரமும், பிறரைத் துன்புறுத்தி அடக்கி ஆளவே மந்திர, தந்திர வித்தைகளைக் கற்றுத் தேர்ந்து, தம்முடைய ஏவலுக்குக்காகக் காத்திருக்கும் கூலிப்படையை வைத்திருக்கும் கம்சனை வென்று, இழந்த அரசுரிமையைப் பெற வந்துவிட்டார்களா?
எந்தப் படையும் இல்லாமல், நிராயுதபாணியாக இந்த நாட்டை எப்படி அவர்களால் காப்பாற்ற முடியும்? அவன். . அவன்.. பிறந்து கண்ணை முழுவதுமாகத் திறக்கும் முன்னமே அரக்கியின் முலையை, பவள இதழ்களால் பற்றி, அவளின் உயிரையே குடித்தவனாயிற்றே! தூண்களாய் எதிரே நின்ற ராட்சசர்களை இடையில் கட்டிய இரும்பு உரலோடு குறுக்கே ஓடி துவம்சம் செய்தவனாயிற்றே! இன்னும், இன்னும் அநேக சாகசங்களை அசகாயமாகச் செய்து, செய்பவன் தானில்லை என்னும் கபட நாடகம் நடித்து, தன் வளர்ப்புத்தாயை ஏமாற்றிய என்மனம் கவர்ந்த கள்வனல்லவா அவன்?
அவனால்முடியாத காரியம் ஒன்றுண்டா இந்த உலகில்..? ஆசையென்னும் மாய நாகத்தின் பற்களால் கட்டுண்டு, நித்தம் நித்தம் பயத்தில் மாயும் அற்ப நரனா அவன்? அவன் ஏழுலகையும், அறிதுயிலிலே ஆண்டுகொண்டிருக்கும் நாரணன் அல்லவா? அவனால் முடியாதது ஒன்றுண்டோ?
தன்னிடம் மறைந்துநின்று போர் தொடுத்துக் கொண்டிருந்த கம்சனை, நேருக்கு நேர், ஒரு சுத்த வீரனாக சந்தித்து நியாயம் கேட்க வந்து கொண்டிருக்கின்றானா அவன்..? ஆஹா! ஆஹா! இந்த நாளுக்காகத் தானே நான் இத்தனை நாளும் ஏங்கித் தவங்கிடந்திருக்கிறேன்!
கண்ணைத் திறந்து, உயிரமுதம் பருகத் தொடங்கு முன்னமே, பெற்றோரை இழந்த பாவியல்லவா நான்! என்னை இந்த உலகத்தில் தவழவிட்டு, இன்றும் நேராக நடக்கமுடியாமல், கூன் விழுந்து, இருகால்களும் வலுவில்லாமல் ஊர்ந்து, தவழ்ந்து, பிறரின் ஏளனக் கண்ணில், நடக்கமுடியாமல் ஊன்றுகோலுடன் நடந்து, இல்லை என்னை நடக்கவைத்த என்னுடைய பாட்டி இல்லாமலிருந்திருந்தால், நான் புழுவாக எங்கோ சகதிக் காட்டில் மரித்துப் போயிருந்திருப்பேன்.
புலன்களால், உலகத்தை உணரத் தொடங்கிய நாளிலிருந்து, இன்றுவரை, என்னை வளர்த்தெடுத்து, என் நெஞ்சில், கண்ணனமுதத்தை நிதம் நிதமூட்டி, எனக்கும் இந்தப் பொல்லா உலகில், ஒரு இடத்தை உருவாக்கிக் கொடுத்தவள் என்னுடைய பாட்டி தான்!
கண்ணுக் கண்ணாக, நான் பெறாமலே, என் இதயக்குகையில், அந்தக் கருநீலக் குயிலின் கீதத்தைக் கேட்டுக் கேட்டு, பொத்திப் பொத்திவளர்த்து, நான் கணத்திற்குக் கணம் வலியிலும், மனவலியிலும், வாழ்வதே, அந்தக் கள்ளனின் கண்ணமுதைப் பெறத்தான்!
அவன் வருகிறான்! ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு விதமாய், அந்தச் சிறு பாலன் பேராபத்துகளை சந்தித்த வேளையிலும், அதை அவன் அனாயசமாய் வென்ற கதைகளைக் கேட்டு, பயமும், தெளிவும், இருளும், ஒளியுமாக மாறி மாறி என் நெஞ்சைத் தாக்கி நான் உருக்குலைந்ததும், உயிர்பெற்றதும் எனக்கும், அவனுக்கு மட்டும் தானே தெரியும்! அவன் இன்று என்னை நேரில் சந்தித்திட, என் அணையா தாயன்பின் அடர்த்தியில் தன்னைக் கரைத்திட அவன் வருகிறான்!
வளைந்த வலது முழங்காலை நேராக நிமிர்த்தி, தரையில் வேகமாக ஊன்றி, இடது காலை தள்ளி வைத்து, பாதத்திலிருந்து முதுகுத் தண்டில் ஊடேறி மண்டையைத் தாக்கும் வலியைப் பல்லைக்கடித்து விழுங்கி, ஊன்றுகோலைப் பற்றி நின்றேன்!
பாதாதி தேகம்வரையான பார்வைக் கோணத்தில், நிமிர முடியாமல், கண்களைச் சுருக்கி, வெளியைப் பார்த்தேன். கண்ணில் நீர் திரண்டது. கண்ணைத் தாக்கும் ஒளிக்கதிராலா, காலங்காலமாய் நிமிராமலே என் வாழ்க்கை கூன்விழுந்து, மண்பார்த்தே நடக்கும் இந்த அவல நிலையை நினைத்தா- என் கண்ணில்நீர் திரண்டது! அறியேன்!
ஆனால், இன்று என் வாழ்நாளில் உதித்தது பொன்நாள்! இன்று, என்னை, அவன், தன்னுடைய ரசவாதத்தால், பொன்னாக மாற்றும் புனித நாள்! இன்று என்னுடைய வலிகளையும், மனப்புண்களையும் ஆற்றி, புதியதாய் பிறக்கப்போகும் என்னை, எனக்கே அவன், அறிமுகப்படுத்தப் போகிற என்னுடைய உண்மையான பிறந்தநாள்!
என் ஆதுரமிக்கத் தனயன் என்னைக் கண்டு, கரையேற்றும் நாள்! இது நடக்குமா? என் நீண்ட காலத் துயரங்களைத் துடைத்தெறிய முற்படும் என் இனிய கனவிது! நடக்குமா? நானும் நடக்கும் என மனத்துள்ளலோடு, பாட்டியின் வலதுகரம் பற்றி அழுத்தி, அடிமேல் அடியெடுத்து நடந்தேன்!
மதுரா நகரமே அந்த அதிகாலையில் திரண்டு வந்து ஆரவாரமிட்டுக் கொண்டிருந்தது. சாலையெங்கும் சாமந்தியும், ரோஜாக்களும் தூவப்பட்டு, மலர்படுகையாக காட்சியளித்தது. தூரத்தே, சூரிய சந்திரர்கள் மெதுவாக, சுற்றிக் கூடியிருந்த கூட்டத்தின் பேரலைகளுக்கிடையில், தத்தளித்து மிதந்துவரும் தாமரை மலர்களைப் போல, அவர்களின் முகவரிகள், இலைகளுக்கிடையே பளிச்சிடும் சூரியக் கதிர்களாகத் தோன்றி மறைய, மதுராவாசிகள், முண்டியடித்து, பேரருட்செல்வங்களை வாரி அணைத்துத் தம்மோடு கொண்டு சென்றுவிட வேண்டும் என அலைபாய்ந்தனர்.
நானும், பாட்டியும், தட்டுத் தடுமாறி, தள்ளப்பட்டு, உந்தப்பட்டு, காலைவைக்க இடமில்லாமல், பாதங்களே சாலைப்படிகளாக, மேலேறி, கீழிறங்கி, வலியால் துடித்தும், மனம் கட்டுக்கடங்காமல் துள்ளியும், அந்த சனப்பேரலைகளில் நீந்தியவாறே, அவர்களைச் சென்றடைந்துவிட்டோம்.
சற்றே தூரத்தில், என் விடிவெள்ளி, பூரண சந்திரனோடு, தனது பக்தர்களின் தொடுதலையும், தொட்டுப் பார்த்த பரவசத்தையும், கிள்ளிப் பார்த்திடும் எத்தனிப்பும் கொண்டு அத்துமீறும் சனத்திரளிடையே, அலைகளில் துள்ளும் நிலவின் பிம்பமாக, பேரானந்தத்தோடு, அனைவரையும் அரவணைத்து, தவழ்ந்து வந்தனர்.
இதோ! இதோ! கைக்கெட்டும் தூரத்தில் கைத்தலநிறைகனி! கைப்பற்றிய பாட்டியின் பிடி தளர்ந்து, அவள் மக்கள்வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட, நான் தனித்து விடப்பட்டேன்! ஆனால், இல்லை! என்னை பக்தர்களின் கூட்டம் விடவில்லை!
“என் மகனே! கோமேதகமே! கருப்புச் சூரியனே! வாராமல் வந்த மாமணியே! என் கண்ணாளா!” எனக் கூவி அழைத்தேன். அவனுக்குக் கேட்கவில்லை! “கிருஷ்ணா! வாசுதேவா!” என்ற கோஷ்டிக் கானத்தில், என் குரல் அவனுக்கு கேட்டிருக்காது! என் குரல் எனக்கே கேட்டதா, எனச் சந்தேகம் வந்துவிட்டது!
என் குரலை அவன் கேட்காவிட்டால் என்ன? என் குரலை இத்தனை ஆண்டுகளாகக் கேட்காமலா அவன் என்னைக் காத்திட்டான்! இனிமேலும் என் அபயக் குரலைக் கேட்டா அவன் என்னைக் காக்க முற்பட வேண்டும்?
‘கண்ணா! கார்மேக வண்ணா! தேவகி மைந்தா! நான், உன்னைப் பார்த்துவிட்டேன்! நீ உன் கண்கொண்டு என்னைப் பாரடா! என் மேனி முழுவதும் உன் அருட்பார்வை கொண்டு என்னை அரவணைத்துக் கொள்ளடா!
ஒவ்வொரு சேட்டைக்கும், உன் அன்புத் தழுவலை, உன் வளர்ப்பு அன்னைக்கு வாரி வழங்குவாயே! என்னை ஒரு தடவை, ஒரேயொரு தடவை, அணைத்துக் கொஞ்சடா! என் முகவாயைப் பற்றி அவளிடம் செய்யாத தவறுக்கு கெஞ்சுவாயே, அதைப் போல, என்னைக்கொஞ்சடா! கிருஷ்ணா! கோவிந்தா! நான்மறை நாதா! இங்கே பாரடா! என் பக்கம் கொஞ்சம் பாரடா!’ என என் மனம் கெஞ்சியது.
அவன் மட்டும், அவனுக்குப் பிடித்த பக்தர்களின் கூட்டத்திலேயே அவன் சஞ்சரித்துக் கொண்டிருந்தான். நிமிர முடியாமல், சனக்கூட்டத்தில் சிக்கி மூச்சுத் திணறி, கால் வைக்கமுடியாமல் தடுமாறி நின்றபடியே, அவன் பளிங்கு முகத்தை காணவே, எம்பி, எம்பி, பார்த்தும் அவன் முகம் தென்படாமல், குனிந்து என் வலிமிகும் கால்களைப் பற்றி, மூச்சை இழுத்துவிட்டு, “கிருஷ்ணா! கிருஷ்ணா! கிருஷ்ணா!” என முனக ஆரம்பித்தேன். இனி இந்தக் கூட்டத்தில் அவன் முகம் பார்க்கக்கூட முடியாது என நினைத்து, எப்போதும் போல, அவன் பெயரை ஜபிக்க ஆரம்பித்தேன்.
அதேநேரத்தில், சட்டென்று புயல் ஓய்ந்தாற் போன்ற அமைதியும், என்னைச் சுற்றியிருந்தவர் விலகி நின்று வழிவிட்டதையும், உணராமல், கண்களை மூடிக்கொண்டு, அவன் பெயரையே உச்சரித்துக் கொண்டிருந்தேன்.
அப்போது ஒரு குரல், “மாலினி!” என அழைத்தது. இதுவரை என் பாட்டியைத் தவிர அந்தப் பெயரை யார் உச்சரித்தும் கேட்டதில்லை. எல்லோரும் என்னைக் கூனி என்றே அழைப்பார்கள். இப்போது யார் என் உண்மையான பெயரைச் சொல்லி அழைப்பது? அப்போதுதான், மடேரென புத்தியில் உறைத்தது எனக்கு! என் கண்ணாளன், என் கருங்குயில், என் கட்டிக் கரும்பானவன்! அவனா! அவனா! என்னை அழைத்தான்?
முதுகு நிமிர முடியாமல், கண்ணைச் சுருக்கிக் கொண்டு, மேலே பார்த்தேன் ‘பரிபூரணமாய், பரிபூரணமாக, பரிபூரணத்திலிருந்து பரிபூரணமாய், பரிபூரணத்திலிருந்து பரிபூரணத்தை எடுத்தாலும், மீதமும் பரிபூரணமாகவே விளங்கும், அந்த தேஜஸு மிக்க பரிபூரண முகத்தைக் கண்டேன்! கண்டேன்! காணாததைக் கண்டேன்! கனவிலும், நினைவிலும், பூஜித்து வந்த பரிபூரண வஸ்துவின் திருமுகம் கண்டேன்!’
அந்த ஆயிரம் சூரியர்களின் ஒளிகொண்ட அந்த முகம் என்பால், சற்றே குனிந்து, மீண்டும், “மாலினி!” என்றே அழைத்தது. கங்கையை மீறின புனிதமும், மலையாண்டியின் பாதியும் கொண்ட மலைமகளின் திருப் பெயரால் என்னை அழைத்தான், நான் தவம்செய்து பெறாத என் ஒரே பிள்ளை! ‘கண்ணா!கண்ணா! கண்ணா!’ என்று கதறி அழுதேன்.
“இதோ பார், மாலினி! அழாதே! நான் வந்துவிட்டேன்! நீ அழைத்ததனால் வந்துவிட்டேன்! இதோ பார்! என் கைகளைப் பற்றிக் கொள்! நிமிர்ந்து என்னைப் பார்!” என்றான். கோவர்த்தன மலையை, ஒரு விரலால், உயர்த்திப் பிடித்து, யாதவரைக் காத்த அந்தத் திருக்கரங்களைப் பற்றினேன். அவன், சகடாசுரனை எட்டி உதைத்த திருப்பாதங்களால், என் பாதங்களைப் பற்றினான். பின், என்னை உயர்த்தினான்!
ஜன்ம ஜன்மங்களாய், எல்லா இழிபிறப்புகளையும், பிறந்து, உளைந்து வந்த இந்த உயிரைத் தன்உயரத்திற்கு உயர்த்தினான்.என்னுடைய கூன் நிமிர்ந்தது! நேராக நின்று அவனின் குறும்பு விழிகளைச் சந்தித்தேன்! நேராக நின்று, கோபியர் தழுவிய அவனின் பரந்த தோள்களைக் கண்டேன்! நேராக நின்று, காலங்காலமாய் ஞானியரும், யோகியரும், தேவரும், நரனுலகும், சேவித்திடும் பொற்பாதங்களைத் தரிசித்தேன்!
“ஆஹா!” என பெருமலைப்பில், கண்ணால் கண்ட பேரதிசயத்தைக் கண்டு ஆரவாரித்தது பக்தர்களின் கூட்டம்! நான் அந்தக் கணத்தில் தான் மீண்டும் புதிதாய்ப் பிறந்தேன்! அவனின் ஒரு தொடுதலில், அந்தப் புனிதக் குரலில், அந்த பாச இழுப்பில், இதுவரை நானே காணாத பேரழகியாய் மலர்ந்தேன்!
“கண்ணா! இந்த இழிபிறவியைக் கரையேற்ற எனக்காக, மதுரை வந்து, என்னை ரட்சித்தாயே! கண்ணா! என்ன தவம் செய்துவிட்டேன் கண்ணா! என்னை ஆசிர்வதித்து வைகுந்தம் ஏக அருள் செய் கண்ணா!” எனக் கதறினேன்!
“மாலினி! இன்றோடு, உன் வல்வினைகள் தொலைந்தன, இன்னமும் மீதமிருக்கும் வாசனைகளால், இப்பூவுலகில் இருந்து, சேவைகள் செய்து, பின் என்னை அடைவாய்!” என அருளினான், அன்னையிணை அன்னவன்!

Leave a Response

Right Click & View Source is disabled.

error: Content is protected !!