கவிதை

தாய்நீதி…

125views
அத்தாவுல்லா
நாகர்கோவில்
பொய் நீதிகளை எல்லாம்
புறமோட்டிவிடும் இது
ஒரு புது நீதி…
கோயில்
தீப்பந்தத்துக்காக அல்ல
சுவன வாயில்
தாய் பந்தத்துக்காக…
அன்னையின்
காலடி சொர்க்கத்துக்காய்
தவமிருக்கும்
இரண்டு கூட்டுப் பறவைகளின்
ஏக்கங்கள்…
சவூதியின் நீதிமன்ற
நினைவுப் படுக்கட்டுகளில்
இது
ஒரு சத்தியக் காயம்…
அன்றும் இருவர்
தந்தைக்காக வழக்காடினார்கள்…
இன்று இருவர்
பெற்ற தாய்க்காக
வழக்காடுகிறார்கள்…

இது உலகமெங்கும்
முதியோர் இல்லங்களைத் திறக்கும்
மூடர்களின் புழுபூத்த மூளைகளுக்கு
மூலிகை நீர்ப்பாய்ச்சல்…

பங்கு வைக்க முடியாத
பொக்கிஷம் தாய்ப்பாசத்தின்
பாசம் பேசும் அற்புதம்…
இரு கண்களின் விழியிலும்
பரவசம் காட்டி
விலகமறுக்கும்
தாய்பறவையின்
தன்னேரில்லா நேசம்…
முதுமையைக்
காரணம் காட்டி..
முன்னர்ப் பணிகளின்
பட்டியல் நீட்டி…
தாய்ப்பாசத்தை தடுக்க முடியுமா…
இளமை வசந்தம்தான்
என்றாலும்
இளையவருக்கு மட்டுமே
தாய்ப்பாசத்தைப் பங்கிட்டு
ஒதுக்க முடியுமா…?
இவ்வளவு காலமும்
பெரியவர் பார்த்தீர்கள்…
இனி இருக்கும் காலங்கள்
இளையவர் பார்க்கட்டும்
என்று ஒரு தீர்ப்பை
எழுத முடியுமா?
தாய்ப்பாசம் என்ன
கடைவீதியில் வாங்கும்
பங்கீட்டுப் பொருளா…?
புதிய நீதி போல்தான்
தெரிகிறது
ஆனால் தாயின் உள்ளம்
புரிந்து கொண்ட நீதி போல்
தெரியவில்லை…
நீதியரசர் தீர்வு கேட்டு
மூத்தவர் துடிக்கிறார்…
“திறந்திருக்கும்
என் சுவன வாயிலைத்
தடை செய்து விட்டீர்களே” கதறுகிறார்..
“சுவனம் முழுவதும்
எனக்கே சொந்தமாகிறது”
மகிழ்ந்து பாடுகிறார் இளையவர்…
இது சண்டை பிடிப்பதற்காக
அல்ல…
தாயைப் பராமரிப்பதற்காக…
முதியோர் இல்லங்களுக்கான
மூடுவிழா மந்திரம்…
முதியவர் ஓராண்டு
இளையவர் ஓராண்டு என்று
நீதி வழங்கி இருக்கலாமோ…
நெஞ்சம் துடிக்கிறது…
ஏனென்றால்
நமக்கும் சுவனம்
நம் தாய்ப்பாதத்தில்
தானே…

 

Leave a Response

Right Click & View Source is disabled.

error: Content is protected !!