கவிதை

செந்தூரப் பொட்டு

25views
அத்தாவுல்லா
நாகர்கோவில்
சோபியா குரேஷி
எனும் குளிர் நிலா…
இந்திய தேச
வரலாற்று நிகழ்வுகளில்
இவர்தான்
இப்போது
புது உலா….
பொட்டு வைக்காதவரைக் கொண்டு
ஒரு தேசத்துக்கே
பொட்டு வைக்கப்பட்டு இருக்கிறது…
இஸ்லாமியரை
பகைவராகச் சுட்டும்
துரோகிகள் தலையில்
குட்டு வைக்கப்பட்டிருக்கிறது
அடுப்படிக் கையாக
இல்லாத
தேச ராணுவத்தின்
படிப்பறிவுக்கை…
படிப்படியாக எதிரிகளின்
ஒன்பது கோட்டைகளைத்
தகர்த்து இருக்கிறது…
உலகத்தின் பார்வையை
அவர் பேரில்
நகர்த்தி இருக்கிறது…
குரேஷி –
சிந்தூர் வைக்காத
இஸ்லாமியக் குடும்பத்தின் இந்தூர் ..
எதிரிகளுக்கு நொந்தூர் …
குரேஷி –
உள் மடித்துக் கட்டிய
கொண்டையின் ஊசிப்புறம்
ஏவுகணையின் இருப்பிடமா?
ஆனால்
அவர் கருவிடமே
இஸ்லாமியத் தாய் தந்தையர்
ஊட்டி வளர்த்த
தேசப்பற்றின் உறைவிடமா?
ஒரு வரைபடம் கொண்டே
மறைபடம் காட்டிய
எதிரிகளின்
மறைவிடங்களைத் தகர்த்து
அவர்களுக்கு
மரணக் குழிகளை உறைவிடமாக்கிய
குரேஷி –
வீரத்தின் வார்ப்படம்…
நன்றிகள் வீரப்பெண்ணே …
இந்த தேசத்திற்கு
உன் மீதான
நன்றிகள் அதிகம்…
சிறு நரிகள் சில
ஆங்காங்கே ஊளையிட்டாலும்
சற்றே பொறு…
இந்திய மக்கள் நெஞ்சத்தில்
இனி நீ ஒரு கல்வெட்டு…
உன் வீரம் போற்றி எழுதும் நாளை சரித்திர
இந்திய வரைபடம்…
நாளையே வரலாம்
உன்னைப் பற்றிய
ஒரு திரைப்படம்….
மகிழ்ச்சி கொள்
வீர மகளே…
எந்தப் புனித நதி நீராலும்
இனி இந்த
செந்தூரப் பொட்டை
அழிக்கவே முடியாது….

Right Click & View Source is disabled.

error: Content is protected !!