15views
அத்தாவுல்லா
நாகர்கோவில்.
இந்தப் பூவுலகில்
உயிர்ப்பு சக்தி அவள்தான்…
உயிர் தந்து பழக்கப்பட்டவள்
ஒவ்வொரு உயிரிலும்…
உயிர்ப்பிப்பதிலும்… உயர்த்துவதிலும்…
ஒன்றும் தெரியாமல்
பின் நிற்பதிலும்…
எல்லா தவங்களும்
தாய் பெயரை முன்மொழிகின்றன..
எல்லா வரங்களும்
அவள் காலடியில் குவிகின்றன…
சாந்தி மய சமாதானத்தின் பேருருவாய்
அவள் அமைதியாக இருக்கிறாள்…
பல்வேறு வடிவங்களின்
பரிணாமங்களை நீங்கள்
அவளுக்குள் வைக்கிறீர்கள்…
தாயாக…
தாரமாக….
மகளாக …
பேத்தியாக….
அவள் எல்லா சக்திகளையும் பூட்டிய
மகாசக்தியின் அம்சமா?
அவள் தான் ஏதேன் தோட்டத்தில்
ஆதத்தின் அருந்துணையான ஆரம்பத்தேன்….
ஒருவருக்கொருவர்
ஆடையாய் இருந்து
கனி கடித்த வேளையில்
கணவர் மூடிக்கொண்ட போது
முகிழ்த்த ஞானத்தின்
இதழ் ஞானம் அவள்தான்…
அந்த ஒளிச்சிதறல்தான்
இந்த உலகெங்கும்….
கருசுமந்த களைப்பும் தெரியாமல்
உருவேற்றிக் காக்கும்
உயர் வம்சமவள்…
சுவனத் தோட்டத்தின் பூதான் …
இந்த புவனத்
தோட்டத்திலும்
அவள் பூவானாள்…
தாயானாள்… காயானாள்… கனியானாள்…
புயலாகவும் செய்கிறாள்…
புயலாக்கவும் செய்கிறாள்..
புதுப்பித்தல் உண்டு
போக்கிவிடுவதும் உண்டு…
புன்னகை பூக்கவும் செய்வாள்
புது வாளாய் பூமி கீறவும் செய்வாள் ..
சம உரிமைகளின் சத்தியப் புரட்சி..
அவளால் தான் இந்த பூமிக்கு மலர்ச்சி…
அவள்தான் அந்தப்
பெண்…பெண்… பெண்….
add a comment