98views
தன்னின் கனவுகளை தன்னாயுள் வரையே
தன்னுள் சுமப்பவள் துன்பத்தை விரட்டி இன்பம் நிலைபெற என்றென்றும் போராடி
வென்றே தீருவாள் வாகை சூடிடவே!
அனலாய் புனலாய் அறிவால் அவனியிலே
தனித்துத் தெரிவாள், துணைவ னின்றியே
தனியாய் வாழும் சக்தியைக் கொண்டாலும்
தன்னலம் கருதாமல் துணையுடன் இணைந்திருப்பாள்
வீட்டில் அடைத்து வதைத்தோரும் வியந்திட
பூட்டிய அறையில் பொசுக்கியோரும் வாழ்த்திட
பாட்டன் பாரதிப் பெண்ணாய் வாழ்ந்திட
காட்டு ஆறாய் களத்தில் இறங்கிடுவாள்!
நிலவில் மாந்தர் நிலைநாட்டி வாழ்வர்
இலகுவான மனதால் இல்லறம் செய்வாள்
அலட்சியம் யில்லா ஆவேசம் கொண்டே
இலட்சியப் பெண்ணாய் என்றும் வலம்வருவாள் !
சிந்தைத் தெளிவுடன் செவ்வனே நடந்து எந்தப் பகையையும் எதிர்த்து நின்றிடுவாள்
தந்தையோ தாயோ தடுக்க நினைத்தாலும்
முந்தி நிற்பர் மாண்புறு மகளிரே!
கீதா
add a comment