கவிதை

பரங்குன்றம் எனும் ஒற்றுமை மன்றம் …

19views
அத்தாவுல்லா
நாகர்கோவில்
அறுநூறு ஆண்டுகள்…. தோழமை உணர்வுகள்…. பரங்குன்றம் –
அன்றே
பலரும் அணைந்த
ஒற்றுமை குன்றம் …
சிக்கந்தர் பாதுஷா தர்கா
இஸ்லாமியப் பெரியார்
அடக்கவிடமாம்….
அதற்காக
குன்றத்து வேலன்
ஒரு நாளும் கோபித்துக் கொண்டதே இல்லை…
இருவரும்
இரு வேராய் இருந்தும் இதுவரை அங்கே
எழவில்லை
பிரிவின் வேர்…
அவரவர் உரிமை
அவரவர் வழிபாடாய்
இருவர் பாடும் இனிய பாடம்… பரங்குன்றம்
இஸ்லாமும் இந்துவும்
ஒன்று சேர்ந்து இசைக்கும் மன்றம்
ஒற்றுமை கீதம் பாடும் மன்றம்…
இரு சமயத்தாரின்
இன்னிசை முரசு…
பார்த்தே கடந்து போனது
பற்பல அரசு …
நினைத்துப் பார்த்தால் இஸ்லாமியப் பெரியார்கள் அடக்கத்தலங்கள் அருகே அப்பக்கமோ இப்பக்கமோ
கோயிலும் ஒன்று குடியிருக்கும் சில இடங்களில் மாதா கோயில் மணி இசைக்கும்….
சமய நல்லிணக்கம்
இந்த மண்ணின் மணம் ….
அதில் பிளவு வராது பேணும் மக்கள் மனம்…
ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்றே முழங்கிடினும் தமிழகம்
அனைத்துத் தரப்பினரும்
இணைந்து வாழும் சமத்துவ பூமியாம்…
எப்படி…?
இப்படித்தான்….
அவரவர் கோயில்
அவரவர் ஆலயம்
அவரவர் மார்க்கம்
அவரவர் புறத்தாம்….
வேலன் கோவில்
அறுசுவை உணவுக்கு
தர்காவின்
ஆட்டுக்கறிதான்
கூட்டுக் கறி …
நீங்கள்
வேற்றுக்கறி
தருகிறேன் என்று
வெடி வேட்டுப் பலி
தந்து விடாதீர்கள்
வீணர்களே… வெளியேறிவிடுங்கள்
இந்த முற்றத்திலிருந்து…
கெடுத்து விடாதீர்கள் மதவாதிகளே…
இதுவரை பார்க்காத
மனித ரத்தத்தை
இனிமேலும் அவர்கள் பார்க்கவே வேண்டாம்…
அவர்களை அவர்கள் போக்கிலேயே
விட்டுவிடுங்கள்…
உங்கள் வீண் கோபங்களையும் வெத்துக் கோஷங்களையும் கூராயுதங்களையும்
மண்ணில் புதையுங்கள்…
அவர்கள் அவர்களாகவே வாழட்டும்….
இந்தத் தமிழ் மண்ணில்
மக்கள் இரத்தம் வேண்டாம் உங்கள் வேற்றுமைக் குரல்
மதவெறி பித்தமும்
சத்தமும் வேண்டாம்…

Leave a Response

Right Click & View Source is disabled.

error: Content is protected !!