24
பருத்திக்கொட்டை புண்ணாக்கு மட்டும் இல்லை
சில நேரம் அகத்திக்கீரை கட்டுமாக
செல்லமாகத்தான் இருந்தது எங்கள் லட்சுமி..
அம்மாவின் அதிகபட்ச வெள்ளிக்கிழமைகள்
சாம்பிராணி வாசத்துடன் மனக்க ஆரம்பிக்கும்
கடைக்குட்டி தம்பிக்கு மாற்றந் தாயாக
லட்சுமி மாறிப்போனதில் ஒரு சுற்று
பெருத்தே விட்டது எங்கள் வீடு அப்போது …
கல்யாண சீதனமாக வீட்டிற்கு வந்ததிலிருந்து
உழைத்துக் கொண்டுதான் இருக்கிறது
அம்மாவைப் போல லட்சுமி…
பால்காரம்மா ஊரை இப்படி அழைக்க
நாங்கள் மட்டும் லட்சுமி அம்மா என்று அழைக்க ஆரம்பித்தோம் …
பல நேரம் லட்சுமி கழுத்தை கட்டிக்கொண்டு
அம்மா அழுது பார்த்திருக்கிறேன் …
அப்பாவின் பொறுப்பற்ற தனத்தில்
விற்கும்படியானது எல்லாமும்…
சீம்பால் வாசனையில் முருங்கைக்கீரை போட்டு
நெய்யுருகிய மணத்தில் வந்து போகிறது லட்சுமியின் ஞாபகம்…
மூக்கணாங்கயிறு மட்டும் அக்கா வைத்திருக்கிறாள் …
உறவுகளின் சதுரங்கத்தில் இந்த பொங்கலுக்கு
சின்னவன் வீட்டில் அம்மா…
பாக்கெட் பாலில் நான் தேநீர் குடிக்க
பாட்டில் பாலில் அம்மா லட்சுமியை தேடிக் கொண்டிருக்கிறாள்..
நாகா
add a comment