கவிதை

பொங்கல் கவிதைகள் : 1

39views
நிறைய கரும்பும் கொஞ்சம் மஞ்சள் கிழங்குமாக
உள்நுழையும் அப்பாவை தொழுவதிலிருந்து
குரலெழுப்பி வாஞ்சையாய் விசாரித்த லட்சுமி ….
கொஞ்சம் வெண்பொங்கலும் நிறைய பூசணிக்காயுமாக
வளையல் சத்தத்தில் படையலிடும் அம்மாவை
கழுத்துமணி குலுங்க சுற்றிவந்த குழந்தையாக ராஜி …
பத்தாயத்தில் நிரம்பிய காணிநிலத்தை
அளந்துக் கொட்டிக்கொண்டிருக்கும் தம்பியின்
விளையாட்டு தோழனாக மாறியிருந்த கருப்பன் …
வழக்கமாய் பொங்கல் வைக்கும் களத்து மேட்டில்
வயக்காட்டிலிருந்து விதைநெல்லுடன் வந்த அக்கா…
புழுதியில் படிந்த தலையை சிலுப்பிக் கொண்டு
வரிசையில் நிற்கும் சின்னானின் துண்டில்
முகம் துடைத்துக்கொண்டு பனங்காய் வண்டியுடன்
இடுப்பு டிராயரை விழுந்துவிடாமல் பிடித்துக்கொண்டு நிற்கும் நான்…
ஒரு கருப்புவெள்ளை புகைப்படத்தில்
இதெல்லாம் பதிவாகியிருக்க உழவு நிலத்தை
யாரோ ஒருவருக்கு பதிவு செய்து விட்ட
உங்கள் அப்பாவின் நினைவில்
நீங்கள் பொங்கல் கொண்டாட நேர்ந்தால்
நினைவுகளுக்கு வெள்ளையடிக்கலாம் தப்பேயில்லை…
நாகா

Leave a Response

Right Click & View Source is disabled.

error: Content is protected !!