56
சுனாமி,
காலனின் பினாமி!
அகலக் கால்வைத்த
ஆழிப்பேரலையால் – தமிழ்க்கரையின்
நீளம் பார்த்தது – மரணங்களின்
நீலம் பூத்தது – மறக்க முடியா
ஓலம் கேட்டது.
2004 டிசம்பர் இருத்தியாறு.
பல்லாயிரக்கணக்கான உயிர்கள்
புல்லாகிப்போகுமெனக் கண்டது யாரு?
கடலடியில் பாறைத் தட்டுகள் இடறியதாம் – அதற்கு
இந்தோனேஷியாவில் கோபித்துக் கொண்டவள்
இங்கு வந்து சீறிவிட்டுச் சென்றாய் – விதிகளைத்
திருத்தி, சீவிவிட்டுச் சென்றாய் – காலனை
எங்கள் மீது ஏவிவிட்டுக் கொன்றாய்.
பல்லுயிர் ஓம்பும் பைந்தமிழ் நாட்டில்,
பல்லுயிர் காவும் கண்டோம் – உன்
காலடியில் வீடமைத்து வந்தவர்களை
ஏழடிக்கு ஏறி வந்து, கொன்றதென்ன நியாயம்?
தட்டங்கே கெட்டதனால்,
தட்டுக்கெட்டுப் போச்சுதிங்கே.
தாயிருந்தா தந்தையில்லை.
தகப்பனைக் கண்டால், தாயைக் காணோம்.
தம்பதி வந்துவிட்டால், பிள்ளைகள் இல்லை…
பிள்ளைகள் தேடியும் பல பெற்றோரைக் காணோம்.
கூடி வாழ்ந்த குடும்பங்களின்
கோடுகூடக் காணோம்.
வலைவீசி வாழ்ந்தோரை
அலைவீசிச் கொல்வதென்ன கோலம்?
படகில்லை, பணமில்லை – வேய்ந்திருந்த
குடிசை ஒன்றில்லை – குடும்பத்தில்
இழப்பின்றி எதுவுமில்லை.
நிவாரணம் மட்டும் நம்பி
நிர்க்கதியாய் நின்றதென்ன மாயம்?
பள்ளிக்கு இடைநிறுத்தாமல்
வரச்சொன்ன வாத்தியார் வாழ்க்கைகூட
இடைநிறுத்தம் ஆகிடுச்சு.
கத்தி எடுத்தவன் கத்தியிலே சாவான்
என்ற உண்மை,
கடலுக்கும் பொருந்திப் போயிடுச்சு.
கடலும் கத்தி சுத்தி கொன்னுடுச்சு.
இதோ இப்போதான் நடந்ததுபோல்
இருந்தாலும் – இருபது ஆண்டுகள்
நொடிப்போல ஓடிடுச்சு – நீ
கலைத்துப்போட்ட தாக்கம் மாறவில்லை.
கனத்துப் போயிருக்கும் ஏக்கம் தீரவில்லை.
இழப்புகள் எல்லாமே
சொன்ன பாடம் ஒன்னுதான்.
இயற்கையை மீறினால்
சொல்லும் பாடம் நின்னுதான்.
சாமரம் வீசவும் தெரியும் அலையாய் –
பூமரங் வீசவும் தெரியும், பனையை.
பாரபட்சமின்றி,
தூக்கி எறிந்தாய் தூரபட்சம்.
பருவத்தை மாற்றினால் –
பூமித்தாய் தன்
உருவத்தை மாற்றுவாள்.
வெள்ளமோ, புயலோ,
நிலநடுக்கமோ, ஆழிப்பேரலையோ
எந்த வகையிலும் சினம் காட்டுவாள்.
பொங்கி எழுந்து குணம் காட்டுவாள்.
இயற்’கை” வை(த்)தால் என்னவாது?
இயைந்து வாழ்வோம், இனியாவது!
இளங்கவி. அ.நைனார் முஹம்மது அன்சாரி,
திருச்சி.
add a comment