தமிழகம்

திருச்சியில், வாப்பா நாயகம் ஜமாலிய்யா அஸ்ஸய்யித் கலீல் அவுன் மவுலானா நாயகம் அவர்களின் முதலாம் ஆண்டு கந்தூரி சந்தனக்கூடு உரூஸ் விழா!

144views
நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் 34ஆம் தலைமுறைத் திருப்பேரரும், முத்தமிழ் மெய்ஞ்ஞானியும் , வாப்பா நாயகம் என்று எல்லோராலும் அன்போடு அழைக்கப்படுகின்ற, ஜமாலிய்யா அஸ்ஸய்யித் கலீல் அவ்ன் மவுலானா அல்ஹஸனியுல் ஹுஸைனிய்யுல் ஹாஷிமிய் நாயகம் (கத்தஸல்லாஹு ஸிர்ரஹுல் அழீம்) அவர்களின் முதலாம் ஆண்டு கந்தூரி சந்தனக்கூடு உரூஸ் விழா, திருச்சி மதுரஸத்துல் ஹஸனைன் ஃபீ ஜாமிஆ யாஸீன் அறபுக்கல்லூரி வளாகத்தில் அமையப்பெற்றுள்ள சங்கைக்குரிய வாப்பா நாயகம் தர்கா ஷரீஃபில், இன்று (21.12.2024) சீரும் சிறப்புமாக நடைபெற்றது.
விழாவுக்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் 36ஆம் தலைமுறைப் பேரரும் ஜாமிஆ யாஸீன் அறபுக்கல்லூரி தலைவருமான ஜமாலிய்யா அஸ்ஸய்யித் யாஸீன் அலி மவுலானா அல்ஹஸனியுல் ஹுஸைனிய்யுல் ஹாஷிமிய் நாயகம் அவர்கள் தலைமை தாங்கினார்கள். நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் அஹ்லுல்பைத் திருக்குடும்பத்தார், தரீகத்துல் ஹக்கிய்யத்துல் காதிரிய்யா கலீபாக்கள் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசியத் தலைவர் பேராசிரியர் கே.எம். காதர் மைதீன், பன்னாட்டுத் தமிழுறவு மன்ற உலக அமைப்பாளரும் தமிழ் உரிமைச் செயற்பாட்டாளருமான பெருங்கவிக்கோ வா.மு.சேதுராமன், சுன்னத் ஜமாஅத் பேரியக்கத் தலைவர் முனைவர் மௌலவி ஷைகு அப்துல்லா ஜமாலி, மற்றும் பலர் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டனர்

கடந்த 11.12.2024 புதன்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கிய கந்தூரி விழா, இன்று (21.12.2024) சனிக்கிழமை, ராத்திபதுல் ஹக்கிய்யத்துல் காதிரிய்யா என்னும் திக்ர் மஜ்லிஸ் (இறை உச்சாடனம்) மற்றும் பிரார்த்தனைகளுடன் நிறைவு பெற்றது.
விழாவின் அடுத்த நிகழ்ச்சியாக, ஏகத்துவ மெய்ஞ்ஞானத் தமிழ்ச் சங்கத்தின் மூலம் தயார் செய்யப்பட்டு, ஏகத்துவ மெய்ஞ்ஞான சபை வெளியீடாக, சங்கைக்குரிய வாப்பா நாயகம் அவர்களின் ஒப்பற்ற தமிழ்த் தொண்டைப் பறைசாற்றும் “நினைவுக் களஞ்சியம்” சிறப்பு மலர், அருமை வாப்பா நாயகம் ஜமாலிய்யா அஸ்ஸய்யித் யாஸீன் அலி மவுலானா அல்ஹஸனியுல் ஹுஸைனிய்யுல் ஹாஷிமிய் நாயகம் அவர்களால் வெளியிடப்பட்டது.

சிறப்புக்குரிய முதல் பிரதிகளை, சங்கைமிகு ஜமாலிய்யா அஸ்ஸய்யித் ஸாஜித் அலி மௌலானா அவர்களும், சங்கைமிகு ஜமாலிய்யா அஸ்ஸய்யித் வாரிஸ் அலி மௌலானா அவர்களும், சங்கைமிகு அஸ்ஸய்யித் ஸாஹித் அலவி மௌலானா அவர்களும், திருமுல்லைவாசல் சங்கைமிகு அஸ்ஸய்யித் சைய்யத் அலி மௌலானா அவர்களும் பெற்றுக்கொண்டார்கள்.
அடுத்த பிரதிகளை, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசியத் தலைவர் பேராசிரியர் கே.எம். காதர் மைதீன் அவர்களும், சுன்னத் ஜமாஅத் பேரியக்கத் தலைவர் முனைவர் மௌலவி ஷைகு அப்துல்லா ஜமாலி அவர்களும், பன்னாட்டுத் தமிழுறவு மன்ற உலக அமைப்பாளரும் தமிழ் உரிமைச் செயற்பாட்டாளருமான பெருங்கவிக்கோ வா.மு.சேதுராமன் அவர்களும் பெற்றுக்கொண்டார்கள்
அடுத்த பிரதிகளை, ஏகத்துவ மெய்ஞ்ஞானத் தமிழ்ச் சங்க இணைச்செயலாளர் அதிரை எஸ். ஷர்புத்தீன் ஹக்கிய்யுல் காதிரிய் அவர்களும் ஷாஜஹான் ஹக்கிய்யுல் காதிரிய் அவர்களும், சிங்கப்பூர் அப்துல் சுபஹான் ஹக்கிய்யுல் காதிரிய் அவர்களும், ஏகத்துவ மெய்ஞ்ஞான சபை இந்தியத் தலைவர் ஆலிம்புலவர் மௌலவி எஸ். ஹுஸைன் முஹம்மது மன்பஈ ஹக்கிய்யுல் காதிரிய் அவர்களும், ஏகத்துவ மெய்ஞ்ஞானத் தமிழ்ச் சங்கச் செயலாளர் கவிஞர் கிளியனூர் இஸ்மத் ஹக்கிய்யுல் காதிரிய் அவர்களும் திருச்சி பாசன மேலாண்மை பயிற்சி நிலைய நூலகர் இளங்கவி நைனார் முஹம்மது அன்சாரி ஹக்கிய்யுல் காதிரிய் அவர்களும் பெற்றுக்கொண்டார்கள். நினைவுக்களஞ்சிய வெளியீட்டு நிகழ்ச்சியை ‘நான் மீடியா’ RJ நாகா அவர்கள் தொகுத்து வழங்கினார்கள்.
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசியத் தலைவர் பேராசிரியர் கே.எம். காதர் மைதீன், பன்னாட்டுத் தமிழுறவு மன்ற உலக அமைப்பாளரும் தமிழ் உரிமைச் செயற்பாட்டாளருமான பெருங்கவிக்கோ வா.மு.சேதுராமன், சுன்னத் ஜமாஅத் பேரியக்கத் தலைவர் முனைவர் மௌலவி ஷைகு அப்துல்லா ஜமாலி, ஆகியோர் சங்கைக்குரிய வாப்பா நாயகம் அவர்களின் அஹ்லுல் பைத் சிறப்புகள், தமிழ்த்தொண்டு, மெய்ஞ்ஞானப் புரட்சி, பன்முக ஆளுமை உள்ளிட்ட பொருண்மைகளில் வாழ்த்துரை வழங்கினார்கள்.
விழாவில், இலங்கை, சிங்கப்பூர், மலேசியா, துபை, குவைத், கத்தார், சவூதி அரேபியா உள்ளிட்ட வெளிநாடுகளிலிருந்தும், திருச்சி, திண்டுக்கல், மதுக்கூர், சென்னை, ஈரோடு, பெரம்பலூர், மதுரை, மேலூர், பெரம்பலூர், மன்னார்குடி, பேராவூரணி, தஞ்சாவூர், அதிராம்பட்டினம், வழுத்தூர் உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு ஊர்களிலிருந்தும் ஆயிரக்கணக்கான சீடர்கள், பக்தர்கள், அன்பர்கள், மார்க்க அறிஞர்கள் , ஜாமிஆ யாஸீன் அறபுக்கல்லூரி பேராசிரியர்கள், மாணவர்கள், யாஸீனிய் மவுலவிகள் பேரவை மவுலவிமார்கள் திரளாகக் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியில், உலக அமைதிக்காகவும் மனித நேயம் தழைக்கவும் சமய நல்லிணக்கம் மேம்படவும் உலக மக்கள் யாவரும் ஒரே உள்ளமை தத்துவத்தை உணர்ந்துh ஒருமைப்பாட்டுடன் வாழ்வும், பசி, பணி நீங்கி சுபிட்சம் நிலைக்கவும் பிரார்த்திக்கப்பட்டது.
செய்தியாளர் : அ.நை.மு. அன்சாரி, திருச்சி

Right Click & View Source is disabled.

error: Content is protected !!