28
எங்கள் நாட்டில் பெருமைகளாய் இருக்கும் நாட்கள் விடியல்களாய்
பிறக்கும் நாளெல்லாம் கோள் பெயராய் குறிக்கும் வழக்கில் தமிழ் பெயராய்..
இருக்கும் நாட்கள் போகின்றனவே இதற்கும் என்னவோ உரிமைகளோ?
மா திங்கள் தோறும் வழிபாடாய் மலர்ந்த காலங்கள் ஏன் போகின்றனவாம்?
ஆண்டுகள் ஆண்டுகள் பலப் பலவாய் அதுவும் தாண்டி யுகம் யுகமாய்..
கடந்து மண்ணில் கடல் நிலமாய் கரையேறிய எங்கள் குலம்அறிவாம்!
இன்பத் தமிழ்நிலம் இடையூரால் இழந்தது தானே வரலாறாம்..
அறிய முயன்றால் அரசியலே.. அடுத்தவர் வந்திங்கு பயனுறவே..
தாழத் தாழ பலராலே தாங்குவார் முயன்றும் பழிபோலே:
சங்கம் வைத்து தமிழ் வளர்த்து தாயாய் அவளுக்கு அரங்கமைத்து
உயிரும் மெய்யும் உடலமைத்து உண்ணவும் உடுத்தவும் சுகமளித்து
காவல் நின்று களமமைத்து கல்விக்கூடமாய் நாடமைத்து.
தொன்று தொட்டே எம் மன்னர் சோழர் சேரர் பாண்டியராய்
சங்கம் அமைத்தே புலவர்களும் செந்தமிழ் படைத்தார் உலகுணர்ந்தும்..
சொல்லா சேதி எதுவுமில்லை சுகம் சுகம் எனவே இல்லறமும்
விட்டார் புகழும் பொன் பொருளும் வேற்றுமையின்றி இறைபற்றும்!.
மொழிந்தார் புலவர்கள் சித்தர்களாய் பொறுப்புடன் வாழ வள்ளல்களாய்
எங்கள் மண்ணே ஆளிடமாய் ஆண்டது புகழ்பெற வாழ்க்கையும் ஆம்
அறிவை படைத்ததுநம் தமிழ் மொழியாய் அதனுள் தானே இலக்கியங்களாய்..
சூரியன் கண்டவர் நிலா வொளியால் நீள அளந்தனர் வான்வெளியாய்..
இருளாய் விண்ணகம் மறைத்து நிற்க எரியும் விண்மீன் கூடி சிரிக்க..
அகல அகல அகல் விளக்காய் ஆய்ந்து சொன்னார் எரிமீன்கள் வகையாய்
பெயரும் இட்டார் தமிழில் நின்று இருக்கும் அது நம் பஞ்சாங்கமாய்!
மேலும் கீழும் ஏழுலகாம் எத்தனை எத்தனை கதை கதையாம்
எல்லாம் மறந்தது சிறு ஒளியால் என்பது போல் நாம் மறந்தோமே…
நாளும் நாளும் தேய் பிறையாய் நாமும் மறைந்தோம் சிலர் பொய்யால்..
ஆக்கமும் ஊக்கமும் தமிழரென்றே அடைய வருமே வெற்றிகள் நின்றே!
தூக்கமும் விழிப்புமே உயிர்களுக்கு நன்றே துணிய விழிப்போம் தமிழர் என்றே!
காக்கும் பொறுப்பாய் தமிழில் நின்றே கடமைகளாற்றுவோம் பகைகளை வென்றே!
பாவலர் மு இராமச்சந்திரன்
தலைவர் – தமிழர் தன்னுரிமைக் கட்சி.
add a comment