18
வாத்தியார் பொண்டாட்டி சாந்தி ராத்திரி படுத்தவ காலைல எந்திரிக்காததை பார்த்த பக்கத்துவீட்டு ராமம்மாள் ,
சாந்தி …..சாந்தி ….என்று அதை பிடித்து உலுக்கினாள் .
சாந்தியின் அது ராமம்மாள் பேச்சை கேட்கவில்லை .
அவள் உலுக்கியதால் உடல் லேசாக ஆட்டம் கொடுத்தது . உடல் சில்லிட்டு போயிருந்தது.
“அய்யய்யோ” என்று பீரிட்ட குரல் கேட்டு எதுத்த வீட்டிலிருந்த சாந்தியின் தங்கை லட்சுமி
“என்னாடி என்னா….” என்று அலறி வீட்டுக்குள் பாய்ந்தாள்.
சாந்திக்கு 60 வயதிருக்கும் புருஷன் செத்துபோய் பல வருஷ மாச்சு !
இந்த வயதிலும் பக்கத்துல இருக்கும் அரிசி ஆலையில வேலைக்கு போய்க்கொண்டு கஞ்சி குடித்து வாழ்க்கையை ஓட்டிக்கொண்டு இருந்தாள்.
அவளுக்கு ரண்டு வயசுல ஒரு பையன் இருந்தான் .
வாத்தியாரு திண்டிவனம் சந்தையில தோளில் பையன தூக்கிக்கொண்டு போயி உப்பு புளி வாங்கப்போனவரு , தோளிலிருந்து பையன எங்க, எப்ப, இறக்கி வச்சாருன்னு
தெரியாம வீட்டுக்கு வந்த பிறகு, புள்ளய காணொமினுட்டு பொண்டாட்டியும் புருசனும்
ஐயோ ஐயோ என்று அரற்றிக்கொண்டே வாயிலும் வயிற்றிலும் அடித்துக்கொண்டு ,
மீண்டும் பஸ் ஏறி திண்டிவனம் போய் சந்தைக்கு போய் கட கடயாய்
தேடி கண்டவரையும் , காணாதவரையும் எம் புள்ளய பார்த்தீங்களா ?
நீங்க பார்த்தீங்களா ? என்று தேடித் தேடி எங்கும் கிடைக்காமல் ……
“இங்க ஒரு புள்ள அழுதுச்சு ……”
“அதோ அங்க ஒரு பையன் அழுதுகிட்டு இருந்தான்…….”
என்று மேம்போக்காக பார்த்தவர்கள் சொல்ல,
யாரோ ஒருவர் போலீஸ் ஸ்டேஷனுல போய் பாருங்க என்று சொல்ல……,
ஒருதகவலும் இல்லாம கம்பிளைன்ட் எழுதிக்குடுத்து வந்ததுதான் மிச்சம் .
பயபுள்ள போனயிடம் தெரியல . புள்ளய தொலச்ச பாவி! சண்டாள பாவி!! என்று புருஷனை வைதும் அவன் முகத்திலும் முதுகிலும் மாறி மாறி அடித்து புலம்பினாள் சாந்தி .
காணாமல் போனவன் போனவன் தான் . வருடங்கள் ஓடின .
குழந்தையை பறிகொடுத்து விட்ட ஏக்கத்துலேயே வாத்தியார் மன அழுத்தத்திற்கு உட்பட்டு நடைப்பிணமாக வாழ்ந்து காலமானார் .
புருஷனும் இல்லை ! புள்ளயுமில்லை .! ஒற்றை உயிரை பிடித்துக்கொண்டு ஏன் வாழுறோம் என்று வாழ்ந்தவ சாந்தி . இதோ அவளும் போயாச்சு .!!
லட்சுமி வீட்டுக்குள் இருந்தவற்றை எல்லாம் ஓரமாக ஒதுக்கி வச்சு ஒரு பாயை எடுத்து ராமம்மாளை கொண்டுஐயோ அக்கா என்று கூவி உடலை தெற்கு வடக்காக பாயில் போட்டாள்.
நேற்று இரவே சாந்தி எதுவும் சாப்பிடவில்லை போலும் அவள் ஊற்றிவைத்த தோசை அப்படியே இருந்தது .
வீட்டுக்கு வெளியே வந்தலட்சுமி தலை முடியை அள்ளி முடிந்தபடியே அக்கம்பக்கம் இருந்த குடிசைகளுக்கெல்லாம் தகவல் சொல்லி அனுப்பினாள்.
ஏ ! குட்டையா !! என்று யாரையோ கூப்பிட்டாள்.
யாக்கவ்!! என்று ஒருவன் ஓடிவந்தான் .
இங்க பாரு அக்கா செத்துப்போச்சி .
ரண்டு வயசு புள்ளய தொலைச்சுப்புட்டவ புருஷனும் இல்லாம கெடந்தவ ! ஒரு சொகமும் காணாதவ !
பாடைல ஏத்தும்போது நல்லா அனுப்பிவைக்கணும் .!!!
நீயே போயி கோவிந்தன் அண்ணன்கிட்ட சொல்லி அரிசி ஆலைல சீட்டு புடிச்ச பணம், அவ செத்துட்டான்னு சொல்லி கொண்டாந்து கொடுக்கச்சொல்லு . அப்பிடியே மயானக்கரையில சொல்லிப்பிடு .
கேள்விப்பட்டு ராஜா அண்ணன் வந்தாரு .
அண்ணே ! எங்க அக்கா போயிடுச்சுண்ணே!!….வாழும்போது ஒண்ணுமே இல்லண்ணே
சாவுக்காச்சும் நல்லா செய்ஞ்சுபுடுவோம்ண்ணே….ஆளுங்களுக்கெல்லாம் சொல்லிப்பிடுண்ணே..
சரி சரி…..என்று சொல்லிவிட்டு TVS 50 யை எடுத்துக்கொண்டு கிளம்பினார் ராஜா அண்ணன்.
சுத்துப்பட்டு ஜனமும் அரிசி ஆல ஆட்களும் சாவுக்கு வந்தார்கள் .
ராஜா அண்ணன் தாக்கல் சொல்லி தாரை, தப்பு , ஆட்கள் வந்தார்கள். இளங்காட்டை சுற்றியுள்ள கீழ் புத்தூர் , நல்லேறி கிராமத்திலிருந்து கூத்து கட்டுறவங்களும் ஒப்பாரிக்கு ஒரு கூட்டமும் வந்தது .
கோவிந்தன் அண்ணன் சீட்டு பணம் முப்பதாயிரம் இருக்குன்னு லட்சுமி கிட்ட சொல்லி எல்லோருக்கும் அட்வான்ஸ் கொடுத்தார் .
பக்கத்துல கடையை சீக்கிரம் திறக்க ச்சொல்லி சரக்கு போட்டு அவரவர் தம் வேலையை தொடங்கினர் .
பூசாரி வந்து சடங்கு செய்ய ஆயத்தமானார் .
ஒரு மேடை போட்டு மைக்கு செட் வைத்து ஒப்பாரி வைப்பவர்கள் வந்து ஒப்பாரி பாடல்களை ராகத்துடன் இசைத்தனர் .
ஒப்பாரியில் பெண்களும் ஆண்களும் பாடினர் .
ஒப்பாரியில் ராகத்தில் அவ்வப்போது பாடுபவர்களுக்கு கண்ணில் கண்ணீர் வருவது எப்படியென்றே தெரிவில்லை .
இடையிடையே அவர்களுக்குள்ளாக எதோ கதைகளை பேசி ஒப்பாரியில் தொய்வு வரும்போது அழுது கண்ணீர் சிந்தி ஒப்பாரிவைத்திட்டார்கள் .
கூத்து ஆடுபவர்கள் பறை கட்டுபவர்கள் எல்லோரும் வாங்கிய காசுக்கு குறையில்லாமல் ஆட்டம் போட்டார்கள் .
ஒப்பாரியில் அந்த சுத்துவட்டாரத்திலேயே மிகவும் உருக்கமாகவும் கேட்போர் கண்ணில் கண்ணீர் வரும்படியாகவும் பாடக்கூடிய குணா மைக்கில் சோகராகத்தில் பாடினான் .
சவலயா நா னிருந்து ……
துவண்டு தான் நா கிடக்க
தாய்ப்பாலை தப்பாம
நீ குடுத்த ஆத்தா …….
எட்டு மணி வண்டிக்கு நான் …..
களைப்பாக போகவிடாம ,
ஏலரிசிக் கஞ்சி நீ குடுத்து
களைப் பாத்தும் ஆத்தா …….
பத்து மணி வண்டியில
பசிபறக்க நா வந்தா …..
அவிச்ச சோறு வருத்த மீனு
நீ குடுத்த ஆத்தா …..
பாடைலே நீ போகையில…….
ஆரூம் கூட வல்லியே ஆத்தா ……
என்று சோகம் ததும்ப தன்னையறியாமலே கண்ணீர்த்துளி விழ ஒப்பாரி பாடினான் சாந்தி பெத்த குணா ……………..!
எழுதியவர்: ரவி நவீனன்
add a comment