36
மரமின்றி மனிதன் இல்லை
மறக்கக் கூடாத ஒன்று நீ என்று
ஏன் இந்த மனிதனுக்கு புரிவதில்லை ?
பிறவி முதல் இறுதிவரை உன் உறவு எத்தனை வடிவில் ?
பிறந்த குழந்தை தாய்மடி மறந்து கண்ணுறங்குவது
உன் மீது தொட்டில் வடிவில்
தவழும் பருவத்தில் கொஞ்சி விளையாடுவது
உன்னோடு பொம்மை வடிவில்
பிறந்தது முதல் குழந்தைப் பருவம் வரை
உன் உறவு எத்தனைவடிவில் ?
பாலகாண்டம் முடிந்து பள்ளிக் காலம்.வரை கரும்பலகை வடிவில்
கல்வி காண்டத்தில் எழுத்துருவம் பெற எழுதுகோல் வடிவில்
பால்யம் முதல் வாலிபம் வரை
உன் உறவு எத்தனை வடிவில் ?
வாலிபத்தில் மணமுடித்து
கன்னியும் காளையும் இணையும்போது கட்டில் வடிவில்
வயது முதிர்ந்து
ஓய்வாக ஓரத்தில் அமரும்போது நாற்காலி வடிவில்
வாலிபம் முதல் வயோதிகம் வரை
உன் உறவு எத்தனை வடிவில் ?
ஆடும் ஆட்டம் முடிந்து
ஓடும் இதயம் நிற்கும் போது பாடை வடிவில்
ஆடை இழந்த உடல்
அக்னிக்கு இரையாகும் போது கொள்ளி வடிவில்
உயிர் பிரிந்த பின்னும் இந்த உடலின் கூட
உன் உறவு எத்தனை வடிவில் ?
பிறவி முதல் இறுதி வரை உன் உறவு இருந்தும்
மறக்கக்கூடாத ஒன்று நீ என்று
இந்த மனிதனுக்கு ஏன் புரிவதில்லை?
மனதில் சக்தி இருந்தால்
மரம் என்ற நீ இல்லாமல்
இந்த மனிதன் தனியே வாழ்ந்து காட்டட்டுமே
படைத்த இறைவனையும் பெற்றெடுத்த தாயையும்
பேணி வளர்த்த தந்தையையும்
தோள் கொடுத்த தோழமையையும்
சுற்றி வந்த சுற்றத்தையும்
தன் சுயநலத்துக்காக மறக்கும்
இந்த மனித சமுதாயம்
தெய்வமாக போற்ற வேண்டிய உன்னை
மறந்ததில் வியப்பில்லை
மறந்த அவனுக்கு
மன்னிப்பும் கிடைக்கப்போவதில்லை !!!!
நாகராஜன்
add a comment