44
கடிகார முட்களுக்கு
வாழ்க்கைப்பட்ட இயந்திரங்களே
என்றாவது கேட்டது உண்டா ?
எங்களின் வார்த்தைகளை
ஓட்டுவீடுகளில் ஒலித்திடும்
எங்களின் ஷேக்ஸ்பியரின்
காவியங்களையும்
கூரைவீட்டுகளில் நாங்கள் இசைக்கும்
தெம்மாங்கு பாடல்களையும்
நின்று கவனிக்க நேரம் ஏது
உங்களுக்கு!
எம்மைக்கண்டதும்
காவலரை கண்ட கள்வராய்
பதுங்கி ஓடும் உங்களுக்கு
கால்வாய்களில் நாங்கள் நடத்தும்
கலை நிகழ்ச்சி புரிவது கடினமே
சமையலறையில் கொதிக்கும்
சாம்பார் வாசத்தைக் கூட
நுகராத உங்களின் நாசிகளுக்கு
நாங்கள் ஈன்றெடுக்கும்
மண்வாசம் எட்டுவது சற்று சிரமமே!
மெல்லிசை தான் புரியவில்லை என
மேற்கத்திய இசைக்கு மாறினால்
போட்டுவிடுகிறீர்கள் தலையங்கத்தில்
வெள்ளப்பெருக்கம் என
என்ன செய்வது
காதலியை காண தவமிருக்கும்
காதலன் போல
எங்களுக்காக தவமிருப்பதும்
எங்களைக்கண்டதும்
சீர்வரிசைபோதாத மாமியாராக
புலம்புவதுமே வாடிக்கையானது
உங்களுக்கு
உதிரத்தை உணவாக்கியவளுக்கே
இல்லத்தில் இல்லாத இடம்
எங்களுக்கு கிடைப்பது ஐயமே
விண்ணுக்கும் மண்ணுக்கும்
இடையே நாங்கள் நடத்தும்
உரையாடல் ஒன்று தான்
ஈரம் வேண்டும் ஐயா
உலகமோ உறவோ
சுழன்றிட ஈரம் வேண்டும்!
ரா.சண்முகவள்ளி ஸ்ரீனிவாசன்
தென்காசி
add a comment