ஆன்மிகம்

தெளிவடைந்த பெண்மணி

303views
சூரிய அஸ்தமனமாகும் பொன் மாலை பொழுது. பறவைகள் கூட்டம் கூட்டமாக அவற்றின் கூட்டை நோக்கி செவ்வானத்தில் பறந்து செல்கின்றன. வெப்பக்காற்று தணிந்து சில்லென தென்றல் காற்று வீச தொடங்குகிறது. விளக்கேற்றும் நேரம். குடும்பப் பெண்ணொருத்தி விளக்கேற்றும் நேரம் நெருங்கிவிட்டதென்று பரபரப்புடன் சாமியறையினுள் சென்று மின்விளக்கை போடுகிறார். அது மங்கலமாய் மஞ்சள் நிற ஒளியை உமிழ்கிறது. மந்திர பாராயணம் செய்துக்கொண்டே பக்தியுடன் விளக்கேற்றுகிறார். தீபம் சுடர் விட்டு பிரகாசமாய் எரியத் தொடங்கியது.
தீபஒளி அறையின் இருளை நீக்கி எங்கும் நிறைந்தது. ஊதுபத்தி ஏற்றி வைத்துவிட்டு இறைவா! என்று கண்களை மூடினாள். தீபஒளியும் ஊதுபத்தியின் நறுமணமும் அவளின் மனதை லேசாக்க முயன்றது. அவள் கண்களிலிருந்து கண்ணீர் கசிய ஆரம்பித்தது. .. இறைவா! எனக்கு மட்டும் ஏன் இந்த நிலை? விரதம் இருக்கிறேன் கோவில் கோவிலாக போகின்றேன் தான தர்மம் செய்கிறேன். என் கவலைகளை தீர்க்க மாட்டாயா? உன்னையே நித்தம் நினைத்து பூஜைகளை செய்து மகிழ்கிறேன். குலதெய்வ வழிபாடு, இஷ்டதெய்வ வழிபாடு, ஹோமம், பரிகார பூஜைகள், நேரம் காலம் பார்த்து ஒரு நிகழ்வை மேற்கொள்கிறேன். இப்படியிருக்க ஏனப்பா எனக்கு இந்த மனவலி? என்று தழுதழுத்தக் குரலில் கண்ணீர் மல்க குமுறிக்கொண்டிருந்தாள்.
சோதித்தது போதும் ஐயா! துயரங்களை தாங்க இயலவில்லை. ஏன் இப்படி நடக்கின்றது? யாருக்கும் என் மனதில் கூட தீங்கு இழைக்கவில்லையே. என் செய்வேன் ஈசனே? என்று வினவிக் கொண்டே அழுகையை கட்டுப்படுத்துகிறாள். சிறிது அமைதிக்கு பிறகு மீண்டும் தடித்தக் குரலில் துயரங்களில் துடிதுடித்துக்கொண்டிருக்கும் எனக்கு நீ பதில் சொல்லியே ஆக வேண்டும்…பதில் சொல்லியே ஆக வேண்டுமென்று.
கண்ணீர் விட்டு கதறிக் கொண்டிருக்கும் இந்த அபலை பெண்ணிற்கு இறைவன் பதில் தருகிறாரா இல்லை பரிவு காட்டுகிறாரா என்று பார்ப்போம்.

இறைவன் வருகை…
அடர் மஞ்சள் நிறத்தில் மலர்கள் மலர்ந்திருக்கின்றன. மலர்களிலிருந்து வெளிப்படும் நறுமணம் தெய்வீக மணமாக எங்கும் பரவியிருக்கின்றது. செவியிற்கினிய மெல்லிசை மனதை லயிக்கும்படி இருக்கின்றது. அத்தருணத்தில் ஒரு சிறு வெள்ளொளி தோன்றுகிறது. அவ்வொளி சிறிது சிறிதாக பெரியதாகி பெரும் ஒளியாய் பேரொளியாய் அருட்பெருஞ்ஜோதியாய் எங்கும் நிறைந்து நிலைத்திருக்கின்றது. அப்பெண்ணானவள் தன்னையும் அறியாமல் இரு கரங்களையும் கூப்பி மண்டியிட்டு உள்ளம் உருகி ஆனந்த கண்ணீர் கண்களின் ஓரமாக வழிய அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெரும்கருணை அருட்பெருஞ்ஜோதி என்று ஓதுகிறாள்.
ஐயனே! மெய்ப்பொருளே! தயாநிதி தந்தையே! பரம்பொருளே! சச்சிதானந்தமே! நான் அழைத்து நீங்கள் வந்திருப்பது எவ்ளோ பெரிய கருணை உள்ளம் நிறைந்தவரென்று உணர்கிறேன். மனம் எப்போதும் துன்ப நிலையிலே வாடுகின்றது என்று மெல்லிய குரலில் தெரிவிக்கிறாள். மெய்பதி திருவாய் மலர்ந்து மகளே எங்கும் நிறைந்திருக்கின்ற யாம் வெற்றிடங்களில் மட்டுமல்ல உன்னுள்ளும் ஒளியாய் அறிவாய் விளங்குகின்றேன். என்னை நீ ஒருநாளும் ஆழ்ந்து தியானித்து உணரவில்லையே. எல்லாம் வல்ல நடராஜபதியே அருட்பேரொளியே உங்களை மட்டுமே நினைந்து நினைந்து வாழ்கின்றேன். ஓர் கணமேனும் மறப்பதில்லையே என்றாள்.
பக்தி மார்க்கத்தில் உன் எண்ண ஓட்டம் மிகவும் அதிகமாக உள்ளது. எண்ண ஓட்டத்தை நிறுத்த மனம் ஒடுக்கி புருவ மத்தியை உற்று உற்று நோக்க என்னை உணரலாம். யாம் உன்னுள் உமக்காகவே உள்ளுணர்வின் மூலம் உணர்த்திக்கொண்டுதான் இருக்கிறோம். உன் எண்ண ஓட்டம் தொடர்ந்து செயல்பட்டுக்கொண்டிருப்பதால் உன்னால் ஆழ உணர இயலவில்லை. உள்ளுணர்வின் மூலம் மட்டுமல்லாமல் ஒரு நிகழ்வை உன்னால் நிகழவைக்க வெவ்வேறு ஊடகங்களின் வழியாக உன்னிடத்தில் தொடர்பு கொள்கிறோம். இதை நீ உணர வேண்டுமென்றால் நிகழ்காலத்தில் வாழ்வது அவசியமே. அதாவது ஒரு செயலை செய்யும்போது படி படியாக முழு கவனத்துடன் செயல்பட்டால் வெற்றி நிச்சயம்.
நிகழ்காலத்தில் ஒரு வேலை செய்யும்போது கடந்தகால நினைவுகளோடு அல்லது வருங்கால நினைவுகளோடு அசைபோட்டால் அக்காரியம் சிதற வாய்ப்புள்ளது. அவரவர் வாழ்க்கைக்கு அவரவர்களே காரணமானவர். நல்வினை செய்வதால் புண்ணியமும் செய்யும் வினை பிறர் மனதை நோகச் செய்தால் கர்மாவும் சேரும் என்பது இறைச்சட்டமே.
நீ மன வலியில் வேதனைப்படும் நிகழ்வு உனக்கு நடந்தால் உன்னால் அது போன்ற வேதனையை மற்றவர் அனுபவித்திருந்தால் அந்த வலியை நீ உணர்ந்தால் மட்டுமே உன் கர்ம பதிவு அழியும்.
எல்லா உயிர்களிடத்தும் அன்பு காட்டி கருணையுடன் நடந்தால் என்னை அடைவது எளிதே என்றார் அருட்பெருஞ்ஜோதியாண்டவர்.
பேரருட் சோதியே! உயிரொளியே! மெய்ப்பொருளே !
ஒன்றினுள் ஒன்றாய்
ஒன்றிற்குள் ஒன்றாய்
ஒன்றே ஒன்றாய்
ஒன்றிய ஒன்றாய்
விளங்கும்
அருட்பெருஞ்சோதி
என் கருத்திலே அமர்ந்து
அறிவில் விளங்கி
காத்து எனதுள்ளத்தினில்
கலந்த மெய்ப் பதியே!
என் மூன்றாம்கண்ணை
விழிப்படைய செய்தாய்!
பெறற்கரிய வரத்தினை
உவந்தளித்த பராபரத்திற்கு
கோடான கோடி நன்றிகள்!
உடல் சில்லென்ற உணர்வு… ஆழ் மனம் திரும்பி வந்தது போல் ஒரு உணர்வு. கண்களை மெதுவாக திறக்கின்றாள்… உணர்கிறாள் கனவென்று. ஆனால் இறைவனை நேரில் கண்டதும் அறிவுரை பெற்றதும் உண்மையே என்றுணர்ந்து அளவில்லா மகிழ்ச்சி கொண்டாள். அவள் மனதில் தோன்றிய அனைத்து வினாக்களுக்கும் விடை பெற்றதால் தெளிவுற்றாள்.
கீதா அருண்ராஜ்

5 Comments

  1. இறைவனை கண்முன்னே நிறுத்தி விட்டீர்கள்.வாழ்த்துகள்

  2. அருமை அருமை.மனிதனின் தன்னுணர்வை புரிய வைக்கும் விதத்தில் உள்ளது. தன்னுணர்வைப் புரிந்துக்கொள்ள முதலில் தன்னிலை புரியவேண்டும்.அதுதான் நான் யார் என்பது? நான் என்பது,நான் தற்போது எப்படி இருக்கிறேன் என்பது.அது புரிந்தால்தான் நம்மை மாற்றிக்கொள்ள முடியும்.அதைத்தான் இறைவன் என்னை நோக்கு புரியும் என்று சொல்கிறார்.அருமையாக உணர்வு படுத்தியுள்ளீர்கள் தோழி!நன்றி

  3. இறைவன் சோதி உருவில் தோன்றி அழகாக காட்சி தருகிறார்

  4. படிக்க படிக்க கண் முன்னே விரிகிறது அக்காட்சி ..அருமையான இறை உணர்வு
    .

Leave a Response

Right Click & View Source is disabled.

error: Content is protected !!