109
அவள் அஹிம்சையின் ஒரு பெயர்
அக்கினிக்கு மறுபெயர்
பூ போலும் சிரிப்பாள் பூகம்பமாகவும் வெடிப்பாள்…
வீட்டுக்கு மட்டுமின்றி நாட்டுக்கும் அவள் தான் நல்ல நம்பிக்கை …
நமக்கு முன்னிருந்தோ பின்னிருந்தோ நம்மை இயக்கும் ஒரு பெருங்கை…
அவள் எடுக்கும் அவதாரங்கள் அநேகம்… அத்தனையும் காட்டுவது பாசம் மிக்க குடும்பத்தின் சினேகம்….
ஒரு முகம் காட்டும் பன்முகம் …
விளக்குத் திரி போல் அனைவருக்கும் நன்முகம்…
தனக்கு மட்டுமின்றி கணவனுக்கும் குடும்பத்துக்கும் அவள் தான் ஆணிவேர்… விளக்காகவும் ஒளிர்கிறாள் …
சூரியக்
கிழக்காகவும் வெளுக்கிறாள் …
ஒரு சாவித்திரி பூலே… முத்துலட்சுமி ரெட்டி… சரோஜினி நாயுடு… வீரமங்கை வேலுநாச்சியார்… ஜான்சி ராணி… இந்திரா பிரியதர்ஷினி..
கதீஜா நாயகப் பெருமாட்டி…. கஸ்தூரிபாய் காந்தி… என்று
இவர்கள் எல்லோருமே வரலாற்றின் பக்கங்கள்..
வழுவாத உச்சங்கள்….
அவள் கற்கும் கல்வி சமுதாயத்தின் கல்வி…
அவளது முன்னேற்றம்
சமுதாய முன்னேற்றம்…
ரத்தத்தைப் பாலாக்கி பிள்ளையை வளர்க்கிறாள்
குடும்ப நலனுக்காக… ரத்தத்தைக் கொடுத்தே உழைக்கிறாள் குடும்ப நலனுக்காக…
அவள் கற்கிறாள் சமுதாயம் அவள்வழி கற்கிறது …
அவள் கற்பிக்கிறாள் தேசம் ஒளி பெறுகிறது …
அவள் குடும்பத் தலைவியாகத் திகழ்கிறாள்… பிள்ளைகள் செதுக்கப்படுகிறார்கள் …
அவள் பணியாற்றுகிறாள் சமுதாயப் பிணிகள் மறைகின்றன …
அவள் நல்ல நிர்வாகியாகிறாள் குளறுபடிகள் குறைகின்றன…
மங்கையராய்ப் பிறப்பது மாதவம் மட்டுமல்ல …
இந்த மண்ணுக்கே அவர்கள் தான் நல்ல வரம் …
பிள்ளைகளின் சொர்க்கம் தாயின் காலடியில்… என்றார்கள் பெருமான் நபிகள்…
அன்னைக் கோயில் அல்ல …
அன்னை தான் சொர்க்கம் …
இது அனைத்துலக
மாதரையும் சிறப்பிக்கும் பக்கம்…
எனவே மகளிர் போற்றுவோம்….
அத்தாவுல்லா
நாகர்கோவில்
add a comment