சினிமா

செல்வராகவன் – தனுஷ் – யுவன் கூட்டணியின் தவறவிடக்கூடாத மற்றொரு படம் – நானே வருவேன்

78views
நீண்ட நாட்களுக்குப் பிறகு தனுஷ் செல்வராகவன் யுவன்சங்கர் ராஜா கூட்டணியில் வெளியாகியுள்ள படம் நானே வருவேன். இந்த கூட்டணிக்கென்று ஒரு ரசிகர் பட்டாளம் உள்ளது. அவர்களையும் வெகுஜன சினிமா ரசிகர்களையும் ஒரு சேர திருப்திப்படுத்தும் விதமாகவே நானே வருவேன் அமைந்துள்ளது.
ரெட்டை சகோதரர்களான பிரபு மற்றும் கதிர் என்ற இரட்டை வேட கதாபாத்திரத்தில் தனுஷ் நடித்துள்ளார். சிறு வயதிலேயே லேசாகப் பிறழ் மனம் கொண்ட கதிரை அடித்து உதைக்கிறார் கண்டிப்பான பள்ளி ஆசியரான தந்தை. கதிர் ஒரு கட்டத்தில் தந்தையைக் கொலை செய்கிறான். சமூகத்திடமிருந்து அந்த கொலையை மறைக்கும் தாய் பிரபுவை மட்டும் தன்னுடன் வைத்துக்கொண்டு, கதிரை கைவிடுகிறாள். அனாதையாகக் கைவிடப்படும் கதிர் மிருகமாக மாறுகிறான். மற்றொரு புறம் பிரபு நல்ல வேலை, அன்பான மனைவி அறிவான மகள் என்ற நல்வாழ்க்கை அமையப்பெறுகிறான்.
பிரபு உயிரையே வைத்திருக்கும் மகளுக்கு அமானுஷ்ய பாதிப்புகள் நிகழ்கின்றன. அவள் மனதளவிலும், உடலளவிலும் பாதிக்கப்படுகிறாள். அவள் உடலில் உள்ள அந்த அமானுஷ்ய சக்தி அவளது உயிரையே கேட்கிறது. அவள் எதனால் பாதிக்கப்பட்டாள். அதற்கான தீர்வு என்ன என்பதை தேடிச் செல்வதே இரண்டாம் பாகம்.
வாழ்க்கையில் எல்லாம் ‘செட்’ ஆன பிரபு என்ற கதாபாத்திரத்தில் தனுஷ் தன் அற்புதமான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். தான் உயிரையே வைத்திருக்கும் மகளை புரிந்துகொள்ள முடியாத அமானுஷ்ய சக்தி ஆட்கொண்டவுடன் ஒரு தந்தை அடையும் தவிப்பையும், மிருக பலம் கொண்ட தன் சகோதரனிடம் அடி வாங்கி ஓடும்போது ஒரு சாமனியனின் ஆற்றாமையையும் தனுஷ் அற்புதமாக தன் நடிப்பின் மூலம் கண் முன் நிறுத்தியுள்ளார்.
அதே வேளையில் இரண்டாம் பாகத்தில் வில்லனாக கதிர் கதாபாத்திரத்தில் மிரட்டும்போதும் தனுஷின் நடிப்பு இன்னும் ஒரு படி மேல் செல்கிறது. வாழ்க்கையில் சிறுவயதிலேயே லேசான மனப்பிறழ்வு ஏற்பட்ட ஒருவன், பெற்றோர்களால் புறக்கணிக்கப்பட்டு கொலை செய்து, வாழ்வின் அபத்தங்களைத் தாங்கி ஒரு மிருகமாக வளர்ந்திருப்பவனைக் கண் முன் காட்டி பார்வையாளர்களை மிரட்டுகிறார் தனுஷ். நெருங்கிய உறவுகள் புறக்கணிக்கும்போதெல்லாம் அவனுக்குள்ளே உள்ள மிருகம் வெளி வருகிறது. இது செல்வராகவனின் டிரேட் மார்க் கதாபாத்திரங்களில் ஒன்று.
பிரபுவின் மனைவியாக நடித்துள்ள இந்துஜா மகளுக்கு என்ன நடக்கிறது என்று புரிந்துகொள்ள முடியாத தாயாக தன் பரிதவிப்பை தன் நடிப்பில் மூலம் நிகழ்த்தியுள்ளார். படத்தின் மிகப் பெரிய பலம் படத்தில் நடித்துள்ள குழந்தைகள். கதிர், பிரபு சிறுவர்களாக வரும் காட்சிகளில் நடித்துள்ள இரண்டு சிறுவர்களாகட்டும், கதிர் வளர்ந்த பிறகு அவனுக்கு பிறக்கும் இரட்டையர்களாகட்டும்(சோனு, மோனு) அத்தனை பேரும் கச்சிதமாக அந்த கதாபாத்திரங்களில் பொருந்திச் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளனர்.
படத்தின் மிகப் பெரிய பலம் அதன் ஒளிப்பதிவும், பின்னணி இசையும். ஓம் பிரகாஷ் தொடக்கத்திலிருந்தே தன்னுடைய ஒளிப்பதிவின் மூலம் கதைக்களத்திற்கேற்ற ஒரு மென்சோக உணர்வைப் பார்வையாளருக்கு ஏற்படுத்துகிறார். படம் நெடுக அவருடைய ஒளிப்பதிவு கதையைச் சிதைக்காமல் அதற்குப் பேருதவியாக அமைந்துள்ளது. அதே போல் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட யுவன்சங்கர் ராஜாவின் பின்னணி இசை பல இடங்களில் நம்மை அதிரவைக்கிறது.

Right Click & View Source is disabled.

error: Content is protected !!