ஓடிடி தளங்களில் படத்தை வெளியிட வரிசையில் காத்திருக்க வேண்டியுள்ளது என்கிறார் ‘வார்டு 126’ படத்தின் இயக்குநர் செல்வகுமார் செல்லபாண்டியன்.
இதில் மைக்கேல் தங்கதுரை, விஷ்ணு மேனன் ஆகியோர் நாயகர்களாக நடிக்க, ஷ்ரிதா சிவதாஸ், சாந்தினி தமிழரசன், வித்யா பிரதீப், ஷ்ருதி ராமகிருஷ்ணா என நான்கு நாயகிகள் உள்ளனர்.
தனிமனித ஒழுக்கத்தை வலியுறுத்தும் படமாக இது உருவாகி உள்ளது. மேலும், காதல், புலனாய்வு, திகில் உள்ளிட்ட மற்ற அம்சங்களும் இடம்பெற்றுள்ளன. சோனியா அகர்வால், ஸ்ரீமன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களை ஏற்றுள்ளனர்.
“ஒவ்வொரு துறையிலும் சில இருண்ட பக்கங்கள் இருக்கவே செய்யும். நான் தகவல் தொழில்நுட்பத் துறையில் பணியாற்றியபோது சில இருண்ட பக்கங்களைப் பார்த்திருக்கிறேன். என் கண்முன்னே நிகழ்ந்த சில சம்பவங்களின் தொகுப்பாக இப்படத்தின் கதை அமைந்திருக்கும்.
‘வார்டு-126’ என்ற தலைப்பில் உருவாகி உள்ள இந்தப் படம் ஒரு முடிவின் தொடக்கமாக இருக்கும். கொரோனா நெருக்கடியை சமாளித்து படத்தை முடித்தோம்,” என்கிறார் இயக்குநர்.