சினிமாவிமர்சனம்

மை டியர் பூதம் – திரை விமர்சனம்

332views
குழந்தைகளுக்கான திரைப்படங்கள் எப்போதும் குழந்தைகளுக்கு மட்டுமல்ல பெரியவர்களுக்கும் கூட. கொண்டாட வைப்பது கொண்டாட்டத்திற்கு இட்டுச்செல்வது.
நீங்கள் குழந்தையாக மாறி ஒரு திரைப்படத்தை பார்ப்பதற்கும், நீங்கள் நீங்களாகவே இருந்துகொண்டு ஒரு குழைந்தைக்கான திரைப்படத்தை பார்ப்பதற்கும் நிறைய வித்தியாசங்கள் இருக்கிறது.
அப்படி இயல்பான ரசனையில் வெளிவந்திருக்கும் திரைப்படம் தான் “மை டியர் பூதம்”
பூதலோகத்தில் வசிக்கும் கர்க்கிமுகி பூதலோக தலைவன். பல ஆண்டுகளுக்கு பிறகு அவனுக்கு ஒரு குழந்தை பிறக்கிறது. தன் எல்லா சந்தோஷமும் தன் மகன் தான் என்று வாழ்ந்துவரும் வேளையில் ஒரு முனிவரின் சாபத்தால் கல்லாக சபிக்கப்படுகிறான் கர்க்கிமுகி. யார் அந்த அந்த கல்லில் இருந்து கர்க்கிமுகியை
விடுவிக்கிறார்களோ அவன் சாபம் நீங்கி மறுபிறவி எடுக்க முடியும் என்றும் அதன் பிறகு வரும் 40 நாட்களுக்குள் அந்த சிலையில் இருக்கும் மந்திரத்தை சொன்னால் தான் பூதலோகத்திற்கு திரும்பி செல்லமுடியும் இல்லையென்றால் காற்றோடு காற்றாக கரைந்து போய்விடுவான் என்கிற சாப விமோசன குறிப்புடன் கதை ஆரம்பிக்கிறது.
என்னடா அம்புலிமாமா கதை சொல்றாங்களே என்றே சலிப்புடன் பார்க்க ஆரம்பித்தால் மிக பெரிய ஆச்சர்யங்களை நேர்த்தியான திரைக்கதையுடன் கிராபிக்ஸ் அட்டகாசங்களுடன் சொல்லி சபாஷ் போட வைத்திருக்கிறது படம்.
மூட நம்பிக்கைகளை சர்வ சாதரணமாக படங்களில் கட்டவிழ்த்துவிடும் இந்த காலக் கட்டத்தில் குழந்தைகளுக்கான இந்த திரைப்படத்தில் தன்னம்பிக்கையை மட்டுமே பிரதானப்படுத்தியிருப்பது வரவேற்கக்கூடிய ஒன்று.
திக்குவாய் பிரச்சனைக்கு தீர்வு என்ன என்பதையும் போலி மருத்துவதை நம்பி ஏமாற வேண்டாம் என்கிற சமூக அக்கறையுடன் கதைசொல்லிய இயக்குனருக்கு வாழ்த்துக்கள்.
மாயஜாலப்படம் என்றால் எதிலும் லாஜிக் பார்க்க தேவையில்லை என்கிற லாஜிக்கை உடைத்திருக்கும் ஐடியாவை கொண்டாடலாம்.
பிரபுதேவா பூதமாகவும், திக்குவாய் உள்ள பையனாக மாஸ்டர் அஸ்வத்தும் அருமையாக நடித்திருக்கின்றனர். முதல் பாதி கிராபிக்ஸ் துணையுடன் ஜெட் வேகத்தில் சென்றாலும் இரண்டாம் பாதி குழந்தைகளுக்கு எதை சொல்லித்தரவேண்டும் எதை முன்னிறுத்த வேண்டும் எனபதை பாடமாக சொல்ல நினைத்து மிக அழகாவே ஸ்கோர் செய்திருக்கிறார்கள்.
UK செந்தில் குமாரின் ஒளிப்பதிவு ஷேன் லோகேஷின் படத்தொகுப்பு படத்திற்கு பலம்.
வசனம் தேவா கவனிக்க வைக்கிறார்.
D இமானின் இசையில் பாடல்கள் குழந்தைகளுக்காக என்று சொல்லி விட்டு பெரியவர்களை மனதில் வைத்துக்கொண்டு இசைஅமைத்திருப்பது போல் தெரிகிறது என்றாலும் ரசிக்கும்படியாக இருபப்து அருமை. பாடல்கள் யுகபாரதி பரவாயில்லை.
ரமேஷ்பிள்ளையின் தயாரிப்பை உச்சி மோந்து வரவேற்கலாம்.
மஞ்சப் பையில் பார்த்த ராகவன் இதில் பலமடங்கு முன்னேறி இருக்கிறார். குழந்தைகளுக்கான படங்களை இயக்கும் இயக்குனர்கள் அருகியிருக்கும் தமிழ் திரையுலகில் ஒரு ரவுண்டு வரலாம்.
மை டியர் பூதம் குழந்தைகளுக்கான இன்னொரு உலகத்தை கட்டமைத்திருக்கிறது. தியேட்டருக்கு போய் அந்த உலகத்திற்குள் கொஞ்சம் வாழ்ந்துவிட்டு வரலாம்.

Right Click & View Source is disabled.

error: Content is protected !!