286views
‘வணக்கம் என் பேரு ராதாகிருஷ்ணன். நான் ஆட்டோ ஓட்டுறேன். ‘
-இப்படி கதை ஆரம்பிக்குது. யாரு இந்த ராதா கிருஷ்ணன் ரொம்ப ஆர்வமா பார்க்க நாமளும் ஆரம்பிக்கிறோம். இரண்டு குழந்தைகளுக்கு அப்பா. பிள்ளைகள் மேல ரொம்ப பாசம். எப்படியாச்சும் சம்பாதிச்சு வாழ்க்கையில பெரிய அளவுக்கு வரணுன்னு ஆசைப்படுற சராசரி மனசுக்காரர்.
அந்த நேரத்துல அந்த ஊருல புதுசா வீட்டுமனை விற்பனை நடக்க ஆரம்பிக்குது. தன்னால் மொத்த பிளாட்டையும் வித்துத்தர முடியும்னு சொல்லி புரோக்கரா மாறுகிறார் ராதா கிருஷ்ணன். எல்லாம்
விற்பனையாகுது. ஆனால் வழக்கம் போல பணத்தை எடுத்துக்கிட்டு அந்த ரியல் எஸ்டேட் ஓனர் தலைமறைவாகி விடுகிறார். பழியை சுமந்துகொண்டு ஒரு குற்றவாளியாக ஊரை விட்டு ஓடிப்போய் விடுகிறார் ராதா கிருஷ்ணன்.
அப்புறம் அவர் குடும்பம் என்ன ஆனது. பிறகு அவர் என்ன செய்தார். நடுத்தர மனிதர்களுடைய வாழ்க்கை சூழல் எப்படி பணத்தாலும் மோசடியாலும் வஞ்சகம் சூழ்ச்சியினால் சின்னாபின்னமாகும் என்பதையெல்லாம் இரண்டுமணிநேரம் காட்சிகள் வழியாக பார்வையாளனுக்கு சொல்லும் ஒரு குடும்ப திரைப்படம் மாமனிதன்.

மூன்றாவது வரைக்கும் படித்த தன்னை போல தன் பிள்ளைகள் இருக்கக்கூடாது. நிறைய படித்து பெரிய வேலைக்கு போக வேண்டும் என்று ஆசைப்படக்கூடிய சராசரி வர்க்கத்து தந்தையாக விஜய் சேதுபதி. அவருடைய மனைவியாக காயத்திரி. டீக்கடை நடத்தும் இஸ்மாயில் பாயாக குரு சோமசுந்தரம், உறுத்தாமல் வந்துபோகும் கஞ்சாகருப்பு, கணவனை இழந்தாலும் தன்னம்பிக்கையுடன் ஒரு பெண்குழந்தையுடன் கேரளாவில் டீக்கடை வைத்து பிழைப்பு நடத்தி வரும் ஜுவல் மேரி இப்படி இந்த படத்தில் ஒவ்வொரு கதாபாத்திரமும் எதார்த்த மனிதர்களை நினைவுபடுத்திகிறது.






