275
3.4.2022 “ரமணி ராஜ்ஜியம்” கவியரங்க நிகழ்ச்சியின் சிறந்த கவிதையாக கீழ்கண்ட கவிதை தேர்ந்தெடுக்கப்படுகிறது.
கவிதாயினி சுபஸ்ரீ அவர்களுக்கு மனமார்ந்த பாராட்டுகளை NaanFM நிலையம் தெரிவித்துக் கொள்கிறது.
தார்மீக பொறுப்பு
உயிரைக் காக்கும் தாய்நாடு
நல்லுணர்வைக் கொடுத்தாய் தமிழோடு
நாடும் மொழியும் இருகண்கள்
நாடிச் சென்றால் ஒளிகிடைக்கும்
உணர்வைத் தூண்டும் சுதந்திரத்தைப்
பாரதீ பாட்டில் நீ தந்தாய்
தாயை இழந்தால் வாழ்வுண்டு
தனித்தமிழை இழந்தால் அதுவுண்டோ?
தன்நிலை அழிக்கும் பிறமொழியை
தன்மானத்தை விற்று வாங்காதே
வாழ வைத்திடும் தமிழ்நாடு
நீ மறந்து போவது எதனோடு?
பணத்தைக் கொண்டு முடிவெடுக்கும்
குணத்தை மாற்றியே வாழ்ந்திடு
நல்லோர் கூறும் சொல்லினைச்
செவியால் கேட்டே வளர்ந்திடு
இன்பத்தைத் தேடும் மனிதராய்
இவ்வுலகில் இருந்து வாழாதே
அறிவை வளர்க்கும் கல்வியை
வியாபாரப் பொருளாய் மாற்றாதே
ஏறுப்பூட்டும் உழவனை
எட்டிக் காலால் உதைக்காதே
அரசு பள்ளியில் பயில்பவரை
மட்டந்தட்டிப் பிழைக்காதே
மானங்கெட்ட இந்நினைப்பை
மாற்றியே உலகத்தை வென்றிடுவோம்
ஏற்றத்தாழ்வை நீக்கிடுவோம்
ஏழ்மை நிலையை மாற்றிடுவோம்
கையூட்டில்லா மனித சமூகத்தை
இன்றே திருத்தி அமைத்திடுவோம்
மூச்சாய் பேச்சாய் வாழும் தமிழைச்
சமத்துவக் கல்வியால் பெற்றிடுவோம்
இதுவே தார்மீக பொறுப்பென்று உணர்ந்திடுவோம்!!!
ஞா.சுபஸ்ரீ
உதவிப்பேராசிரியர்,தமிழ்த்துறை,
ஸ்ரீமத் சிவஞான பாலய சுவாமிகள் தமிழ்,கலை,அறிவியல் கல்லூரி,
மயிலம் – 604304.
add a comment