உத்தர பிரதேச மாநில அரசியலில் துறவியின் புரட்சி: 2-வது முறை முதல்வராக பதவி ஏற்ற ஆதித்யநாத்தின் நீளும் சாதனை பட்டியல்
உத்தர பிரதேச மாநிலத்தில் இருந்து பிரிந்த உத்தராகண்டின் மலைப் பிரதேசத்தின் கர்வால் மாவட்டத்தின் பஞ்சூரில் ஜூன் 5, 1972-ல் பிறந்தவர் அஜய்சிங் பிஷ்த்.
வன இலாகா அதிகாரியான அனந்த்சிங் பிஷ்த் மற்றும்சாவித்ரி தேவியின் மகனாகப் பிறந்த அஜய்சிங் தற்போது யோகி ஆதித்யநாத் என்றழைக் கப்படுகிறார்.
தான் பிறந்த பவுரி மற்றும் ரிஷிகேஷில் பள்ளிப் படிப்பை முடித்தார். உத்தராகண்டின் பிரபலமான எச்.என்.பகுகுணா கர்வால் பல்கலை.யில் பிஎஸ்சி கணிதப் பிரிவில் பட்டம் பெற்றார்.
பாஜக மாணவர் அணியான அகில பாரதிய வித்யா பரிஷத் தில் இணைந்தார். இதன் ஒருநிகழ்ச்சிக்காக டெல்லி சென்றவருக்கு, உ.பி.யின் கோரக்நாத் மடத்தின் அதிபராகவும் அதன் மக்களவை தொகுதி எம்.பி.யாகவும் இருந்த மஹந்த் அவைத்யநாத்தை சந்திக்க நேர்ந்தது. அவர் தலைமை வகித்த மேடையில் இளைஞரான அஜய்சிங் பிஷ்த் இந்தித்துவா மீது ஆற்றிய ஆவேச உரை பலரையும் கவர்ந்தது.
அதன்பின், உடல் நலம் பாதித்த மஹந்த் அவைத்யநாத்தை காண சென்ற அஜய் சிங், அங்கேயே தங்கி அவருக்கு பணிவிடை செய்யலானார். அவரது அறி வுரையை ஏற்று அஜய்சிங், எம்எஸ்சி படிப்பை துறந்து குடும்பத்தினரிடமும் அனுமதி பெற்றுமஹந்த் அவைத்யநாத் முன்னிலையில் துறவியானார்.
பின்னர் 1998 தேர்தலில் மஹந்த் போட்டியிட முடியாத நிலை ஏற்பட்டது. அவர் விரும்பியபடி மக்களவை தேர்தலில் போட்டி யிட்டு 25,000 வாக்குகளில் வென்றார் ஆதித்யநாத். அப்போது அவர் இதை தன் 26 வயதில் பெற்றதால் நாட்டின் இளம் எம்.பி.யாகக் கருதப்பட்டார்.
மீண்டும் 1999-ல் வந்த தேர்தலிலும் யோகியே வென்று பாஜகவின் எம்.பியானார். இதன் பிறகு, 2004, 2009, 2014 மக்களவையிலும் யோகியே கோரக்பூர் எம்.பி.ஆனார்.
கோரக்பூர் உள்ளிட்ட மாவட்டங்களில் நிகழ்ந்த மதக் கலவரங்களிலும் யோகியின் பெயர் பல்வேறு வழக்குகளில் பதிவானது. இதன் பின்னணியில் யோகி இளைஞர்களை ஒன்றிணைத்து இந்து யுவா வாஹினி எனும் பெயரில் உருவாக்கிய அமைப்பு மீது புகார் எழுந்தது. இது தொடர்பான நீதிமன்ற வழக்குகள் அனைத்திலும் 2017-க்கு பின் யோகி பல்வேறு காரணங்களால் விடுவிக்கப்பட்டிருந்தார்.
2014 மக்களவை தேர்தல் முதல்நாடு முழுவதிலும் வீசிய பிரதமர் மோடி அலையால் 2017-ல் பாஜகவுக்கு உ.பி.யில் மாபெரும் வெற்றி கிடைத்தது. ஆனால், ஆட்சி அமைப்பில் தலையிடாமல் இருந்தார். யோகி. அப்போது, பிரதமர் மோடியின் பரிந்துரைப்படி மறுநாளே உ.பி.யின் முதல் துறவி முதல்வராக பதவி ஏற்றார் யோகி.
தற்போது 2022 சட்டப்பேரவை தேர்தலில் 36 ஆண்டுகளுக்கு பின் உ.பி.யின் ஒரே கட்சி தொடர்ந்து 2-வது முறையாக ஆட்சி அமைக்கிறது. தனது ஆட்சியில் சட்டம்ஒழுங்கை முதல்வராக யோகிகாத்து, சட்ட விரோத கட்டிடங்களை இடித்து ‘புல்டோசர் பாபா’எனப் பெற்ற பட்டப்பெயரும் அவரது வெற்றிக்கு உதவியது.
கடந்த 1952-ம் ஆண்டுக்கு பின் 5 ஆண்டுகள் முதல்வராக இருந்தவர் மீண்டும் அப்பதவியில் அமர்வதும் இதுவே முதல்முறை. இதுபோல், சட்டப்பேரவை தேர்தலில் சமீப ஆண்டுகளில் போட்டியிட்ட யோகியே முதல், முதல்வர் வேட்பாளர்.
முதல் முறையாக பாஜக தொடர்ந்து 2-வது முறை தனிமெஜாரிட்டி வெற்றி என முதல்வர்யோகியின் பிரம்மாண்ட பதவி ஏற்பும் சாதனைகளாகத் தொடர்கின்றன. இவை அனைத்திற்கும் மேலாக உ.பி.யின் ஒவ்வொரு முறை முடிவுக்கு வரும் கட்சிகளின் ஆட்சி மீது எழும் ஊழல் புகார் இந்தமுறை எழவில்லை என்பது குறிப்பிடத்தக்கதாக உள்ளது.