மேற்கு வங்க வன்முறையில் மிக பெரிய சதி நடந்திருப்பதாக குற்றச்சாட்டிய அம்மாநில முதல்வர் மம்தா பனர்ஜி, காவல்துறையினர் அனைத்து கோணங்களிலும் விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
மேற்கு வங்க மாநிலம் பீர்பூம் மாவட்டம் ராம்புராட் பகுதியில் பர்ஷால் கிராம ஊராட்சி துணைத்தலைவர் பாது ஷேக் என்பவரை அடையாளம் தெரியாத நபர்கள் சிலர் நாட்டு வெடிக்குண்டுகளை வீசி திங்கள்கிழமை இரவு தாக்குதல் நடத்தினர். இதில் படுகாயமடைந்த அவர், மருத்துவமனை கொண்டு செல்லும் வழியிலேயே உயிரிழந்தார். இதனையடுத்து அப்பகுதியில் வெடித்த வன்முறையில், மர்ம கும்பலால் ஏராளமான வீடுகள் தீ வைக்கப்பட்டன. இதில் ஒரே குடும்பத்தை 7 பேர் உள்ப்ட 8 பேர் தீயில் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர். இதில் 2 பேர் சிறார்கள். இந்த சம்பவம் மாநிலம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த பாது ஷேக்கின் கொலை காரணமாக வன்முறைகள் வெடித்திருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. இச்சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்த மாநில அரசு சார்பில் சிறப்பு புலனாய்வு குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் வீடுகளுக்கு தீ வைக்கப்பட்டதாக கருதப்பட்ட நிலையில், அவற்றின் மீது பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்டால் வீடுகள் தீப்பிடித்து எரிந்தது விசாரணையில் தெரியவந்துள்ளது.
இந்தச் சம்பவத்தால் ராம்பூர்ஹத் பகுதியில் எப்பொழுது வேண்டுமானும் வன்முறை வெடிக்க வாய்ப்புள்ளதாக், ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் நிறுத்தப்பட்டுள்ளனர். இச்சம்பவம் தொடர்பாக அப்பகுதியைச் சேர்ந்த 22 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர். ராம்பூர்ஹத் காவல் நிலைய அதிகாரி சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். சம்பவம் குறித்து விசாரிக்க கூடுதல் டிஜிபி (சிஐடி) ஞானவந்த் சிங் தலைமையில் சிறப்பு புலனாய்வு குழுவை மாநில அரசு அமைத்துள்ளது.
இந்தச் சம்பவம் தொடர்பாக கொல்கத்தா உயர் நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்கு பதிவு செய்து விசாரணை தொடங்கியுள்ளது. ”மாவட்ட நீதிபதியின் முன்னிலையில் போதிய சேமிப்பு வசதியுடன், குற்றம் நடந்த இடத்தின் அனைத்து கோணங்களையும் உள்ளடக்கும் வகையில் சிசிடிவி கேமராக்கள் மாநில அரசு உடனடியாக சம்பவ இடத்தில் பொருத்த வேண்டும். மத்திய தடயவியல் ஆய்வக குழு அங்கு பார்வையிட்டு ஆதாரங்களை சேகரிக்க வேண்டும். சாட்சிகளுக்கு அச்சுறுத்தல் ஏற்படாத வகையில் அவர்களுக்கு போதிய பாதுகாப்பை காவல்துறை உறுதி செய்ய வேண்டும்” என்றும் உத்தரவை பிறப்பித்துள்ளது.
மேற்கு வங்கத்தில் ஏற்பட்டுள்ள வன்முறைக்கு காரணமான குற்றவாளிகளை கைது செய்ய என்ன உதவி தேவைப்பட்டாலும், மத்தியிலிருந்து மாநிலம் வரை அனைத்து உதவிகளையும் செய்ய உறுதியளிப்பதாக பிரதமர் மோடி நேற்று தெரிவித்தார். குற்றவாளிகளுக்கு எதிராக மாநில அரசு கடுமையான நடவடிக்கை எடுக்கும் என்று நம்புவதாகவும் இதுபோன்ற குற்றவாளிகளை ஊக்குவிப்பவர்களும் மன்னிக்கப்பட மாட்டார்கள் என்றும் பிரதமர் மோடி கூறினார்.
இந்நிலையில் இன்று வன்முறை ஏற்பட்ட பகுதியில் பார்வையிட்ட அம்மாநில முதலமைச்சர் மம்தா பனர்ஜி, நவீன வங்காளத்தில் காட்டுமிராண்டிதனம் நடக்கும் என்று நான் ஒருபோதும் நம்பவில்லை என்று தெரிவித்தார். மேலும் இந்த சம்பவத்தில் மிக பெரிய சதி நடந்திருப்பதாக குற்றச்சாட்டிய அவர்,காவல்துறையினர் அனைத்து கோணங்களிலும் விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ளதாக பேசினார்.
ராம்பூர்ஹாட் வன்முறைக்கு காரணமான குற்றவாளிக்கு கடுமையான தண்டனை வழங்கப்படுவதை காவல்துறை உறுதி செய்யும் என்று திட்டமாக கூறினார்.மேலும் இந்த சம்பவத்தில் தவறு செய்திருக்கும் காவல்துறையினரும் தண்டிக்கப்படுவர். சாட்சிகளுக்கு போலீசார் பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும் என்று தெரிவித்த அவர், வீடுகள் எரிந்தவர்களுக்கு வீடுகளை சீரமைக்க 1 லட்சம் ரூபாய் வழங்கப்படும் என்றார். இதனிடையே இந்த வன்முறை சம்பவம் தொடர்பாக திரிணமுல் கட்சியின் உள்ளூர் தலைவர் அனாருல ஷேக்கை கைது செய்யவும் மம்தா உத்தரவிட்டுள்ளார்.