கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த மத்திய அரசு கொண்டுவந்த அனைத்து கட்டுப்பாடுகளும் மார்ச் 31ம் தேதிக்குள் முடிவுக்கு வருவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இதுகுறித்து மாநில அரசுகளுக்கு மத்திய உள்துறை செயலாளர் அஜய் பல்லா கடிதம் எழுதியிருக்கிறார். அந்தக் கடிதத்தில் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த அரசு எடுத்த நடவடிக்கைகளின் பலனாக கொரோனா பாதிப்பு விகிதம் குறைந்திருக்கிறது. அதனைக் கருத்தில் கொண்டு இதுவரை நடைமுறையில் இருந்து வந்த கொரோனா கட்டுப்பாடுகளை இனியும் பின்பற்ற வேண்டிய கட்டாயம் இல்லை என தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் முடிவெடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் தற்போது நடைமுறையில் உள்ள கொரோனா ஊரடங்கு கட்டுபாடுகளுக்கான அவகாசம் நிறைவடைந்த பிறகு, பின்னர் மேலும் நீட்டிக்கப்படாது என்றும், புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்படாது என்றும் மத்திற உள் விவகாரத்துறை கடந்த பிப்ரவரி மாதம் 25 ஆம் தேதி வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிட்டிருந்தது. ஆனால் அதேநேரம் முக கவசம் அணிவது, கைகளை சுத்தப்படுத்துவது போன்றவற்றை மக்கள் சமூகப் பொறுப்புடன் பின்பற்ற வேண்டும் என்றும் கூறப்பட்டிருந்தது.
அதனடிப்படையில் கொரோனா கட்டுப்பாடுகள் வருகிற மார்ச் 31ம் தேதி முதல் நாட்டில் கொரோனா கட்டுப்பாடுகள் முடிவுக்கு கொண்டு வர உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 2020 ஆம் ஆண்டு மார்ச் மாதம் முதல் அமலில் இருந்து வரும் கொரோனா கட்டுப்பாடுகள் , 2 ஆண்டுகளுக்குப் பிறகு முடிவுக்கு வருவது பொதுமக்களிடையே நிம்மதியை ஏற்படுத்தியுள்ளது.