ஆறு பந்துகளில் 8 ரன்கள் எடுக்க வேண்டிய நிலையில், கடைசி விக்கெட்டை இழந்து வங்காளதேசம் 4 ரன்களில் தோல்வியை தழுவியது.
நியூசிலாந்தில் மகளிர் உலக கோப்பை கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. நேற்று நடைபெற்ற 17-வது ஆட்டத்தில் வெஸ்ட் இண்டீஸ்- வங்காளதேசம் அணிகள் மோதின. முதலில் பேட்டிங் செய்த வெஸ்ட் இண்டீஸ் அணியால் 9 விக்கெட் இழப்பிற்கு 140 ரன்களே அடிக்க முடிந்தது. அந்த அணியின் விக்கெட் கீப்பர் ஷெமைன் கேம்ப்பெல் அதிகபட்சமாக ஆட்டமிழக்காமல் 53 ரன்கள் எடுத்தார். பின்னர் 141 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் வங்காளதேசம் வீராங்கனைகள் களம் இறங்கினர்.
வெஸ்ட் இண்டீஸ் வீராங்கனைகளில் நேர்த்தியான பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் வங்காளதேச வீராங்கனைகள் ரன்கள் குவிக்க திணறினர். என்றாலும் குறைந்த இலக்கு என்பதால் பர்கனா ஹோக் (25), நிகர் சுல்தானா (25), சல்மா கதுன் (23) ஆகியோர் குறிப்பிடத்தகுந்த அளவில் ரன்கள் சேர்க்க இலக்கை நோக்கி வங்காளதேசம் சென்றது.
என்றாலும் சீரான இடைவெளியல் விக்கெட்டை இழந்ததால் போட்டியில் பரபரப்பு ஏற்பட்டது. நஹிதா அக்தர் வெற்றிக்காக போராட வங்காளதேச அணி 49 ஓவரில் 9 விக்கெட் இழப்பிற்கு 133 ரன்கள் எடுத்திருந்தது. கடைசி ஓவரில் 8 ரன்கள் தேவைப்பட்டது. முதல் பந்தில் 2 ரன்களும், 2-வது பந்தில் ஒரு ரன்னும் அடித்தார் நஹிதா. கடைசி நான்கு பந்தில் 5 ரன்கள் தேவைப்பட்டது. 3-வது பந்தை எதிர்கொண்ட பரிஹா த்ரிஸ்னா க்ளீன் போல்டாக வங்காளதேசம் 49.3 ஓவரில் 136 ரன்கள் எடுத்து ஆல்அவுட் ஆனது. இதனால் வங்காளதேசம் 4 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. நஹிதா அக்தர் 25 ரன்கள் எடுத்து கடைசி வரை போராடியது வீணானது.