இந்தியா

நாடாளுமன்ற கூட்டத் தொடரின் 2-வது பகுதி இன்று தொடக்கம்- ஜம்மு காஷ்மீர் பட்ஜெட் தாக்கலாகிறது!

59views

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரின் 2-வது அமர்வு இன்று தொடங்குகிறது. இந்த கூட்டத் தொடரில் உக்ரைன் விவகாரம், தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி மீதான வட்டி குறைப்பு உள்ளிட்ட விவகாரங்களை இரு சபைகளிலும் எதிர்க்கட்சிகள் எழுப்பக் கூடும்.

நடப்பாண்டின் நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் கடந்த ஜனவரி மாதம் 31-ந் தேதி தொடங்கியது. ஆண்டின் முதலாவது கூட்டத் தொடர் என்பதால் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் இரு சபைகளில் உரையாற்றினார். இதனையடுத்து பிப்ரவரி 1-ந் தேதி மத்திய பட்ஜெட்டை நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். பட்ஜெட் கூட்டத் தொடரின் முதல் பகுதி கடந்த பிப்ரவரி 11-ந் தேதி நிறைவடைந்தது.

இதனையடுத்து இன்று பட்ஜெட் கூட்டத் தொடரின் 2-வது அமர்வு இன்று தொடங்குகிறது. இந்த கூட்டத் தொடர் அடுத்த மாதம் ஏப்ரல் 8-ந் தேதி வரை நடைபெற உள்ளது. கடந்த முதல் அமர்வானது கொரோனா பரவல் அதிகம் இருந்ததால் இரு சபைகளும் தனித்தனி நேரங்களில் நடத்தப்பட்டன.

நாட்டில் தற்போது கொரோனா பரவல் குறைந்து உள்ளதால் இரு சபைகளில் வழக்கம் போல முற்பகல் 11 மணிக்கு கூடும். இன்று ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசத்துக்கான பட்ஜெட்டை நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்ய உள்ளார்.

இந்த கூட்டத் தொடரில் உக்ரைன் விவகாரத்தில் மத்திய அரசின் நிலைப்பாடு, தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி மீதான வட்டி குறைப்பு, பெட்ரோல் டீசல் விலை அதிகரிப்பு அச்சம் உள்ளிட்டவை குறித்து எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பும். உக்ரைன் விவகாரம், உக்ரைனில் இருந்து இந்தியர்கள் மீட்கப்பட்டது தொடர்பான விவரங்களை தாக்கல் செய்ய எதிர்க்கட்சிகள் வலியுறுத்தக் கூடும்.

அண்மையில் 5 மாநில சட்டசபை தேர்தல்கள் நிறைவடைந்தன. இதில் 4 மாநிலங்களில் பாஜக ஆட்சியை தக்க வைத்திருக்கிறது. பஞ்சாப்பில் மட்டும் ஆம் ஆத்மி ஆட்சியை பிடித்துள்ளது. இந்த சூழ்நிலையில் இன்று கூடும் நாடாளுமன்ற கூட்டத் தொடரில் எதிர்க்கட்சிகளின் நெருக்கடியை மத்திய அரசு எளிதாக எதிர்கொள்ளும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

 

Right Click & View Source is disabled.

error: Content is protected !!