விளையாட்டு

பெண்கள் உலக கோப்பை கிரிக்கெட்: ஆஸ்திரேலியா 2-வது வெற்றி – பாகிஸ்தானை வீழ்த்தியது

103views

12-வது பெண்கள் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி (50 ஓவர்) நியூசிலாந்தில் நடந்து வருகிறது. இந்திய நேரப்படி இன்று காலை மவுண்ட் மாங்கானுவில் 6-வது லீக் ஆட்டம் தொடங்கியது. இதில் ஆஸ்திரேலியா – பாகிஸ்தான் அணிகள் மோதின.

டாஸ் ஜெயித்த ஆஸ்திரேலியா பந்துவீச்சை தேர்வு செய்தது. அந்த அணியின் அபார பந்துவீச்சில் பாகிஸ்தான் திணறியது. பாகிஸ்தானின் அமின் (2 ரன்), நகிதா கான் (9 ரன்), சோகைல் (12 ரன்), நீதாதார் (5 ரன்) ஆகியோர் அடுத்தடுத்து அவுட் ஆனார்கள். பாகிஸ்தான் 44 ரன்னுக்கு 4 விக்கெட்டை இழந்து தடுமாறின.

பின்னர் கேப்டன் பிஸ்மா மகரூப்- ஆலியா ரியாஸ் ஜோடி நிதானமாக விளையாடி சரிவில் இருந்து அணியை மீட்டது. இருவரும் அரை சதம் அடித்தனர். ஆலியா ரியாஸ் 53 ரன் எடுத்து அவுட் ஆனார். பாகிஸ்தான் அணி 50 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 190 ரன் எடுத்தது.

பிஸ்மா மகரூப் 78 ரன் எடுத்து அவுட் ஆகாமல் இருந்தார். ஆஸ்திரேலிய தரப்பில் அலனா கிங் 2 விக்கெட்டும், பெரி, வெலிங்டன், நிகோலா கேரி, மேகன் ஸ்ஷாட் தலா ஒரு விக்கெட்டும் கைப்பற்றினர்.

பின்னர் இலக்கை நோக்கி ஆஸ்திரேலியா விளையாடியது. அந்த அணியின் தொடக்க ஜோடியான ஹீலி-ரேச்சல் ஹெய்ன்ஸ் முதல் விக்கெட்டுக்கு 60 ரன் (10.3 ஓவர்) எடுத்தனர்.

ஹெய்ன்ஸ் 34 ரன்னும், அடுத்து களம் வந்த கேப்டன் லானிங் 35 ரன்னும் எடுத்தனர். அரை சதம் அடித்த ஹீலி 72 ரன்னில் ஆட்டம் இழந்தார். ஆஸ்திரேலியா 34.4 ஓவரில் 3 விக்கெட் இழப்புக்கு 193 ரன் எடுத்தது. இதன் மூலம் 7 விக்கெட் வித்தியாசத்தில் அந்த அ ணி வெற்றி பெற்றது.

பெண்கள் உலக கோப்பை போட்டியில் ஆஸ்திரேலியா 2-வது வெற்றியை பெற்றது. அந்த அணி தொடக்க ஆட்டத்தில் இங்கிலாந்தை 12 ரன் வித்தியாசத்தில் வீழ்த்தி இருந்தது.

பாகிஸ்தான் 2-வது தோல்வியை சந்தித்தது. அந்த அணி தனது முதல் ஆட்டத்தில் இந்தியாவிடம் தோற்றது.

 

Right Click & View Source is disabled.

error: Content is protected !!