விளையாட்டு

ஜடேஜா இரட்டை சதம் அடிப்பதற்குள் டிக்ளேர் செய்தது ஏன்…? மவுனம் கலைத்த ரோஹித் சர்மா

60views

இலங்கை அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் ஜடேஜா இரட்டை சதம் அடிப்பதற்குள் டிக்ளேர் செய்ததற்கான காரணத்தை ரோஹித் சர்மா வெளிப்படுத்தியுள்ளார்.

இந்தியா வந்துள்ள இலங்கை கிரிக்கெட் அணி, இந்திய அணியுடன் இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றுள்ளது.

இந்த தொடரின் முதல் போட்டி மொஹாலி மைதானத்தில் நடைபெற்றது. 4ம் தேதி துவங்கிய இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார்.

இதனையடுத்து முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி, தனது முதல் இன்னிங்ஸில் 8 விக்கெட் இழப்பிற்கு 574 ரன்கள் எடுத்திருந்த போது டிக்ளேர் செய்தது. இந்திய அணியில் அதிகபட்சமாக ரவீந்திர ஜடேஜா 175* ரன்களும், ரிஷப் பண்ட் 96 ரன்களும் எடுத்தனர்.

இதனையடுது தனது முதல் இன்னிங்ஸை துவங்கிய இலங்கை அணி, போட்டியின் இரண்டாம் நாளான நேற்றைய ஆட்டநேர முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 108 ரன்கள் எடுத்திருந்தது.

இதன்பின் போட்டியின் மூன்றாம் நாளான இன்றைய ஆட்டத்தின் துவக்கத்தில் இருந்தே இந்திய அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் இலங்கை வீரர்கள் அடுத்தடுத்தடுத்து விக்கெட்டை இழந்து வெளியேறினார். குறிப்பாக பேட்டிங்கில் 175 ரன்கள் குவித்த ரவீந்திர ஜடேஜா, பந்துவீச்சிலும் 5 விக்கெட் வீழ்த்தியதன் மூலம் வெறும் 174 ரன்களுக்கே இலங்கை அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.

இலங்கை அணி தனது முதல் இன்னிங்ஸில், இந்திய அணி குவித்த பாதி ரன்களை கூட தாண்டாததால் பாலோ ஆன் முறையில், மீண்டும் தனது இரண்டாவது இன்னிங்ஸை துவங்கியது.

இரண்டாவது இன்னிங்ஸிலும் இலங்கை வீரர்களில் இந்திய அணியின் பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் கடுமையாக திணறினர். இலங்கை அணியின் விக்கெட் கீப்பரான நிரோசன் டிக்வெலா இறுதி வரை ஆட்டமிழக்காமல் போராடி 51 ரன்கள் எடுத்து கொடுத்தாலும், மற்ற வீரர்கள் அனைவரும் சொற்ப ரன்களில் விக்கெட்ட இழந்து நடையை கட்டியதால் இரண்டாவது இன்ங்ஸில் 178 ரன்கள் மட்டுமே எடுத்த இலங்கை அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்துள்ளது. இதன் மூலம் ஒரு இன்னிங்ஸ் மற்றும் 222 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது.

இந்த போட்டியின் முதல் இன்னிங்ஸில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி 175 ரன்கள் குவித்த ஜடேஜா, இரட்டை சதம் அடிப்பதற்கு முன் கேப்டன் ரோஹித் சர்மா திடீரென டிக்ளேர் செய்வதாக அறிவித்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. ரசிகர்கள் பலர் ரோஹித் சர்மா மற்றும் ராகுல் டிராவிட்டின் இந்த முடிவை மிக கடுமையாக விமர்சித்தனர். டிக்ளேர் செய்யும் முடிவு தன்னுடையது தான் ஜடேஜாவே கூறியபின்னும் ரசிகர்கள் சில ரோஹித் சர்மாவையே விமர்சித்து வருகின்றனர்.

இந்தநிலையில், ஜடேஜா 200 ரன்கள் அடிப்பதற்குள் டிக்ளேர் செய்வதாக அறிவித்ததற்கான காரணத்தை ரோஹித் சர்மாவே வெளியிட்டுள்ளார்.

இது குறித்து ரோஹித் சர்மா பேசுகையில், “டிக்ளெர் செய்தது நான் எடுத்த முடிவு கிடையாது, அணி நிர்வாகமும், ஜடேஜாவும் சேர்ந்தே இந்த முடிவை எடுத்தனர். ஜடேஜாவின் இந்த முடிவு அவர் சுயநலம் இல்லாத வீரர் என்பதை தெளிவுபடுத்தியுள்ளது, அனைவருக்கும் அணியின் தேவையே முக்கியம், அதற்கு ஏற்பவே முடிவுகளை எடுப்போம்” என்று தெரிவித்தார்.

Right Click & View Source is disabled.

error: Content is protected !!