‘யானைகள் வேட்டையாடுவதை தடுக்க, கேரளா, தமிழகம், கர்நாடக மாநிலங்கள் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும்’ என, சென்னை உயர் நீதிமன்றம் அறிவுறுத்தி உள்ளது.
தந்தத்துக்காக யானைகள் கொல்லப்படுவதை தடுக்கக் கோரிய வழக்கை, நீதிபதிகள் பாரதிதாசன், சதீஷ்குமார் அடங்கிய அமர்வு விசாரித்து வருகிறது.யானை வேட்டை தொடர்பாக பதிவு செய்யப்பட்ட வழக்கை விசாரிக்க, சிறப்பு புலனாய்வுக் குழுவை, நீதிமன்றம் அமைத்தது.சிறப்பு புலனாய்வுக் குழுவில், கேரள மாநில அதிகாரிகளை சேர்ப்பது குறித்து பதில் அளிக்க கோரப்பட்டது.வழக்கு, நேற்று விசாரணைக்கு வந்த போது, கேரள அரசு சார்பில், சிறப்பு பிளீடர் நாகராஜ் நாராயணன் ஆஜராகி, ”மலையாட்டூரில் 18 யானைகள் கொல்லப்பட்ட வழக்கை விசாரித்த, பெரியாறு புலிகள் காப்பக உதவி கள இயக்குனர் மனு சத்யனை, குழுவில் நியமிக்க உள்ளோம்,”என்றார்.
இதையடுத்து, ‘கேரளா, தமிழகம், கர்நாடக மாநிலங்கள் ஒருங்கிணைந்து செயல்பட்டால், யானைகள் வேட்டையை தடுக்க முடியும். கேரள அரசு ஒப்புக் கொண்டால், முக்கிய வழக்குகளை, சிறப்பு புலனாய்வுக் குழுவுக்கு மாற்றலாம்’ என, நீதிபதிகள் தெரிவித்தனர். விசாரணையை, வரும் 18ம் தேதிக்கு தள்ளி வைத்தனர்.யானை செல்ல பாலம்யானைகள் கடப்பதற்கு வசதியாக, எட்டிமடை – வாளையார் ரயில் நிலையங்களுக்கு இடையில், கீழ் பாலம் அமைக்க, 7.49 கோடி ரூபாய்க்கு, தெற்கு ரயில்வே ஒப்புதல் வழங்கியுள்ளதாக, நீதிபதிகளிடம், வழக்கறிஞர் பி.டி.ராம்குமார் தெரிவித்தார்.மேலும், மேட்டுப்பாளையம் – ஊட்டி மலை ரயிலில், பிளாஸ்டிக் தண்ணீர் பாட்டிலுக்கு தடை விதிக்கவும், பயணியருக்கு ரயிலில் தண்ணீர் வழங்கவும் ஆலோசிக்கப்படுவதாக, வழக்கறிஞர் ராம்குமார் தெரிவித்தார்.