முதல்வர் ஸ்டாலினை மத்திய நிதி ஆயோக் அமைப்பின் உறுப்பினர் சரஸ்வத் தலைமையிலான குழுவினர் சந்தித்து ஆலோசனை நடத்தினர்.
சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் ஸ்டாலினை, மத்திய அரசின் நிதி ஆயோக் அமைப்பின் உறுப்பினர் வி.கே.சரஸ்வத், சிறப்பு செயலர் கே.ராஜேஷ்வர ராவ், ஆலோசகர் பி.சாரதி ரெட்டி ஆகியோர் நேற்று சந்தித்து ஆலோசனை நடத்தினர். தமிழக நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன், தலைமைச் செயலர் இறையன்பு, திட்டம், வளர்ச்சித் துறை செயலர் விக்ரம் கபூர், மாநில திட்டக் குழு துணைத் தலைவர் ஜெ.ஜெயரஞ்சன் உள்ளிட்டோரும் இதில் பங்கேற்றனர்.
முதல்வர் உடனான சந்திப்புக்கு பிறகு, நாமக்கல் கவிஞர் மாளிகையில் நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தலைமையில் மாநில திட்டக் குழு, நிதி ஆயோக் உறுப்பினர்களின் ஆலோசனை கூட்டம் நடந்தது.
2022-23 நிதி ஆண்டுக்கான தமிழக அரசின் பட்ஜெட் மார்ச் மாதம் தாக்கல் செய்யப்பட உள்ளது. திமுக ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு, முழுமையான பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவதால், அதில்இடம்பெற வேண்டிய திட்டங்கள், அவற்றுக்கான நிதி ஆதாரங்கள் குறித்து இதில் ஆலோசிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. மாநில திட்டக் குழு சார்பாக துறை ரீதியானபுதிய திட்டங்களை செயல்படுத்தும் வழிமுறைகள் உள்ளிட்டவை குறித்தும் கருத்து தெரிவிக்கப்பட்டுள்ளது. நிதி பற்றாக்குறை இருக்கும் சூழலில், நிதியை பெருக்கும் வழிகள், அதற்கான நடைமுறைகள் குறித்தும் விவாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
முன்னதாக, தொழில் நிறுவனங்கள், விவசாய சங்கங்கள், வணிகர் சங்கங்களின் பிரதிநிதிகளுடன் நிதிஅமைச்சர் பழனிவேல் தியாகராஜன், தொழில் துறை அமைச்சர்தங்கம் தென்னரசு, ஊரக தொழில்துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் ஆலோசனை நடத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.