2008 அகமதாபாத் தொடர் குண்டுவெடிப்பு வழக்கில் 38 தீவிரவாதிகளுக்கு மரண தண்டனை: சிறப்பு நீதிமன்ற தீர்ப்பு – முழு விவரம்
கடந்த 2008-ல் அகமதாபாத் நகரில் நடந்த தொடர் குண்டுவெடிப்பு வழக்கில் 38 தீவிரவாதிகளுக்கு மரண தண்டனை விதித்து சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.
மேலும், 11 பேருக்கு சாகும் வரை ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் கடந்த 2008-ம் ஆண்டு ஜூலை 26-ம் தேதி தொடர் குண்டு வெடிப்பு சம்பவங்கள் நடந்தன. நகரின் பல்வேறு இடங்களில் சுமார் ஒரு மணி நேரத்தில் அடுத்தடுத்து 21 குண்டுகள் வெடித்தன. அரசு மருத்துவமனை, மாநகராட்சி மருத்துவமனை, பேருந்துகள், இருசக்கர வாகனங்கள் மற்றும் கார்களில் குண்டுகள் வெடித்ததால் மக்கள் பீதியில் உறைந்தனர்.
நாடு முழுவதும் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்திய இந்த தொடர் குண்டுவெடிப்பு சம்பவங்களில் மொத்தம் 56 பேர் உயிரிழந்தனர். 246 பேர் படுகாயம் அடைந்தனர். 2002-ம் ஆண்டு குஜராத்தில் கோத்ரா ரயில் எரிப்பு சம்பவத்தை தொடர்ந்து நடந்த கலவரத்தில் நூற்றுக்கணக்கான முஸ்லிம்கள் கொல்லப்பட்டனர். இதற்கு பழிவாங்கும் விதமாக இந்தியன் முஜாகிதீன் தீவிரவாத அமைப்பு, அகமதாபாத்தில் தொடர் குண்டுவெடிப்பை நிகழ்த்தியதாக குற்றம்சாட்டப்பட்டது.
இந்த குண்டுவெடிப்பு சம்பவம் தொடர்பாக மொத்தம் 35 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இந்தியன் முஜாகிதீன் அமைப்புடன் தொடர்புடைய 82 பேர் கைது செய்யப்பட்டனர்.
சம்பவம் நடந்து 3 நாட்களுக்கு பிறகு, ஜூலை 29-ம் தேதி வழக்கில் தொடர்புடைய 3 தீவிரவாதிகள் சூரத் நகரில் சிக்கினர். அதே ஆண்டின் ஆகஸ்ட் 26-ம் தேதி மேலும் 10 தீவிரவாதிகள் கைது செய்யப்பட்டதாக குஜராத் போலீஸார் அறிவித்தனர். 2008 முதல் 2016-ம் ஆண்டு வரை இந்த வழக்கில் மொத்தம் 82 பேர் கைது செய்யப்பட்டனர்.
இந்த வழக்கின் விசாரணை அகமதாபாத் சிறப்பு நீதிமன்றத்தில் 2009-ம் ஆண்டு டிசம்பரில்தொடங்கியது. விசாரணையின்போது ஒருவர் குற்றத்தை ஒப்புக்கொண்டார்.
இதில் 4 பேருக்கு எதிரான விசாரணை இன்னும் தொடங்கப்படாமலே உள்ளது. மீதமுள்ள 77 பேர் மீதும் அகமதாபாத் சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணை நடந்து வந்தது.
இந்த வழக்கில் கடந்த 8-ம் தேதி சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்தது. அதில் 49 பேர் குற்றவாளிகள் என்று சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஏ.ஆர்.படேல் அறிவித்தார். கொலை, தேசத் துரோகம், நாட்டுக்கு எதிராக போர் தொடுத்தது, வெடிப்பொருள் சட்டம் மற்றும் பொது சொத்துகளுக்கு சேதம் விளைவித்தல் உள்ளிட்ட சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டதாக அவர்கள் மீது குற்றம்சாட்டப்பட்டது.
இந்த குற்றங்கள் உறுதி செய்யப்பட்டதால் அவர்கள் 49 பேரும் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டனர். மீதமுள்ள 28 பேர் நிரபராதிகள் எனவிடுவிக்கப்பட்டனர். குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்ட 49 பேருக்கான தண்டனை விவரங்கள் விரைவில் அறிவிக்கப்படும் என்று நீதிபதி தெரிவித்தார்.
இந்நிலையில், தண்டனைவிவரம் நேற்று அறிவிக்கப்பட்டது. குற்றவாளியாக அறிவிக்கப்பட்டவர்களில் 38 பேருக்கு மரண தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார். 11 பேருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.
இவர்கள் 11 பேரும் சாகும் வரை ஆயுள் தண்டனையை அனுபவிக்க வேண்டும் என்று நீதிபதி தனது தீர்ப்பில் கூறினார். தொடர் குண்டுவெடிப்பு நிகழ்ந்து 13 ஆண்டுகளுக்கு பிறகு குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
குண்டுவெடிப்பில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.1 லட்சம் நிவாரணம் அளிக்கவும் படுகாயமடைந்தவர்களுக்கு ரூ.50ஆயிரம், லேசான காயமடைந்தவர்களுக்கு ரூ.25 ஆயிரம் வழங்கவும் நீதிபதி தனது உத்தரவில் குறிப்பிட்டுள்ளார்.
குற்றவாளிகளில் ஒருவரான உஸ்மான் அகர்பத்திவாலா என்பவருக்கு மட்டும் ரூ.2.88 லட்சம் அபராதத்தை நீதிபதி விதித்தார். பல்வேறு பிரிவுகளின்கீழ் அவர் மீது 26 குற்றங்கள் சுமத்தப்பட்டிருந்தன.
இந்த வழக்கின் தீர்ப்பு மொத்தம் 7,015 பக்கங்களை உள்ளடக்கி இருந்தது. 49 பேர் மீதான தண்டனையை வாசிக்க நீதிபதி 24 நிமிடங்கள், 22 விநாடிகள் எடுத்துக் கொண்டார்.
இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்டோர் அகமதாபாத், ஜெய்ப்பூர், கயா, தலோஜா, பெங்களூரு,போபால் ஆகிய நகரங்களில் உள்ள சிறைகளில் அடைக்கப்பட்டிருந்தனர். 13 ஆண்டுகளாக நடந்த இந்த வழக்குகளை மொத்தம் 9 நீதிபதிகள் விசாரித்தனர். 1,163 பேர் சாட்சிகளாக சேர்க்கப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த 2008-ம் ஆண்டு ஜூலை 26-ம் தேதி மாலை 6.14 மணிக்கு ஊடகங்களுக்கு 14 பக்க மிரட்டல் இ-மெயிலை இந்தியன் முஜாகிதீன் அமைப்பினர் அனுப்பி வைத்தனர். 2002 சம்பவங்களுக்கு அடுத்த 5 நிமிடங்களில் பழிவாங்கப் போகிறோம் என்பதுதான் அந்த இ-மெயிலின் சாராம்சமாக இருந்தது.
இதையடுத்து மாலை 6.15, 6.30, 6.45, 6.48, இரவு 7.00, 7.05, 7.10, 7.36, 7.45, 7.54, 8.00 மணி என அடுத்தடுத்து இடைவிடாமல் அகமதாபாத் நகரின் பல்வேறு இடங்கல் தொடர்ச்சியாக குண்டுகள் வெடித்தன.
மொத்தம் 35 வழக்குகளை ஒருங்கிணைத்து ஒரே வழக்காக நீதிபதி படேல் விசாரணை நடத்தினார். ஆயிரக்கணக்கான பக்கங்களை கொண்ட குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கில் 38 பேருக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
இந்திய நீதித்துறை வரலாற்றில் ஒரே வழக்கில் மிக அதிகமானோருக்கு தூக்கு விதிக்கப்பட்டுள்ளது இதுவே முதல் முறையாகும். முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலை வழக்கில் ஒரே நேரத்தில் 26 பேருக்கு தூக்கு தண்டனையை விசாரணை நீதிமன்றம் விதித்திருந்தது.