கொடநாட்டில் கொலை, கொள்ளை நடந்ததை கண்டுபிடித்ததே அதிமுக ஆட்சியில்தான் என அக்கட்சியின் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.
திருச்சி மாநகராட்சி மற்றும் நகராட்சி, பேரூராட்சிகளில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்களை ஆதரித்து எடப்பாடி பழனிசாமி நேற்று பரப்புரை மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், “திமுக அரசு நம் தொண்டர்கள் மீது பொய் வழக்குகளை போட்டு வருகிறது. இது உழைப்பால் உயர்ந்த கட்சி. எதையும் சந்திக்க எங்களுக்கு திராணி உள்ளது. திமுகவின் 9 மாத ஆட்சியிலேயே மக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்” என தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், “திமுகவிற்கு தைரியம் இருந்தால் கூட்டணி இல்லாமல் தேர்தலை சந்திக்க வேண்டும். கொடநாட்டில் கொலை, கொள்ளை நடந்ததை கண்டுபிடித்ததே அதிமுக ஆட்சியில்தான். எங்களது ஆட்சியில் காவல்துறையினருக்கு மதிப்பு இருந்தது. நீட் குறித்து விவாதிக்க நீங்கள் தயாரா என ஸ்டாலின் கேட்கிறார். காங்கிரஸ் கட்சி ஆட்சியில் இருந்தபோதுதான் நீட் என்ற நச்சு விதை கொண்டு வரப்பட்டது. அப்போதே மறு சீராய்வு மனு போட வேண்டாம் என்று முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா கூறினார். ஆனால், அதை கேட்காமல் திமுக, காங்கிரஸ் மனுவை போட்டார்கள். உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு நகல் என்னிடம் உள்ளது. ஆதாரத்துடன்தான் நான் பேசுகிறேன். எப்போது வேண்டுமானாலும் நீட் குறித்து விவாதிக்க நான் தயார்” என எடப்பாடி பழனிசாமி பேசினார்.