ஆஸ்திரேலியா கிராண்ட் ஸ்லாம் ஓபன் டென்னிஸ் தொடர் மெல்போர்ன் நகரில் நடைபெற்று வருகிறது. இன்று ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவிற்கான அரையிறுதிகள் ஆட்டங்கள் நடைபெற்று வருகிறது.
முதலில் நடைபெற்ற அரையிறுதி ஒன்றில் 6-ம் நிலை வீரரான ஸ்பெயின் நாட்டின் ரபேல் நடால், 7-ம் நிலை வீரரான பெரேட்டினியை எதிர்கொண்டார்.
இதில் ரபேல் நடால் 6-3, 6-2 என முதல் இரண்டு செட்டுகளை எளிதாக கைப்பற்றினார். ஆனால், 3-வது செட்டை 6-3 என பெரேட்டினி கைப்பற்றினார். என்றாலும் 4-வது செட்டை 6-3 எனக் கைப்பற்றிய நடால் இறுதிப் போட்டிக்கு முன்னேறினார்.
இறுதிப் போட்டியில் மெட்வதேவ் அல்லது சிட்சிபாஸை எதிர்கொள்கிறார். ஆஸ்திரேலியா கிராண்ட் ஸ்லாம் பட்டத்தை வென்றால் 21 முறை கிராண்ட் ஸ்லாம் பட்டத்தை வென்ற வீரர் என்ற சாதனையை பதிவு செய்வார்.
ரபேல் நடால் இதற்கு முன் 2009-ம் ஆண்டு கிராண்ட் ஸ்லாம் பட்டத்தை வென்றுள்ளார். அதன்பின் தற்போது வரை கைப்பற்றியதில்லை.
ஆனால், பிரெஞ்ச் கிராண்ட் ஸ்லாம் பட்டத்தை 13 முறையும், விம்பிள்டனை இரண்டு முறையும், அமெரிக்க கிராண்ட் ஸ்லாம் பட்டத்தை 4 முறையும் கைப்பற்றியுள்ளார். இறுதியாக கடந்த 2020-ல் பிரெஞ்ச் ஓபனை கைப்பற்றியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.