ரூ.150 கோடியில் காசிமேடு மீன்பிடி துறைமுகம்…புதிய வசதிகளுடன், கூடுதல் படகுகள் நிறுத்த ஏற்பாடு
சென்னை, காசிமேடு மீன்பிடி துறைமுகத்தை, 150 கோடி ரூபாய் செலவில் நவீனப்படுத்தும் பணி துவங்கியுள்ளது.
இதில், நாகூரார் தோட்டத்தில், 500 படகுகளை நிறுத்தும் வகையில் படகு அணையும் தளங்கள் அமைக்கப்பட உள்ளன. மீனவர்களின் குடிநீர் பிரச்னைக்கு தீர்வு காண்பதுடன், பாதாள சாக்கடை திட்டமும் அமல்படுத்தப்படுவதால் மீனவர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர். சென்னை காசிமேடு மீன்பிடி துறைமுகம், 1984 முதல் செயல்பட்டு வருகிறது. இது, 23 மீனவ கிராமங்களைச் சேர்ந்த, ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட மீனவர்களின் வாழ்வாதாரமாக திகழ்கிறது.
இங்கு, 200க்கும் மேற்பட்ட கட்டுமரங்கள், 1,200 விசைப்படகுகள், 2,000க்கும் மேற்பட்ட பைபர் படகுகள் வாயிலாக, மீன்பிடி தொழில் நடக்கிறது. இதன் மூலம், தினமும், 1,000 டன் மீன் வகைகள் கையாளப்படுகின்றன. இங்கிருந்து கேரளா, ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட வெளி மாநிலங்களுக்கும்; துபாய், சிங்கப்பூர், ஜப்பான், கனடா உள்ளிட்ட வெளிநாடுகளுக்கும் மீன் வகைகள் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. இங்கு, காலை, இரவு என இரு நேரங்களிலும் மீன் விற்பனை நடக்கிறது.
அரசுக்கு பொருளாதார வருவாய் ஈட்டித் தரும் காசிமேடு மீன்பிடித் துறைமுகம், 150 கோடி ரூபாய் மத்திய அரசு நிதியில், மாநில அரசு உதவியுடன் நவீனப்படுத்தப்பட உள்ளது. இது, மீனவர்கள், வியாபாரிகள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இதுகுறித்து காசிமேடு மீன்பிடித் துறைமுக உயரதிகாரி கூறியதாவது:காசிமேடு மீன்பிடி துறைமுகத்தை நவீனப்படுத்தப்படுத்துவதற்கான முதல் கட்ட பணிகள் துவங்கியுள்ளன. இப்பகுதி முழுதும் கண்காணிப்பு வளையத்தில் வரவிருப்பதால், கட்டுப்பாட்டு அறையும் அமைக்கப்பட உள்ளது.காசிமேடு மீனவர்களின் குடிநீர் பிரச்னையை தீர்க்கும் வகையில், காசிமேடு துறைமுகத்தில், மூன்று இடங்களில் ஆர்.ஓ., பிளான்ட் அமைக்கப்பட உள்ளது.மீனவர்கள் வார்ப்பு பகுதியில் மேற்கூரை அமைக்கப்பட உள்ளது.
பாதாள சாக்கடை திட்டமும் கொண்டு வரப்பட உள்ளது. மீன்பிடி துறைமுகம் தரம் உயர்த்தப்படுவதால், அங்கு விற்பனை செய்யப்படும் மீன்களின் தரம் உயரும். இதனால், இங்குள்ள மீன்களுக்கு நல்ல விலை கிடைக்கும். அரசுக்கும் வருமானம் பெருகும்.
இவ்வாறு அவர் கூறினார். சிறப்பம்சங்கள் என்ன? காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் தற்போது, ௫௦௦ படகுகள் கட்டுவதற்கான வார்ப்பு தளம் உள்ளது. ஆனால், இங்கு ௨,௦௦௦த்திற்கும் மேற்பட்ட படகுகள் உள்ளதால், இடநெருக்கடியில் படகுகள் கட்டப்படுகின்றன.
இதனால், புயல், கன மழையின் போது, படகுகள் ஒன்றோடு ஒன்று மோதி சேதமடைகின்றன; கடலில் மூழ்கிவிடுகின்றன.சமீபத்திய பருவமழையில் மட்டும் 91 விசைப் படகுகள் சேதம் அடைந்தன. இதற்கு நிவாரண தொகையாக, அரசு சார்பில் ௫.௬௬ கோடி ரூபாய் வழங்கப்பட்டது.இந்நிலையில், மீன்பிடி துறைமுகத்தை நவீனப்படுத்தும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக, நாகூரார் தோட்டம் பகுதியில், 400 படகுகள் நிறுத்தும் அளவில், மெயின் வார்ப்பு தளம் மற்றும் படகு அணையும் தளம் அமைக்கப்பட உள்ளது. இது தவிர, 100 நாட்டு படகுகள் மற்றும் பைபர் படகுகள் நிறுத்த, படகு அணையும் தளமும் அமைக்கப்பட உள்ளது. மீன்பிடி துறைமுகத்தில், சமூக விரோதிகள் நடமாட்டம் மற்றும் சமூக விரோத செயல்கள் நடைபெறுவதை தடுக்க, அப்பகுதி முழுவதிலும், கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட உள்ளன.
இரவு நேரத்தில் மீன் விற்பனை செய்யும் இடங்களில், ராட்சத ஒளிரும் விளக்குகள் அமைக்கப்பட உள்ளன. பழைய காசிமேடு மீன்பிடி துறைமுக காவல் நிலையம் முதல், காசிமேடு துறைமுகம் ஜீரோ கேட் வரை, சுற்றுச்சுவர் அமைக்கப்பட உள்ளது.மீனவர்களுக்கு மீன் ‘ஷெட்டு’கள், மீன் வலை பழுதுபார்க்கும் கூடங்கள், விசைப்படகு பழுதுபார்க்கும் கூடங்கள், மீனவர்களுக்கான ஓய்வறைகள் உருவாக்கப்பட உள்ளன. நாகூரார் தோட்டம் புதிய வார்ப்பு தளம் துவங்கி பழைய மீன் விற்பனை தளம் வரை உள்ள, 6 கி.மீ., சாலை மேம்படுத்தப்பட உள்ளது. மீன் உலர்த்தும் தளம், மீன் பதபடுத்தப்படும் நிலையம் அமைக்கப்பட உள்ளது.