நேரம் மற்றும் இடப் பற்றாக்குறையால் குடியரசு தின விழாவில் 12 ஊர்திக்கு மட்டும் அனுமதி: பாதுகாப்புத் துறை தகவல்
நேரம் மற்றும் இடப்பற்றாகுறை காரணமாகவே குடியரசு தின விழா அணிவகுப்பில் 12 மாநிலங்களின் அலங்கார ஊர்திகளுக்கு அனுமதிவழங்கப்பட்டுள்ளதாக பாதுகாப்புத் துறை தெரிவித்துள்ளது.
இந்தியக் குடியரசு தின விழாவை ஒட்டி டெல்லியில் ராணுவ வீரர்களின் அணிவகுப்பு மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடைபெறுவது வழக்கம். இந்த கலை நிகழ்ச்சியின் போது ஒவ்வொரு மாநிலத்தின் கலாச்சாரத்தையும், பண்பாட்டையும் பிரதிபலிக்கும் விதமான அலங்கார ஊர்திகள் இடம்பெறும்.
இந்நிலையில், வரும் 26-ம் தேதி டெல்லியில் நடைபெறும் குடியரசு தின விழா அணிவகுப்பில் தமிழகம், கேரளா மற்றும் மேற்கு வங்க மாநிலங்களின் அலங்கார ஊர்திகளுக்கு அனுமதி மறுக்கப் பட்டுள்ளது. இது பெரும் அரசியல் விவாதத்தை எழுப்பியிருக்கிறது. இந்த விஷயத்தில் மத்திய அரசு பாரபட்சம் காட்டுவதாக அந்த மாநிலங்கள் குற்றம் சாட்டின.
இதுகுறித்து பாதுகாப்புத் துறை செய்தித் தொடர்பாளர் நம்பிப்போ மரின்மை கூறுகையில், ‘குடியரசு தின விழா அணிவகுப்பில் பங்கேற்கும் அலங்கார ஊர்திகளை நிபுணர்கள் குழு தான் தேர்வு செய்கிறது. அதன்படி, இடப்பற்றாக்குறை மற்றும் நேரமின்மை காரணமாக இந்த முறை 12 மாநிலங்களின் ஊர்திகளுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது. இதில் வேறு எந்த காரணமும் இல்லை’ என்றார்.