நாட்டிலேயே மிகப்பெரிய மாநிலமான உத்தரபிரதேச மாநிலத்தில் அடுத்த மாதம் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது.
பிப்ரவரி 10ஆம் தேதி முதல் மொத்தம் 7 கட்டங்களாக தேர்தல் நடைபெறவுள்ளது.
உத்தர பிரதேசத்தில் ஆளும் பாஜகவுக்கு அகிலேஷ் யாதவ் தலைமையிலான கூட்டணி கடும் சவால் அளித்து வருகிறது. காங்கிரஸ் கட்சியும் களத்தில் உள்ளதால் அங்கு மும்முனை போட்டி நிலவுகிறது. ஆனால் கடந்த தேர்தலைவிட தற்போது அகிலேஷ் யாதவின் கை ஓங்கியுள்ளது.
அதாவது, தேர்தலுக்கு சில நாட்களே உள்ள நிலையில் கட்சி விட்டு கட்சி மாறும் படலங்கள் நடந்து வருகின்றன. ஏற்கனவே பாஜகவில் இருந்து முக்கிய தலைகள், அமைச்சர்கள், ஏம்எல்ஏக்கள் பலரும் அடுத்தடுத்து சமாஜ்வாடி கட்சிக்கு தாவிவிட்டனர். இதனால் சமாஜ்வாடி கட்சியினர் உற்சாகமாக களத்தில் பணியாற்றி வருகின்றனர்.
இந்தியாவின் மிக உயரமான மனிதரும் சமாஜ்வாடியில் இணைந்துள்ளார். 8 அடி 2 அங்குலம் கொண்ட நாட்டின் மிக உயரமான மனிதரான தர்மேந்திர பிரதாப் சிங், சமாஜ்வாடி தலைவர் அகிலேஷ் யாதவ் முன்னிலையில் கட்சியில் சேர்ந்துள்ளார். 46 வயதான தர்மேந்திர பிரதாப் சிங் மிக உயரமான மனிதராக கின்னஸ் உலக சாதனையில் இடம் பெற்றுள்ளார்.
உத்தரபிரதேச மாநிலம் பிரதாப்கர் மாவட்டத்தில் உள்ள நர்ஹர்பூர் காசியாஹி கிராமத்தை சேர்ந்த தர்மேந்திர பிரதாப் சிங் முதுகலைப் பட்டம் பெற்றவர். நாட்டிலேயே உயரமான மனிதர் என பிரபலமான இவர் தேர்தலில் சமாஜ்வாடி கட்சிக்கு ஆதரவாக தீவிர பிரச்சாரத்தில் ஈடுபடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.